Published:Updated:

மூளைச்சாவு அடைந்த இளம்பெண்; தடுப்பூசியால் உடல் தானம் நிராகரிப்பு; என்ன நடந்தது?

Hospital (Representational Image)
Hospital (Representational Image) ( Image by Parentingupstream from Pixabay )

மூளைச் சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர் அவரின் குடும்பத்தினர். ஆனால் `பிரேதப் பரிசோதனை’ என்கிற வார்த்தை அதை தவிடு பொடியாக்கிவிட்டது.

ஆக்ராவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதியன்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார். அதன் பின்னர் அவருக்கு காய்ச்சலும் தொடர்ச்சியான தலைவலியும் ஏற்பட்டிருக்கிறது. உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த இளம்பெண்ணின் மூளையில் ஆங்காங்கே ரத்தம் உறைந்து காணப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவரது உடலின் பிளேட்லெட்டின் அளவும் மிக மிகக் குறைவாக இருந்திருக்கிறது.

ஜூன் 14-ம் தேதி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக இளம்பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில், அத்தனை சிகிச்சை முயற்சிகளும் பலனளிக்காமல் ஜூன் 18-ம் தேதி அவர் மூளைச் சாவு அடைந்தார்.

மூளைச் சாவு அடைந்த தங்கள் பெண்ணின் உடல் உறுப்புகளை தானமளிக்க இளம்பெண்ணின் குடும்பத்தினர் முன் வந்தனர். ஆனால் மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட இந்த பாதிப்பு, தடுப்பூசி போட்டதற்குப் பிறகு ஏற்பட்டதா என்பதை பிரேதப் பரிசோதனை மூலம் தெளிவுபடுத்தவேண்டியது அவசியம் என்று கூறிய தேசிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு, (National Organ and Tissue Transplantation Organization (NOTTO - நோட்டோ ) இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை தானமளிக்க அனுமதி மறுத்துவிட்டது.

covid vaccine
covid vaccine
AP Photo/Pavel Golovkin
`புதைப்பதைவிட வேறு உருவத்தில் வாழ்வான்!'- மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலை தானம் செய்த பெற்றோர்கள்

ஆனால் பிரேதப் பரிசோதனைக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதன் பின்னர் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரது உடலைப் பெற்றுக்கொண்டு ஆக்ராவில் இறுதிச் சடங்குகளைச் செய்திருக்கின்றனர்.

தடுப்பூசி செலுத்திய பிறகு ஒருவர் உடலில் எதிரான விளைவுகள் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டால், அந்தத் தடுப்பூசி உடல் உறுப்புக்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றதா என்பதைப் பிரேதப் பரிசோதனை மூலம் தெளிவுபடுத்தவேண்டும். ஒருவேளை தடுப்பூசி போட்டதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உடலின் மற்ற உடல் உறுப்புகளும் இதன்மூலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இப்படி பாதிக்கப்பட்ட உடலின் உறுப்பை ஒருவர் தானமாகப் பெற்றால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தானம் பெற்ற அந்த நபருக்கு ஆரோக்கியச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நோட்டோ அமைப்பைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நோட்டோவின் இந்த முடிவுக்கு பல மருத்துவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக நோட்டோவின் இந்த முடிவு தன்னை அதிர்ச்சியடையவைத்திருப்பதாக, இறந்துபோன இளம்பெண் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தலைமை மருத்துவ நிபுணர் சுபாஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்.

Organ donation - Representational Image
Organ donation - Representational Image
`சாலை விபத்தில் மூளைச்சாவு!’- நான்கு பேருக்கு வாழ்வளித்த வங்காள மாணவர்

``நோட்டோவின் இந்த முடிவால் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் விலை மதிப்பற்ற உடல் உறுப்புகளை நாம் இழந்திருக்கிறோம். இந்த உடல் உறுப்புகள் கிடைத்திருந்தால் பலரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் மூளைச்சாவு அடைந்த தங்கள் வீட்டுப் பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்யவேண்டும் என்று விரும்பிய அந்தக் குடும்பத்தின் எண்ணமும் ஈடேறவில்லை. இந்நிகழ்வு மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு