Published:Updated:

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெண்களின் எண்ணிக்கை குறைவு; என்ன காரணம்?

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளில் பெண்களே அதிகமாக இருப்பதால், ஆரம்பத்தில் ஆண்களைவிடப் பெண்களே அதிகமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். ஆனால்...

இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சதவிகிதம் தொடர்ந்து குறைவாக இருந்து வருகிறது. ஜனவரி 14-ம் தேதி முதல் நம் நாட்டில் தடுப்பூசி டிரைவ் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 2-ம் தேதி வரை இரண்டு டோஸ்களையும் சேர்த்து மொத்தம் 21,85,46,667 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் பல மாநிலங்களில் ஆண்களைவிட பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறைவாகவே இருக்கிறது. இது மட்டுமல்ல, சில மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் குறைவாக இருக்கிறது. அதாவது, 1000 ஆண்களுக்கு 867 பெண்கள் என்ற எண்ணிக்கையில்தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. சத்தீஸ்கர், கேரளா, இமாசலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆண்களைவிட பெண்கள் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Corona Vaccination
Corona Vaccination

மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளில் பெண்களே அதிகமாக இருப்பதால், ஆரம்பத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். ஆனால், ஜனவரி 30-ம் தேதிக்குப் பிறகு நிலைமை மாறி, பெண்களை விட ஆண்கள் அதிக என்ணிக்கையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

பெண்களைவிட, ஆண்கள் வீட்டை விட்டு வெளியே வருவது அதிகமாக இருப்பதால், தடுப்பூசி மையங்களைப் பார்க்கிறார்கள்; போட்டுக்கொள்கிறார்கள். தவிர, பெரும்பாலான ஆண்கள் தாமாகவே சென்று தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். ஆனால் பெண்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் தனியாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

வேலை பார்ப்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வேலைபார்க்கும் இடங்களிலேயே தடுப்பூசி போடப்படுவதால், பெண்களை விட ஆண்களுக்கே தடுப்பூசி போடும் வாய்ப்பும் அதிகமாக ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

வீடுகளில் இருக்கிற பெண்கள் பலரிடம் ஸ்மார்ட்போன் இருப்பதில்லை. உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 2019-20-க் கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, பீகாரில் வெறும் 51 சதவிகித பெண்கள் மட்டுமே செல்போன் வைத்திருக்கிறார்கள். அவர்களிலும் 49 சதவிகிதம் பேர் குறுஞ்செய்தி மட்டுமே படிக்க முடிந்த பேசிக் செல்போன்தான் வைத்திருந்தார்கள். இப்படிப்பட்ட பெண்களால், இணையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காகப் பதிவு செய்ய முடிவதில்லை.

corona
corona
AP Photo / Channi Anand
Covid Questions: உடல் பருமன் இருப்பவர்களுக்கு கொரோனா ஆபத்து அதிகமா?

தவிர, கர்ப்பிணிகளுக்கு இந்தியாவில் இதுவரை தடுப்பூசி போட அனுமதியளிக்கப்படவில்லை. பாலூட்டும் தாய்மார்களுக்கும் கடந்த வாரம் முதல்தான் தடுப்பூசி போட ஆரம்பித்திருக்கிறோம். இவையெல்லாம்தான் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களின் சதவிகிதம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் என்கிறார்கள் மருத்துவ பணியாளர்கள்.

இந்த வருடம் டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிடுவோம் என்று உறுதியளித்துள்ள அரசு இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு