Published:Updated:

`சென்னையில் எனது `கோவிட்-19’ அனுபவம்!’ -இளம்பெண்ணின் ட்விட்டர் பதிவும் மாநகராட்சியின் நடவடிக்கையும்

கோவிட்-19
கோவிட்-19

எதிரில் இருந்த டீக்கடையைப் பார்த்ததும் எனக்கு அச்சம் ஏற்பட்டது. இந்த வரிசையில் காத்திருந்த மூவர், அந்த டீக்கடையில் எந்த மாஸ்க்கும் அணியாமல் உள்ளே இருந்தனர்.

கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்கிறோம்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில தினங்களுக்கு முன் அளித்த ஸ்டேட்மென்ட் இது. சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பெண் ஒருவர், கொரோனா அனுபவங்கள் என சிலவற்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு, டெல்லி முதல்வரின் கருத்தை நினைவுப்படுத்துகிறது. இளம்பெண்ணின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், அவர்களுக்குத் தேவையான உதவியை செய்துகொடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு
கொரோனா தடுப்பு

அவரது பதிவிலிருந்து, ``நான், சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்துவருகிறேன். எங்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை அம்மாதான் வாங்கி வருவார். அதிகபட்சமாக எங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் வாங்கிவிடுவார். வாரம் இரண்டு முறை மட்டுமே செல்வார். மே 9-ம் தேதி, அவருக்கு சில அறிகுறிகள் தோன்றியது. காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தது. ஜில்லென மாங்காய் சாப்பிட்டதால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என அவரே சமாதானப்படுத்திக்கொண்டார்.

என் சகோதரனுக்கும் இரவில் காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால், மிக சீக்கிரமாக குணமடைந்துவிட்டார். மே 11-ம் தேதி இரவு, அம்மாவின் உடல் வெப்பநிலை 102 டிகிரிக்கு இருந்தது. தனியார் லேப் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். நாங்கள் கொரோனா நெகட்டிவாகத்தான் இருக்கும் என நினைத்திருந்தோம். ஆனால், அவர்கள் அனுப்பிய இ-மெயிலில் பாசிடிவ் என இருந்தது. எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் வீட்டில்மொத்தம் நான்கு பேர்தான் இருக்கிறோம். நான், அம்மா, பாட்டி மற்றும் சகோதரன். எங்களது பாட்டியைக் குறித்துதான் இப்போது மிகுந்த கவலையாக இருக்கிறது. அவருக்கு 85 வயதாகிவிட்டது. நீரிழிவு நோய் மற்றும் இதயப் பிரச்னைகள் இருக்கின்றன.

கோவிட்-19
கோவிட்-19

நான் உடனே தமிழக அரசின் கொரோனா அவசர சேவை எண்ணை தொடர்புகொண்டேன். அவர்கள், அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர். நாங்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கு 45 நிமிடங்களுக்கு மேலாகக் காத்திருந்தோம். புறநோயாளிகள் பிரிவில் ஏற்கெனவே 30 பேர் காத்திருந்தனர். நான் செக்யூரிட்டியிடம் கேட்டபோது, அவர்கள் அனைவரும் கொரோனா நோயாளிகள். மருத்துவமனையில் அனுமதிக்கக் காத்திருக்கின்றனர் என்றார்.

எதிரில் இருந்த டீக்கடையைப் பார்த்ததும் எனக்கு அச்சம் ஏற்பட்டது. இந்த வரிசையில் காத்திருந்த மூவர், அந்த டீக்கடையில் எந்த மாஸ்க்கும் அணியாமல் உள்ளே இருந்தனர். எனது அம்மா மருத்துவரை சந்தித்து, தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்துக் கூறினார். அவரை மருத்துவர் பரிசோதித்த போது, உடல் வெப்பநிலை 99 டிகிரியாக இருந்தது. கோவிட் அறிகுறிகள் மிதமாக இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். வீட்டில் மேலும் 3 பேர் இருப்பதாகக் கூறியதற்கு, அவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டும் சோதிக்கச் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். மாநகராட்சியில் தெரியப்படுத்தச் சொன்னார். அம்மாவுக்கு சில மருந்து மாத்திரைகள் எழுதித்தந்தார்.

Representation image
Representation image

இங்கே, நிறைய மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறது. நிறைய மக்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறது. அவர்கள் யாரும் பரிசோதனை செய்துக்கொள்வதில்லை என மிகவும் சாதாரணமாக அந்த மருத்துவர் எனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினோம். எங்கள் பகுதியை நாளை தூய்மை செய்வார்கள் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டார்.

இவரது பதிவுக்குப் பதிலளித்த சென்னை மாநகராட்சி, நாங்கள் உங்களை தொடர்புகொள்ள முயன்றோம். உங்கள் போனில் இன்கம்மிங் அழைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விரைவில் எங்களது சுகாதாரக் குழு உங்களின் வீட்டுக்கு வருகைதரும். உங்களுக்குத் தேவையானதைச் செய்வோம்” என்று தெரிவித்தனர்.

கொரோனா
கொரோனா

இதையடுத்து, அண்ணா நகர் பகுதிக்கு விரைந்த சுகாதாரக்குழு அந்தப் பெண்ணின் தாயாரை கொரோனா மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த மூவருக்கும் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் தாயார் தற்போது தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில் சிகிச்சைபெற்றுவருகிறார். அவரது உடல்நிலை மோசமானால் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு