Published:Updated:

`ஓவர் திங்க்கிங் உடம்புக்கு ஆகாது பாஸ்’- அதீதமாகச் சிந்திப்பதால் வரும் பிரச்னைகளும் தீர்வுகளும்...

அதீத சிந்தனை
அதீத சிந்தனை

யாருக்கும் கேட்காத சத்தம் தனக்கு மட்டும் கேட்பது போன்ற 'ஆடிட்டரி ஹாலுசினேஷன்', யார் கண்ணுக்கும் தெரியாத உருவம் தனக்கு மட்டும் புலப்படுவது போன்ற 'விஷுவல் ஹாலுசினேஷன்' போன்ற பாதிப்புகள் அதீத சிந்தனையால் ஏற்பட வாய்ப்புள்ளது.

"ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்; அன்பே உன் பேரைச் சிந்தித்தால்..." அழகான பாடல் வரிகள். உண்மையிலேயே நமக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி சிந்திக்கும்போது மனசு லேசாகும் என்பது நிஜம்தான். அது, காதலியின் பெயராக இருந்தாலும் சரி; கல்லூரி நாள்களின் நினைவாக இருந்தாலும் சரி.

அதீத சிந்தனை
அதீத சிந்தனை

ஆனால், பெரும்பாலும் நாம் சிந்திப்பதெல்லாம், தேவையில்லாத விஷயங்களைப் பற்றியே இருக்கும். திடீர் திடீரென்று எதைப் பற்றியோ ஆழமாகச் சிந்தித்து, நன்றாக இருக்கும் மனநிலையைக் குழப்பிக்கொள்வதே நம்மில் பலருக்கு வழக்கம். இதுபோன்ற தேவையில்லாத அதீத சிந்தனைகள், நம் அன்றாட வாழ்க்கை முறையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், மனநலனையும் உடல்நலனையும்கூட சீர்குலைக்கும்.

எனவே, அதீதமாகச் சிந்திப்பதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் பற்றியும் மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம்.

"மனிதரைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மூளையில் 12 ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன. இதில் எந்த எண்ணம் நம் வாழ்க்கைக்கு அவசியம், எது நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும் என்று பிரித்துணர்வதிலேயே நம் திறமை உள்ளது.

மனநல மருத்துவர் அசோகன்
மனநல மருத்துவர் அசோகன்

ரெனே டேக்கார்ட் என்ற பிரெஞ்சு தத்துவ அறிஞர், "நான் சிந்திக்கிறேன்; சிந்திப்பதால் நான் வாழ்கிறேன்" என்று கூறியுள்ளார். எனவே, சிந்தனை என்பது அவசியமான ஒன்று தான். ஆனால், அந்தச் சிந்தனைகள் நம் நேரத்தை வீணடிக்காத, பயனுள்ள விஷயங்களாக இருக்க வேண்டும்.

விலங்குகளோடு ஒப்பிடுகையில், நாம் மேம்பட்டு சிந்திக்கும் திறன்கொண்ட மூளை அமைப்பைப் பெற, ஏறக்குறைய ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகின. மனிதனின் மூளையில் உள்ள 'ப்ரீஃப்ரான்டல் கார்டெக்ஸ்' என்ற பகுதியே மனிதனின் மனதில் உருவாகும் ஆசைகள், ரசனைகள், சிந்தனைகளை உருவாக்குவதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

`காபி டே' சித்தார்த்தா தற்கொலை முதல் தீபிகாவின் அழுகை வரை! - 2019-ன் உளவியல் சிக்கல்கள்

குழந்தைகளின் எண்ணங்கள், 'முதல் நிலை சிந்தித்தல்' எனப்படும். இந்த நிலையில் பார்க்கும் அனைத்தையும் உண்மையென நம்புவோம். இதற்கு அடுத்த நிலை, 'இரண்டாம் நிலை சிந்தித்தல்' எனப்படும். இந்த நிலையில் உவமைகளைப் பிரித்து பொருள் உணரும் அளவுக்கு நம் சிந்திக்கும் திறன் மேம்பட்டிருக்கும். எனவே, நம் ரசனைகள் குழந்தைகள் போல இருக்கலாமே தவிர, சிந்தனைகள் பக்குவம் இல்லாமல் இருக்கக் கூடாது.

அதீத சிந்தனை
அதீத சிந்தனை

எண்ணங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றவை என்றால், எண்ணங்கள்தான் நம் வாழ்க்கையை உருவாக்குகின்றன. எண்ணங்கள் வார்த்தைகளாகி, செயலாக மாறுகின்றன. ஒருவரின் நடத்தைகள்தான் அவரின் வாழ்க்கையாகக் கருதப்படுவதால், நாம் என்ன சிந்திக்கிறோம் என்பதில் எப்போதும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

நாம், ஒரு சினிமாவுக்குச் செல்கிறோம். அந்தப் படத்தின் கதாநாயகன் அல்லது கதாநாயகியை நமக்குப் பிடித்துவிட்டது என்றால், நம்மை அவர்களாகவே நினைத்து சிந்தித்து மகிழ்வது தவறில்லை. எதுவரையில்..? படம் முடியும் வரையில். படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியில் வந்த பிறகும் நம்மை அவர்களாகவே நினைக்கும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது.

நாம், சாலையில் தனியாக நடந்துசென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று வந்த ஒருவன் கத்தியைக் காட்டி மிரட்டும்போது, அவனிடமிருந்து எப்படி தப்பித்துச் செல்லலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, சினிமாவில் காதாநாயகன் செய்தது போல அவனைத் திருத்துகிறேன் என்று சென்றால், நிலைமை என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள்! எனவே, எப்போதும் பிராக்டிக்கலாக யோசிக்க வேண்டும்.

அதீத சிந்தனை
அதீத சிந்தனை

புத்தகம் படிப்பது என்பது ஆரோக்கிய சிந்தனைக்கு வழிவகுக்கும். கட்டுரைகளைவிட கவிதைகளை அதிகம் வாசிக்கும்போது, நமது ரசனையும் சிந்திக்கும் திறனும் மேம்படும். இதுபோன்ற ஆரோக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தும்போது, தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடமே இருக்காது.

அதிகம் பேசும் பெண்... அதை  விரும்பாத ஆண்... எது தவறு?! - ஓர் உளவியல் பதில்

ஒருவர், தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அதீதமாகச் சிந்தித்துக்கொண்டே இருக்கும்போது, அவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது, ஆளுமை சார்ந்த குறைபாடாகவும் மாறலாம். யாருக்கும் கேட்காத சத்தம் தனக்கு மட்டும் கேட்பது போன்றும் , யார் கண்ணுக்கும் தெரியாத உருவம் தனக்கு மட்டும் புலப்படுவது போன்றும்"ஆடிட்டரி அண்ட் விஷுவல் ஹாலுசினேஷன்" போன்ற பாதிப்புகள் அதீத சிந்தனையால் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதீத சிந்தனை
அதீத சிந்தனை

இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளானவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்று 'சைக்கோ தெரபி' சிகிச்சை தரலாம். இதற்கான மாத்திரைகளையும் மனநல மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக்கொள்ளலாம்.

எண்ணங்கள், சூழ்நிலையைப் பொறுத்து அமைகின்றன. எனவே, சில நேரங்களில் அவை உங்கள் எஜமானராகவும் இருக்கலாம்; சில நேரங்களில் அடிமையாகவும் இருக்கலாம். நமக்குத் தோன்றும் சிந்தனைகளை எந்தச் சூழலில் எப்படிக் கையாள்கிறோம் என்பதிலேயே நம் வாழ்க்கை அடங்கியுள்ளது" என்றார், மனநல மருத்துவர் அசோகன்.

அதீத சிந்தனை
அதீத சிந்தனை

ஆக, 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'. அதீதமாகச் சிந்திப்பதும் ஆபத்துதான். எனவே, நாம் எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், எப்படி சிந்திக்கிறோம் என்பதில் கவனம் தேவை மக்களே!

அடுத்த கட்டுரைக்கு