Published:Updated:

`இந்தத் தனிமையிலும் சுதந்திரம்; அவர்களுக்கு அம்மா கிடைத்த சந்தோஷம்!” - மேரிகோமின் டெல்லி நாள்கள்

மேரிகோம்
மேரிகோம் ( https://twitter.com/MangteC )

டெல்லி வீட்டில் வசிக்கும் மேரிகோம் வெளி இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துள்ளார். தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.

‘கொரோனா வைரஸ்’ இந்தப்பெயர் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றன. கொரோனா தாக்கம் காரணமாக சீனா, இத்தாலி போன்ற நாடுகளின் நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சீனாவில் கடந்த சில நாள்களாகப் புதிய நோயாளிகள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என வெளியாகும் செய்திகள் நிம்மதியளிக்கின்றன. ‘கொரோனாவை முன்கூட்டியே அறியும் வசதியோ அதற்கு மருந்தோ இல்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ‘என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம் தன்னைத் தனிமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய டெல்லி வீட்டில் வசிக்கும் மேரிகோம் வெளி இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துள்ளார். தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.

ஜோர்டனில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றுப்போட்டியில் பங்கேற்று ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். ஜோர்டனிலிருந்து இந்தியா திரும்பிய வீரர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை என்பது தெரியவந்தது. கடந்த சில வாரங்களாக மேரிகோம் பொதுஇடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

மேரிகோம்
மேரிகோம்

இதுகுறித்து பேசியுள்ள மேரிகோம்,” இந்தத் தனிமைப்படுத்தலில் சிறந்த விஷயம் என்னவென்றால் நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் என் குடும்பத்தினருடன் நாள் முழுவதும் பொழுதைக் கழிக்கிறேன். யாரும் பயப்படவேண்டாம் . முடிந்தவரை வீட்டில் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள் இது என் அன்பான வேண்டுகோள்.

என் விஷயத்தில் இந்தத் தனிமைப்படுத்துதல் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. தினசரி நான் செய்ய வேண்டிய வேலைகள் குறித்த மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுள்ளேன். தினமும் இப்போது உடற்பயிற்சி செய்கிறேன். ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். குழந்தைகளுடன் விளையாடுகிறேன். இதுமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அம்மா கூடவே இருப்பதால் என்னுடைய குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். 10 முதல் 15 நாள்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அவர்களுடைய அம்மா கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

மேரிகோம்
மேரிகோம்

என் குழந்தைகள் அப்பாவித்தனமாக இந்த வைரஸ் இங்கே இருக்குமா எனக் கேட்கிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது எவ்வளவு தீவிரமானது என எனக்கு தெரியும். சுகாதார வழிமுறைகளை அனைவரும் பின்பற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதை அனைவரும் செய்ய வேண்டும். நம்மைத் தற்காத்துக்கொள்ள இது ஒன்றுதான் வழி. அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு