ஹெச்.ஐ.வி கலந்த ரத்தம் செலுத்தியதால் நோயாளி இறந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், உறவினர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த மொஹாலியை சேர்ந்த மருத்துவமனையின் மனுவை, உத்தரகாண்ட் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தள்ளுபடி செய்தது.
உத்தரகாண்ட் மாநிலம் சஹாரன்பூரை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக 2014-ம் ஆண்டு முதல், 2017 வரை சிகிச்சை எடுத்துக் கொண்டார். மொஹாலியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்ற மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி மருத்துவமனையின் ரத்த வங்கியில் இருந்து ரத்தம் ஏற்றப்பட்டது.

எனினும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி, டேராடூனில் உள்ள சினர்ஜி அறிவியல் கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது இறப்புக்கு காரணம், ஹெச்.ஐ.வி. என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்து அந்த இளைஞரின் மனைவி அதிர்ச்சியடைந்தார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது பலகட்ட ரத்தப்பரிசோதனைகள் நடைபெற்றன. அப்போது கணவருக்கோ, தனக்கோ ஹெச்.ஐ.வி தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த அவரின் மனைவி, இந்த விவகாரம் குறித்து மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
மொஹாலியில் உள்ள மேக்ஸ் சூப்பர் மருத்துவமனையில் அலட்சியமாகச் செயல்பட்டு, ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தம் செலுத்தியதால் நோயாளி இறந்தது, குழுவின் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, தனது குடும்பத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்கக்கோரி, இறந்த நோயாளியின் மனைவி 2017-ம் ஆண்டு அக்டோபரில் நீதிமன்றத்தை அணுகினார். இவ்வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பின்னர், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் தீர்ப்பளித்த நீதிமன்றம், `பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு 30 நாள்களில் மருத்துவமனை தரப்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு தர வேண்டும். உரிய காலத்தில் வழங்கத் தவறினால் 9 சதவிகித வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், உத்தரகாண்ட் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்த குறைதீர் ஆணையம், பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டை மருத்துவமனை வழங்க வேண்டுமென்பதை உறுதி செய்தது. ஹெச்.ஐ.வி கலந்த ரத்தம் செலுத்தியதால் உயிரிழந்தவருக்கு 10 வயதில் மகள், 7 வயது மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.