`அறிகுறிகள் தெரிவதற்கு 5 ஆண்டுகள் முன்பாகவே..!’ - நம்பிக்கையூட்டும் மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி 2018-ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே ஆண்டில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர்.
மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பாகவே எளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் இதைக் கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்தில் நேற்று தொடங்கியிருக்கும் புற்றுநோய் ஆராய்ச்சி கருத்தரங்கில் அந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 90 நோயாளிகளின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர். புற்றுநோய் செல்களிலிருந்து உற்பத்தியாகும் ஆன்டிஜென்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் செய்யப்படும் ரத்தப் பரிசோதனையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிய முடியும்.
இது தொடர்பாகப் பேசிய ஆராய்ச்சியாளர்கள், ``இந்தப் பரிசோதனையின் துல்லியத்தை, மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது 800 பெண்களின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்து வருகிறோம். இந்த ஆராய்ச்சி வெற்றிபெறும் பட்சத்தில் தற்போது நடப்பிலுள்ள மேமோகிராம் பரிசோதனையைக் காட்டிலும் இந்த எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும். நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பரிசோதனை மூலம் ஆரம்ப காலப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்.

இந்த ரத்தப் பரிசோதனையின் துல்லியத்தை, மேலும் துல்லியமாக்கினால் உலக நாடுகள் அனைத்தும் இதைப் பயன்படுத்தி மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்" என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி 2018-ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அதே ஆண்டில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் அதைக் குணப்படுத்துவதும் அதற்குப் பிறகு தரமான வாழ்க்கை வாழ்வதையும் உறுதி செய்ய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆனால், பலரும் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. நுரையீரல், மலக்குடல் புற்றுநோயையும் இது போன்ற ரத்தப் பரிசோதனையின் மூலம் முன்பாகவே கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.