Election bannerElection banner
Published:Updated:

̀இனி ஸ்வாப் டெஸ்ட்டில்கூட கொரோனா தெரியாதா?!' - வாட்ஸ்அப் வதந்தியும் மருத்துவர் விளக்கமும்

COVID-19 Nasal swab test
COVID-19 Nasal swab test ( AP Photo )

``புதிய வகை வைரஸ்களால் இனி கோவிட் டெஸ்ட் (Nasal swab test) செய்தால்கூட தொற்று பாதிப்பு இருந்தால் பாசிட்டிவ் எனக் காட்டாது." என வாட்ஸ்அப் வதந்திகள் பரவிவருகின்றன. உண்மை என்ன?

``கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் வெகுவாக அதிகரித்திருப்பதால் அடுத்தகட்ட ஊரடங்கு நாட்டில் அமல்படுத்தப்படும். தேர்தலை எப்படியாவது நிகழ்த்திவிட வேண்டும் என்பதால்தான் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டு முழுமையாக அகற்றப்பட்டன" என்பன போன்ற தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவிவந்தன. இப்படியாக, கொரோனா தொற்றுப்பரவல் பீதி நாளுக்கு நாள் அதிகரிக்க, தடுப்பூசி போடத் தயங்கியவர்கள்கூட தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகளை இந்த வேளையில் பின்பற்ற அரசும் வலியுறுத்தி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, கொரோனா தொற்று இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் வெகுவாக இருக்கும் என்பது தொடங்கி, பல தகவல்கள் வாட்ஸ் அப்பில் வேகமெடுத்து வருகின்றன.

World Map
World Map
Unsplash

இந்தியாவில் மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை வேறு வேறு நாடுகளைச் சார்ந்த 771 வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 18 மாநிலங்களுக்கும் மேல் இந்தியாவில் மாற்றமடைந்த வைரஸ் வகைகள் பரவியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

``ஆரம்பப் புள்ளியான வுகானில் இருந்து பரவிய வைரஸைவிட, அதிகரித்து வரும் மாற்றமடைந்த வைரஸ் வகைகளால் அதிகளவில் பாதிப்பு ஏற்படும். இப்போது பரவிவரும் மாற்றமடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அறிகுறிகள் வைத்துக்கூட கண்டுபிடிக்க முடியாது.

இவ்வளவு ஏன்... கோவிட் டெஸ்ட் (Nasal swab test) செய்தால்கூட தொற்று பாதிப்பு இருந்தால் பாசிட்டிவ் எனக் காட்டாது. ஏற்கெனவே நோய் தாக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் போட்டவர்களுக்கும் கூட இதனால் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை எந்த வகையிலும் கண்டுபிடிக்கவே முடியாது" என்றெல்லாம் அந்த வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள் பயமுறுத்தின. இதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூரைத் தொடர்பு கொண்டோம். பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார் அவர்.

தொற்று நோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்று நோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

``கொரோனா வைரஸ்கள் மாற்றமடைந்து வேகமாகப் பரவுவது உண்மைதான். பொதுவாகவே, எந்த வகை வைரஸ் கிருமியாக இருந்தாலும் அது பல வகைகளாக உருமாறவே செய்யும். இத்தனை வகை கொரோனா வைரஸ்கள் வேகமாக உருவாவதற்கு முக்கிய காரணம் அவை வேகமாகப் பரவுவதால்தான். அதைப் போல உருமாறும் எல்லா வகை வைரஸ்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய அதிக வீரியம் இருக்கும் எனக் கூற முடியாது. அதே வேளை பாதிப்பே இருக்காது என்றும் சொல்ல முடியாது.

இதற்குத்தான் மாஸ்க் அணிதல் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. முன்பைவிட இறப்பு விகிதம் அதிகரிக்கும் எனக் கூறப்படுவதற்குத் தகுந்த சான்றுகள் இல்லை.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo / Manish Swarup

ஆனால், வேகமாக வைரஸ்கள் பரவுவதால் அதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். நேசல் ஸ்வாப் டெஸ்ட் எடுத்தால் கூட கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது எனும் வாட்ஸ்அப் தகவல் வதந்தியே. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றுப் பரவலை ஓரளவுக்காவது கட்டுக்குள் கொண்டு வர முடியும்" என்கிறார் மருத்துவர் அப்துல் கஃபூர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு