Published:Updated:

நெடுஞ்சாலைகளைக் கடக்கும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களின் மாதவிடாய் துயரங்கள்! #MenstrualHygieneDay

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

பசியைக் கட்டுப்படுத்திவிடலாம், தூக்கத்தைத் தள்ளிப்போடலாம். ஆனால், மாதவிடாயைக் கட்டுப்படுத்த முடியுமா? உடற்சுழற்சி நம் கையில் இல்லையே? நெடுஞ்சாலைகளில் தங்கள் ஊர் நோக்கிப் பயணம் செய்யும் பெண்கள், பயணத்துக்கு இடையே ஏற்படும் மாதவிடாயால் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கொரோனா தொற்றால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைவிட ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என்று கூறும் அளவுக்கு மக்கள் அவதிப்படுகிறார்கள்.

ஊரடங்கில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பவர்களே பல இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில், பிழைப்புத் தேடி, ஊர் விட்டு ஊர் வந்து, ஊரடங்கால் வேலையிழந்து, பட்டினிச் சாவிலிருந்து பிழைத்துக்கொள்ளத் தங்களுடைய சொந்த மாநிலம் நோக்கி விரையும் கூலித் தொழிலாளர்கள் பயணத்தின்போது சந்திக்கும் இன்னல்கள் சொல்லி மாளாதவை.

மாதவிடாய் சுழற்சி
மாதவிடாய் சுழற்சி

அதிலும் பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. குழந்தை ஒரு கையில், மூட்டை முடிச்சுகள் ஒரு கையில், மற்றொரு குழந்தை நடந்து வருவதைக் கண்காணித்துக் கொண்டே பல்லாயிரம் கிலோ மீட்டர்கள், பல நாள் பயணம் என, பெண்கள் ரண வேதனைகளை அனுபவிக்கின்றனர்.

பசியைக் கட்டுப்படுத்திவிடலாம், தூக்கத்தைத் தள்ளிப்போடலாம். ஆனால், மாதவிடாயைக் கட்டுப்படுத்த முடியுமா... உடற்சுழற்சி நம் கையில் இல்லையே... நெடுஞ்சாலைகளில் தங்கள் ஊர் நோக்கிப் பயணம் செய்யும் பெண்கள், பயணத்துக்கு இடையே ஏற்படும் மாதவிடாயால் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் கடைகள் எதுவும் இருப்பதில்லை என்பதால், நாப்கின்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் புலம்பெயர்ந்து செல்லும் குடும்பங்களின் பெண்கள். அப்படியே கடைகள் இருந்தாலும், அந்த ஆடம்பரப் பொருளை வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு காசு ஏது... துணிகளைப் பயன்படுத்தினாலும், ஓய்வறியாமல் கால்களும் உடலும் தேசத்தின் சாலைகளை நடந்து கடக்கும் அந்தப் பயணத்தில், கூடுதலாக அந்த உதிரம் அவர்களுக்கு ஏற்படுத்தும் துன்பங்கள், கொடூரமானவை.

மாதவிடாயின்போது, கழிவறை, தண்ணீர், நாப்கின், ஓய்வு என்று அதை எதிர்கொள்வதற்கான சுகாதாரமான சூழ்நிலை அமையாதது, உலக அளவில் பெண்கள் இறப்பதற்கான காரணங்களில் ஐந்தாவதாக உள்ளது. இனப்பெருக்கப் பாதையில் நோய்த்தொற்று, புற்று நோய் என்று பல நோய்கள் இதனால் வர வாய்ப்புள்ளது.

மாதவிடாய்
மாதவிடாய்

இந்த நிலையில், வெயிலிலும், மழையிலும், வியர்வையிலும், குளிரிலும் தங்கநாற்கரச் சாலைகளில் நடந்துகொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர் பெண்களுக்கு, மாதவிடாய் என்பது கூடுதல் அச்சுறுத்தலாக இருக்கிறது. வீடுசென்று அடையும்வரை கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தைவிட, மாதவிடாய் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பரிதவிப்பு அப்பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது.

பெங்களூரிலிருந்து சண்டிகர் நோக்கிப் பயணிக்கும் லக்ஷ்மி, மூன்று பெண் குழந்தைகளின் தாய். சண்டிகர் நோக்கி நடைப் பயணம் மேற்கொள்ளும் இந்தப் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் தேவை. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை. `துணியை வைத்துக் கொண்டு என்னால் சமாளிக்க முடியும். என் மகளுக்கு நாப்கின் பயன்படுத்திய பழக்கம் என்பதால் அவளால் சமாளிக்க முடியவில்லை. துணியை மாற்றுவதற்கு ஒதுங்கக்கூட இடம் இல்லை. நாங்கள் இன்னும் பல கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்' என்று கவலையுடன் லட்சுமி கூறுகிறார். இது லக்ஷ்மியின் இன்னல் மட்டுமல்ல. சாலைகள், டிரக்குகள், ரயில்கள் என்று இடப்பெயர்வில் அலைந்துகொண்டிருக்கும் பல லட்சம் பெண்களின் வலி.

சில போக்குவரத்துக் கடப்புப் புள்ளிகளில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மூலமாகப் பெண்களுக்குப் பயணப் பெட்டகம் வழங்கப்படுகிறது. அதில் சோப்பு மற்றும் சானிட்டரி நாப்கின்கள் உள்ளன. ஆனாலும் அந்தப் பெட்டகத்தில் இரண்டு நாப்கின்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள், `நெடுஞ்சாலைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு நாப்கின்கள், மொபைல் கழிவறை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார்கள்.

'பேட்மேன்' படம்
'பேட்மேன்' படம்

பல விருதுகளைப் பெற்ற `பேட்மேன்(Padman)' பட நாயகனான அக்க்ஷய்குமார், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு, சில அமைப்புகளுடன் இணைந்து இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்குகிறார். இப்படி ஆங்காங்கே சில உதவிகள் கிடைக்கப்பெற்ற மிகச் சில பெண்கள் தாண்டி, பல லட்சம் பெண்களுக்கும் இந்த ஊரடங்கு இடப்பெயர்வு ஏற்படுத்தியிருக்கும் மாதவிடாய் இன்னல்கள்... கண்டுகொள்ளப்படாத உதிரத் துயரம்.

இன்று... உலக மாதவிடாய் சுகாதார தினம்.

அடுத்த கட்டுரைக்கு