கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

வலிகள் எத்தனை இருந்தாலும் வாழ்ந்து காட்டுவேன்!

குடும்பத்துடன் தினேஷ்பாபு
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் தினேஷ்பாபு

என் பிரச்னைகளை எல்லாம் விஜிகிட்ட சொல்லி, ‘பலமுறை யோசிச்சு முடிவெடு’ன்னு சொன்னேன்.

தினேஷ்பாபுவின் புன்னகை ஒன்று போதும், மற்றவர்களின் அன்பை எளிதில் வசப்படுத்த. இவரின் சிரிப்புக்குப் பின்னால் விவரிக்க முடியாத வலிகள் பொதிந்துள்ளன. ஏழு வயதில் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர், உடலளவிலும் மனதளவிலும் சுமந்த வலிகள் ஏராளம். நோய் குணமானாலும், ஆறு மாதங்கள் கோமாவில் இருந்தது உட்பட அடுத்தடுத்த பாதிப்புகள் தினேஷின் இளமைக்காலத்தைக் கசப்பாக்கின. மரணத்தை வென்று வாழ்ந்துகொண்டிருப்பவருக்கு, இன்றும் உடல்நல பாதிப்புகள் தொடர்கின்றன. ஆனால், அதையெல்லாம் கடந்து, தனக்கான பாதையில் நம்பிக்கையுடன் நடை போடுகிறார்.

“தஞ்சாவூர் பூர்வீகம்னாலும், வளர்ந்தது திருச்சியில். ரெண்டாவது படிக்கிறப்போ திடீர்னு என் வலது கன்னத்துல பெரிசா வீக்கம் ஏற்பட்டுச்சு. அது விகாரமா இருந்ததுடன், ஒரு பருக்கை சாதம்கூட சாப்பிட முடியாத அளவுக்கு வேதனைகள் உண்டாச்சு. மருத்துவப் பரிசோதனையில் ரத்தப் புற்றுநோயில் ஒருவகையான அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுக்கிமியா (A.L.L) கேன்சர் கட்டிகள் என் கன்னத்தில் ஏற்பட்டிருப்பது உறுதியாச்சு. அப்போதைய 1988-ல் அது அரிய வகை கேன்சர்.

திருச்சியிலும் சென்னையிலும் சிகிச்சைகள் எடுத்துக்கிட்டேன். சில வருடங்கள் ஓடின. ஹீமோதெரபி சிகிச்சையில் 17 ஊசிகள் போட்டாங்க. சிகிச்சைகள் முடிந்தாலும் என் உடல்ல நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்துச்சு. எனக்கு நோய்த் தொற்று எளிதா ஏற்பட்டுடும். அதனால, கூட்டம் இருக்கிற இடத்துல என்னால இருக்க முடியாது. ஒருமுறை நண்பனின் கர்சீப் வாங்கி என் வியர்வையைத் துடைச்சேன். எனக்கு ஸ்கின் அலர்ஜி உண்டாகி சிகிச்சையெடுக்கும் அளவுக்கு வினையானது. விளையாடும்போது வேகமா ஓடினா ரத்த வாந்தி வரும். எப்போ வேணாலும் நான் இறந்திடலாம்னு பேசினாங்க.

‘தினேஷின் உடலை மல்லிகைப்பூப்போல பார்த்துக்கணும். இல்லைனா, ஏற்படும் விளைவுகளைச் சரிசெய்வது கஷ்டம்!’ - அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்ல சிகிச்சை முடிஞ்சு டிஸ்சார்ஜ் ஆகும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா அம்மா சொன்னதன் அர்த்தம் படிப்படியா புரிஞ்சது. ஸ்கூல், வீடுன்னு எல்லா இடத்துலயும் மத்தவங்ககிட்ட இருந்து சோஷியல் டிஸ்டன்ஸ்லயே இருப்பேன். ஒருகட்டத்துல. இதுதான் விதின்னு மனசை திடப்படுத்திக்கப் பழகினேன். விளையாட முடியலையேன்னு வருத்தப்படாம, படிப்பில் நல்லா கவனம் செலுத்தினேன். பேச்சுப்போட்டி உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டி நிறைய பரிசுகள் வாங்கினேன்” - உரையாடலுக்கு இடைவெளிவிட்டு தண்ணீர் குடிக்கும் தினேஷின் உடல்நிலையில், அதற்குப் பிறகும் சில அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்திருக் கின்றன. அதனையும் மாறாப் புன்னகையுடன்தான் பகிர்கிறார்.

குடும்பத்துடன் தினேஷ்பாபு
குடும்பத்துடன் தினேஷ்பாபு

“ஸ்கூல் டாப்பரா இருந்தேன். எட்டாவது படிக்கிறப்போ என் பார்வையில் சிக்கல் ஏற்பட்டுச்சு. என் கையெழுத்து 90 டிகிரி கோணலா இருக்கும். முன்பு திருச்சியிலுள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் கேன்சருக்கு சிகிச்சை எடுத்துக்கும்போது பயாப்சி டெஸ்ட் எடுக்கறப்போ தவறுதலா வலது கண்ணுக்குப் போற நரம்பு கட்டாகியிருப்பது தெரிஞ்சது. ‘பிரச்னையைச் சரிசெய்ய வாய்ப்பில்லை’ன்னு கண் மருத்துவமனையில் சொல்லிட்டாங்க. அந்தக் குறைபாட்டுடன் வாழப் பழகிட்டேன். ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரணும்னு பத்தாவது பொதுத் தேர்வுக்குத் தயாராகிட்டிருக்கும் போது எனக்கு அம்மை வந்திடுச்சு. சிரமப்பட்டுத் தேர்வெழுதி 360 மார்க் எடுத்தேன். ஃப்ளஸ் டூ-ல மாலைநேர ஸ்டடி டைம்ல வகுப்பறையில் படிச்சுக்கிட்டி ருந்தேன். ஜன்னல் வழியே பலமான காத்து என் முதுகுப் பக்கமா வீச, கீழ சுருண்டு விழுந்தது மட்டும்தான் எனக்கு ஞாபகம் இருந்துச்சு. ஆறு மாசம் கோமாவில் இருந்தேன். சுயநினைவு திரும்பியதும் சொந்தக்காரங்க, ஃபிரெண்ட்ஸ் உட்பட பலரையும் என்னால அடையாளம் காண முடியலை. அதுவரை படிச்சதெல்லாம் நினைவில் இல்லை. மறுபடியும் இன்னொரு வருஷம் ப்ளஸ் டூ படிச்சேன். ப்ளஸ் டூ-ல தேர்ச்சி பெற்றாலும் குறைவான மார்க்தான் எடுத்தேன்” என்பவரின் குரல் தளர்கிறது. பின்னர் தனியார் கல்லூரியில் நிர்வாக ஊழியராக வேலைசெய்துகொண்டே, பி.எஸ்ஸி படித்திருக்கிறார்.

“பொருளாதார பலத்துடன்தான் இருந்தோம். அப்பா ரயில்வே துறையில வேலை செய்தார். என்னால வெளியுலகத்துல இயங்க முடியும்னு நிரூபிக்க, எட்டாவது படிக்கும்போதிலிருந்து பார்ட் டைம் வேலைக்குப் போனேன். என்னால வெயிட் தூக்க முடியாத நிலையிலும் வாகனங்களில் பலசரக்கு ஏற்றி இறக்கும் வேலை செய்தேன். கூடவே, பேப்பர் போடுறது, கூரியர் வேலை, விடியற்காலை ரெண்டரை மணிக்கு எழுந்து பால் சப்ளை செய்றது உட்பட பல வேலைகளைச் செஞ்சேன். பிறர் தயவின்றி என்னால சுயமா வாழ முடியும்னு நிரூபிச்சேன்” என்றவர் தன் காதல் கதைக்கு வருகிறார்.

“டூவீலர் ஷோரூம், ஃபைனான்ஸ் கம்பெனி உட்பட பல நிறுவனங்களில் வேலை செஞ்சேன். நடுவுல கொஞ்ச காலம் தஞ்சாவூர்ல வேலை செய்தப்போ, தினமும் ரயில்லதான் பயணம் செய்வேன். ரயில்வே துறையில காவலரா வேலை செய்த மனைவி விஜி, நண்பர் ஒருவர் மூலமா எனக்கு அறிமுகமானார். நண்பர்களாகிக் காதலர்களானோம்.

என் பிரச்னைகளை எல்லாம் விஜிகிட்ட சொல்லி, ‘பலமுறை யோசிச்சு முடிவெடு’ன்னு சொன்னேன். ‘எது நடந்தாலும் உங்களை நான் பிரிய மாட்டேன்’னு உறுதியா சொன்னாங்க. எட்டு மாதக் காதலுக்குப் பிறகு 2011-ல் எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு” – வெட்கத்தில் முகம் சிவக்கும் இருவரின் இல்லற வாழ்க்கையை மேலும் சிறப்பாக்கியிருக்கிறார், ஐந்து வயது மகள் ஹரிணி!

வலிகளை வென்ற தினேஷ், சுயதொழில், புற்றுநோயாளிகளுக்கு உதவுவது எனத் தனது வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார். “பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கணும்னு நினைச்சேன். ஒண்ணேகால் லட்சம் ரூபாய் சம்பளம் கிடைச்ச வேலையை விட்டுட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனியை ஆரம்பிச்சேன். சில வருஷத்துக்கு முன்னாடி அதில் பெரிய நஷ்டம். ஒருவேளைச் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டேன். அப்போ எதிர்மறை எண்ணங்களால் கலங்கின நிலையில், கடந்தகால என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தேன். உடனே எல்லாக் கசடுகளையும் மனசுல இருந்து அழிச்சுட்டேன். எந்நேரமும் பிசினஸ் சிந்தனையுடன் இருந்து, என் ஸ்டார்ட் அப் பிசினஸை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவந்தேன். இப்போ கொரோனாத் தாக்கத்தால் சிறு சறுக்கல் ஏற்பட்டிருக்கு. ஆனா, முன்பைவிடவும் இப்போ பலமடங்கு நம்பிக்கையுடன் இருக்கேன். சீக்கிரமே பிசினஸில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிடுவேன்” என்கிற தினேஷின் பார்வை மனைவிமீது திரும்பியது.

வலிகள் எத்தனை இருந்தாலும் வாழ்ந்து காட்டுவேன்!

“உடல்நல பாதிப்புகள் உட்பட எதையுமே இவர் என்கிட்ட மறைக்க மாட்டார். அந்தக் குணம்தான் இவர்மேல எனக்கு மதிப்பையும் அன்பையும் உண்டாக்குது. என்ன நடந்தாலும் மனைவியா பக்கபலமா இருப்பேன்னு அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். இவரின் உடல்நிலை பத்தி என் குடும்பத்தார் உட்பட யார்கிட்டயும் இதுவரை நான் சொல்லலை. நம்பிக்கையோடு எல்லா வலிகளையும் கடந்துவந்தார். அதற்கு என் மாமியார் ரொம்பவே ஊக்கம் கொடுத்திருக்காங்க. புற்றுநோயிலிருந்து மீண்ட பலருக்கும் சரியான வேலை கிடைப்பதில்லை. அத்தகைய மனிதர்களுக்கு உதவுபவர், புற்றுநோயிலிருந்து மீண்ட நாலு பேருக்கு வேலை வாங்கிக்கொடுத்திருக்கார். இனியும் நிறைய பேருக்கு உதவுவார்” என்கிற விஜயலட்சுமி, ரயில்வே துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறார்.

வலிகளே வாழ்க்கையானாலும் அதை வைராக்கியத்துடன் கடக்கும் நம்பிக்கை மனிதர் தினேஷ்; அவருக்குத் துணைநிற்கும் விஜி...வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது; அற்புதமானது!