Published:Updated:

`தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை; மக்கள் பீதியடைய வேண்டாம்!'- அமைச்சர் விஜயபாஸ்கர்

 அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

`கொரோனா வைரஸ்' என்ற பெயர் கடந்த சில நாள்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்குதல் முதன்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் சீனாவில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இதில் 300-க்கும் அதிகமானவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
AP

சீனாவின் வுகான் மாகாணத்தில்தான் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின்னர் 14 நகரங்களுக்கு பரவியுள்ளது. இதைக்கட்டுப்படுத்தும் நோக்கில் சீன அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மாநில அரசுகளையும் மத்திய அரசு அலர்ட் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

`அறிகுறி தெரிய 14 நாள்கள்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!' - கொரோனோ வைரஸால் பதறும் சீனா

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``நேபாளத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசானது நேபாளத்துக்கு அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், பீகார் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஒரு அலர்ட் கொடுத்துள்ளது.

தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது. விமானநிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

 அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

அதேபோல் திருச்சி, கோவை சர்வதேச விமானநிலையங்களிலும் சோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இல்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வைரஸ் குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதேபோல் நம்மிடம் அதற்குத் தேவையான மருந்து மாத்திரைகளும் தயார் நிலையில் உள்ளது. விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் துறைமுகங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு