Published:Updated:

`நெஸ்ட்லே நிறுவனத்தின் உணவு தயாரிப்புகளில் 60% ஆரோக்கியமற்றவை!' - அதிர்ச்சி ரிப்போர்ட்

Maggi
Maggi ( Facebook / Maggi )

நெஸ்ட்லே தயாரிக்கும் பெரும்பாலான உணவுப் பொருள்கள் மற்றும் தின்பண்டங்களுள் 37% உணவுப் பொருள்கள் மட்டுமே ஆஸ்திரேலிய ஹெல்த் ஸ்டார் ரேட்டிங்கில் 3.5-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாக, அதாவது ஆரோக்கியமானவை என்ற வரையறைக்குள் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது.

நெஸ்ட்லே நிறுவனத்தின் 60%-க்கும் மேற்பட்ட உணவுத் தயாரிப்புகள் ஆரோக்கியமற்றவை என Financial Times ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து தங்கள் நிறுவனத்தின் உணவுப் பொருள்களில் மாற்றங்கள் கொண்டுவரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்காக தயாரிக்கப்பட்ட பிரசென்டேஷன் ஒன்றில்தான் இந்த தகவல் முதன்முதலில் வெளியாகியிருக்கிறது. அதில், நெஸ்ட்லே தயாரிக்கும் பெரும்பாலான உணவுப் பொருள்கள் மற்றும் தின்பண்டங்களுள் 37% உணவுப் பொருள்கள் மட்டுமே ஆஸ்திரேலிய ஹெல்த் ஸ்டார் ரேட்டிங்கில் 3.5-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாக, அதாவது ஆரோக்கியமானவை என்ற வரையறைக்குள் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது.

Nestle
Nestle
Twitter photo: @Nestle

அந்த பிரசன்டேஷனை ஆய்வு செய்துதான் தற்போது Financial Times இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. பொதுவாக உணவுப்பொருளின் தரத்தை ஆய்வு நிர்ணயிப்பதற்காக ஆஸ்திரேலிய ஹெல்த் ஸ்டார் ரேட்டிங்கில் 1 முதல் 5 வரையிலான புள்ளிகள் வழங்கப்படும். இதில் 3.5 புள்ளிகள் பெற்றால் அவை ஆரோக்கியமானவை எனக் கருதப்படும். அதில் 60 சதவிகிதத்திற்கும் மேலான நெஸ்ட்லே உணவுப்பொருள்கள் 3.5-க்கும் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன.

கிட்கட் சாக்லேட், மேகி நூடுல்ஸ், நெஸ்கஃபே காபி ஆகிய பிரபல பிராண்டுகள் நெஸ்ட்லேவுக்கு சொந்தமானவை. மேற்கண்ட இந்த ஆய்வில் அந்நிறுவனத்தின் காபி, குழந்தைகளுக்கான பொருள்கள் ஆகியவை சேர்க்கப்படவில்லை.

மேலும் அந்த பிரசன்டேஷனில், ``நாம் நம்முடைய தயாரிப்புகளில் மிகப்பெரும் மாற்றங்களை செய்திருக்கிறோம். ஆனாலும்கூட நம் தயாரிப்புகளில் பெரும்பான்மையானவை ஆரோக்கியமானது எனக் கருதப்படும் வரையறைக்குள் வராமல் இருக்கின்றன." எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நெஸ்ட்லே தயாரிப்பில் வெளியாகும் பொருள்கள்
நெஸ்ட்லே தயாரிப்பில் வெளியாகும் பொருள்கள்
Nestle.com

இந்த செய்திக்குப் பதில் அளித்துள்ள அந்நிறுவனம், ``ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் தொடர்பான மதிப்பீடுகளில் நிறுவனத்தின் தரத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பல காலமாகவே இந்த முயற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்தியே வருகிறோம். உதாரணமாக எங்களுடைய தயாரிப்புகளில் சர்க்கரை மற்றும் சோடியத்தின் அளவை கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு குறைத்திருக்கிறோம். கடந்த 7 ஆண்டுகளில் மட்டுமே 14-15 சதவிகிதம் அளவுக்கு இவற்றைக் குறைத்திருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளது.

இந்தியா உள்பட பல நாடுகளிலும் உணவுச் சந்தையில் பெருமளவில் அங்கம் வகிக்கும் நிறுவனம் நெஸ்ட்லே. அதனுடைய தயாரிப்புகளின் தரத்திலேயே இந்தளவு சிக்கல்கள் இருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு