Published:Updated:

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 69% இந்தியர்கள் தயக்கம்... அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கிட்டத்தட்ட 69% மக்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என்று ‘லோக்கல்சர்க்கிள்ஸ்’ என்கிற சமூக ஊடகத் தளம் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

‘கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி எப்போது வரும்?’ என்கிற எதிர்பார்ப்பில் இந்திய மக்கள் ஒவ்வொருவரும் காத்துக்கிடப்பதாகத்தானே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்? ஆனால், நாம் நினைப்பதுபோல் இல்லை என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.

அதாவது, இந்தியாவில் கிட்டத்தட்ட 69% மக்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள் என்று ‘லோக்கல்சர்க்கிள்ஸ்’ என்கிற சமூக ஊடகத் தளம் ஒன்று தனது கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

Pfizer-BioNTech COVID-19 vaccine
Pfizer-BioNTech COVID-19 vaccine
AP Photo/Frank Augstein, Pool

லோக்கல்சர்க்கிள்ஸ்’ என்கிற சமூக ஊடகத்தளம் `கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமா?’ என்று நாடு முழுவதிலும் உள்ள 242 மாவட்டங்களில் சுமார் 18,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லியவர்களில் 66% பேர் ஆண்கள்; 33% பேர் பெண்கள். அக்டோபர் 15 - 22-ம் தேதிவரை முதல்கட்ட கருத்துக் கணிப்பும், டிசம்பர் 10 - 15-ம் தேதிவரை இரண்டாம்கட்ட கருத்துக் கணிப்பும் நடந்திருக்கிறது.

இந்த இரண்டு கருத்துக் கணிப்புகளின் முடிவில், கிட்டத்தட்ட 69% மக்களுக்கு இதில் தயக்கம் இருப்பது தெரியவந்திருக்கிறது.

எப்போதுதான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பார்களோ என்று இருந்த மக்களில் பெரும்பான்மையினர், இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதற்கான காரணத்தையும் ‘லோக்கல்சர்க்கிள்ஸ்’ ஊடகத்தின் தலைவர் சச்சின் தப்பாரியா முன்வைக்கிறார்.

அதாவது, இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தினால் உருவாகும் பக்கவிளைவுகள் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் தங்களுக்கு வந்துசேரவில்லை என்பதும், இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்பது குறித்த சந்தேகம் தங்களுக்குத் தொடர்ந்துகொண்டே இருப்பதும்தான் தங்களது இந்தத் தயக்கத்துக்கான மிக முக்கியக் காரணம் என்று கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட மக்கள் கூறியதாக சச்சின் தெரிவிக்கிறார். இவை எல்லாவற்றையும் தாண்டி நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக இருந்தால் தங்களைக் கொரோனா தாக்காது என்கிற மக்களின் நம்பிக்கையும்கூட அவர்கள் தடுப்பூசி மீது காட்டுகின்ற தயக்கத்துக்கு மற்றுமொரு காரணமாக உள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

Corona Virus
Corona Virus

‘லோக்கல்சர்க்கிள்ஸ்’ சமூக ஊடகம் இதேபோல சுகாதாரத்துறை அலுவலகர்களிடமும் தனியாகக் கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. அவர்களில் 45% பேர் தடுப்பூசி சந்தைக்கு வந்தவுடன் அதைப் போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 55% பேர் தடுப்பூசி வேண்டும் அல்லது வேண்டாம் என்ற எந்தவொரு முடிவையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை என்பதும் இக்கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது.

கொரோனாவோடு வாழப்பழகிவிட்டோம்!

அடுத்த கட்டுரைக்கு