Published:Updated:

கொரோனா: `0.34% நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் சிகிச்சை! - மத்திய சுகாதாரத்துறை

வென்டிலேட்டர்
வென்டிலேட்டர்

`நாட்டில் மிகக் குறைவான சதவிகிதத்தில் நோய் பாதிப்பும், குறைவான இறப்பு சதவிகிதமும் இருக்கக் காரணம், மருத்துவத் துறையின் சிறப்பான செயல்பாடும் முயற்சிகளும்தான்' என்று கூறியுள்ளனர் அதிகாரிகள்.

இந்தியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதில் ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் குணமாகிவிட்டனர். இப்போது இருக்கும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 3.4 லட்சம். அதில், 0.34% நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும் 1.9% பேர் ஐசியு-விலும், 2.8% பேர் ஆக்ஸிஜன் சப்போர்ட் படுக்கைகளிலும் சிகிச்சையில் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள இந்த டேட்டா, கொரோனா குறித்த அச்சத்தை தவிர்க்கும் விதமாக இருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மேலும், 'அறிகுறியற்று மற்றும் மிகச் சில அறிகுறிகளுடன் கோவிட்-19 நோய் பாதிப்புக்கு உள்ளான சுமார் 80% பேருக்கு வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுபோல் இவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதன் மூலம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களிடம் கவனம் செலுத்த முடிகிறது. இதனால் மருத்துவமனைப் படுக்கைகள் தேவையானவர்களுக்குக் கிடைக்கவும் வழி கிடைக்கிறது.

இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6.35 லட்சமாக உள்ளது. நம் நாட்டில் மிகக் குறைவான சதவிகிதத்தில் நோய் பாதிப்பும், குறைவான இறப்பு சதவிகிதமும் இருக்கக் காரணம், மருத்துவத் துறையின் சிறப்பான செயல்பாடும் முயற்சிகளும்தான்' என்று கூறியுள்ளனர் அதிகாரிகள்.

covid-19 infection
covid-19 infection

சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 'இந்தியாவில் 1,383 கோவிட் தீவிர சிகிச்சை மருத்துவமனைகள், 3,107 கோவிட் சிகிச்சை மையங்கள் மற்றும் 10,382 கோவிட் மையங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கின்றன். இவற்றில் மொத்தம் 46,673 ஐசியு படுக்கைகள் மற்றும் 21,848 வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன. மாஸ்க் மற்றும் பிபிஇ கிட்களுக்கு பற்றாக்குறை இல்லை' என்று கூறியிருக்கிறது சுகாதார அமைச்சகம்.

அடுத்த கட்டுரைக்கு