Election bannerElection banner
Published:Updated:

மும்பை: மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா பாதித்த 1,000 பெண்களுக்கு பிரசவம்!

ஆயிரமாவது பிரசவ குழந்தை
ஆயிரமாவது பிரசவ குழந்தை

மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா பாதித்த 1,000 பெண்களுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டு, குழந்தைகளுக்கு எந்தவித கொரோனா தொற்றும் இல்லாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கொரோனா முதல் அலையிலும் சரி, இரண்டாவது அலையிலும் சரி... மும்பை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது கொரோனா பாதித்த கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு பெரும்பாலான மருத்துவமனைகள் அனுமதிக்கவில்லை. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். தனியார் மருத்துவமனைகள் அனைத்தும், `மாநகராட்சி மருத்துவமனைக்குச் செல்லுங்கள்' என்று கூறிவிட்டனர். இதையடுத்து மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நாயர் மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் படையெடுக்க ஆரம்பித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு என்று மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்டபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரசவத்துக்கு வரும் பெண்களுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனையின் அருகில் இருந்த மற்றொரு கட்டடத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் கர்ப்பிணிகளின் பிரசவத்துக்கு ஓர் அறை மட்டும் ஒதுக்கப்பட்டது.

Dr.Ramesh
Dr.Ramesh

ஆனால், அது போதுமானதாக இல்லை. அதையடுத்து மேலும் ஓர் அறை இதற்காக ஒதுக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி முதன்முறையாக கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இது குறித்து இம்மருத்துவமனையின் டீன் டாக்டர் ரமேஷ் கூறுகையில், ``தனியார் மருத்துவமனைகள் கொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்களை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், அதிகமான பெண்கள் பக்கத்து மாவட்டங்களில் இருந்து இங்கு பிரசவத்துக்கு வர ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தோம். இதுவரை கொரோனா பாதித்த 1,000 பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதில் 19 இரட்டைக் குழந்தைகள், ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் என ஆச்சர்ய பிரசவங்களும் அடங்கும்'' என்று தெரிவித்தார்.

இம்மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் சுஷ்மா மாலிக் இது குறித்து கூறுகையில், ``பிரசவம் பார்த்ததில் 1,000 குழந்தைகளில் 50 குழந்தைகளுக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டது. எங்களது அனுபவத்தில் தாயின் கர்ப்பப்பை மூலம் குழந்தைக்கு கொரோனா பரவ வாய்ப்பு இல்லை. குழந்தை பிறந்த பிறகுதான் தாய் மூலம் பரவுகிறது'' என்றார்.

இந்த மருத்துவமனையில் ஆயிரமாவது குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தது. ஸ்நேகா பாட்டீல் என்ற பெண்ணுக்கு இப்பிரசவத்தை மருத்துவர் ஆஸ்தா ரஹஜா மேற்கொண்டார். அழகான ஆண் குழந்தைப் பிறந்தது. இது குறித்து டாக்டர் அஸ்தா கூறுகையில், ``கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது கொரோனா பாதுகாப்பு உடைகள் அணிய வேண்டியிருக்கிறது. இந்த ஆடைகளை அணிந்துகொண்டு பிரசவம் பார்ப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். அதே சமயம் இந்த ஆடைகளை அணிந்து கொண்டு பிரசவம் பார்ப்பதால் பயம் இல்லாமல் வேலை செய்ய முடிகிறது'' என்றார்.

இம்மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைமை மருத்துவர் கணேஷ் ஷிண்டே இது குறித்து கூறுகையில், ``கொரோனா பாதித்த தாய்மார்களிடம் போதிய பாதுகாப்புடன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்தார். டாக்டர்களின் தன்னலமற்ற சேவையால் கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் பயமில்லாமல் இந்த மருத்துவமனைக்கு வந்து பிரசவம் பார்த்துக்கொள்கின்றனர். நாட்டிலேயே இந்த மருத்துமனையில்தான் அதிக எண்ணிக்கையாக கொரோனா பாதித்த 1,000 பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது" என்றார்.

Corona Pandemic
Corona Pandemic
Pixabay

இன்னொரு பக்கம், இம்மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் கடந்த மாதம் மட்டும் 17 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இந்த அளவுக்கு உயிரிழப்புகள் இருந்ததில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனாவால் பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 35,491 ஆண்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இது இறப்பு விகிதத்தில் 70% ஆகும். பெண்கள் 15,172 பேர் இறந்துள்ளனர். இது 30% ஆகும். இரண்டாவது அலை தொடங்கிய பிறகு, அதாவது பிப்ரவரியிலிருந்து மார்ச்வரை 1,616 ஆண்களும், 627 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு