Published:Updated:

`தடுப்பூசி போட தைரியமா முன் வாங்க!' - அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட `மெனுராணி' செல்லம்

மெனுராணி செல்லம்
மெனுராணி செல்லம்

சமையல்கலை நிபுணரான `மெனு ராணி' செல்லம் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து `மெனு ராணி' செல்லத்திடம் பேசினோம்.

ஓராண்டுக்கும் மேலாக உலகையே அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் மீண்டு வர உதவும் தடுப்பூசி எப்போது கண்டறியப்படும் என உலகமே எதிர்பார்த்து வந்தது. இந்நிலையில், ஆராய்ச்சி முடிவின் வெற்றியாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நாடுகளிலும் தொடங்கியிருக்கின்றன.

தடுப்பூசி
தடுப்பூசி

ஆனால், மக்களிடம் தற்போது கொரோனாவைவிட, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்த பயம்தான் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் குறித்து பரவி வரும் தவறான தகவல்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருபவர்களின் எண்ணிக்கையே குறைந்த சதவிகிதத்தில் இருந்து வருகிறது. எனினும், மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறையின் மூலம் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சமையல்கலை நிபுணரான `மெனு ராணி' செல்லம் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து `மெனு ராணி' செல்லத்திடம் பேசினோம்.

அமெரிக்க விதிமுறைகள்
அமெரிக்க விதிமுறைகள்
சிங்கிள் டோஸ், 66% செயல்திறன்... கேம் சேஞ்சர் ஆகுமா ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி?

``நான் தற்போது அமெரிக்காவில் உள்ள என் மகள் வீட்டில் இருக்கிறேன். இங்கு வந்து சில மாதங்கள் ஆகின்றன. என் மகள் அமெரிக்காவில் உள்ள டெய்வர்வில் மெமோரியல் மருத்துவமனையில் தெரெப்பிஸ்டாகப் பணிபுரிகிறார். அவர் கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டார். ஜனவரி 8-ம் தேதி பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டார். பலர் சொல்வது போல் கொரோனா தடுப்பூசி எந்தப் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. தற்போது நானும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கிறேன்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரு மாநிலத்துக்கு ஒரு நாளைக்கு இத்தனை ஊசிகள் என்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதலில் முன்களப் பணியாளர்கள், சீனியர் சிட்டிசன்கள், பொது மக்கள் என்ற வரிசையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் நம்மிடம் சுய ஒப்புதல் படிவம் வாங்கிக் கொள்கிறார்கள். அதன் பின் குறிப்பிட்ட தேதி, நேரம் சொல்லி தடுப்பூசி போட்டுக்கொள்ள வரச் சொல்கிறார்கள். தடுப்பூசி போட்டு அரைமணி நேரத்துக்கு மருத்துவ முகாம் நடைபெறும் இடத்திலேயே இருந்து ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதைப் பரிசோதனை செய்த பிறகே வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதன் பின்பும்கூட ஏதேனும் மெடிக்கல் எமர்ஜென்ஸி இருந்தால் அதற்கும் முன்னேற்பாடுகள் செய்திருக்கிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட 15 நாள்களுக்குப் பிறகு பூஸ்டர் ஊசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மெனுராணி செல்லம்
மெனுராணி செல்லம்
`அந்த உழைப்பை அவமதித்துவிடாதீர்கள்!' - அமெரிக்காவில் முதல் பேட்ச் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஷர்மிளா

எனக்கு இப்போது வயது 75. அமெரிக்க சிட்டிசன் இல்லை. ஆனாலும், இங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதித்தார்கள். கொரோனா தடுப்பூசி போட்டு 10 நாள்களுக்கு மேல் ஆகிறது. எந்த ஒவ்வாமையும் இல்லாமல் இயல்பாக இருக்கிறேன். மக்கள் எல்லோருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்தால்தான் கொரோனாவிலிருந்து மீண்டு நாம் இயல்பான வாழ்க்கை வாழ முடியும்" என்றார் `மெனு ராணி' செல்லம்.

அடுத்த கட்டுரைக்கு