Published:Updated:

மாதவிடாய் விடுமுறை... அது நம் உரிமை!

மாதவிடாய் விடுமுறை
பிரீமியம் ஸ்டோரி
மாதவிடாய் விடுமுறை

விடுதலை நாள்கள்

மாதவிடாய் விடுமுறை... அது நம் உரிமை!

விடுதலை நாள்கள்

Published:Updated:
மாதவிடாய் விடுமுறை
பிரீமியம் ஸ்டோரி
மாதவிடாய் விடுமுறை

ந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு வழங்கல் நிறுவனமான ஸொமேட்டோ, தன் நிறுவனத்தில் பணியாற்றுகிற பெண்களுக்கு, வருடத்துக்கு 10 நாள்கள் மாதவிடாய் விடுமுறையாக அறிவித்திருக்கிறது. அதுவும் சம்பளத்துடன். மாதவிடாய் விடுமுறைக்காக விண்ணப்பிப்பதற்கு பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்றும் அந்நிறுவனம் தன் அறிவிப்பில் அறிவுறுத்தியிருக்கிறது, இந்த மாதவிடாய் விடுமுறை தொடர்பாக, சில பெண் ஆளுமைகளிடம் கருத்து கேட்டோம்.

மாதவிடாய் விடுமுறை... அது நம் உரிமை!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாதவிடாயை இயல்பாகக் கடப்பதற்கான வசதிகளை மேம்படுத்துங்கள்!

‘மாதவிடாய்’ ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன்

‘‘ஸொமேட்டோவின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு, வலி ஏற்படலாம். சில நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றலாம். இந்த விடுமுறை அதற்கு உதவியாக இருக்கும். மற்றொருபுறம் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் வசதிகளை மேம்படுத்துவதற்கான மாற்றங்களும் நடைபெற வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஒரு பிரச்னையே கிடையாது. பொதுக் கழிவறைக்குச் சென்றாலும் நாப்கின் மாற்றுவதற்கு அனைத்து வசதிகளும் இருக்கும். அலுவலகத்தில் ஓய்வெடுக்க அனுமதியும் இடமும் கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற வசதிகளை நமது நாட்டிலும் உருவாக்க முயல வேண்டும்.

மாதவிடாய் விடுமுறை... அது நம் உரிமை!

இங்கே அனைத்துப் பெண்களுக்கும் கழிவறை வசதிகளே இல்லாத நிலைதான் இன்னும் இருக்கிறது. பயன்பாட்டில் இருக்கும் கழிவறைகளிலும், மாத விடாய் நேரத்தில் பெண்கள் நாப்கின் மாற்றச் செல்லும்போது அதை எங்கே வைப்பது என்று தெரியாது. பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் ஃபிளஷ் செய்யும் பெட்டி அல்லது மேற்கத்திய கழிவறைகளின் கமோட்டின் மீது வைத்துப் பயன்படுத்த வேண்டியுள்ளது. நாப்கின் தவறி தண்ணீரில் விழுந்தால் மாற்ற முடியாது. தரையில் விழும்பட்சத்தில் அதைப் பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

கழிவறைகளில் நாப்கினை வைத்துப் பயன்படுத்துவதற்கு சிறிய அலமாரி வைக்க வேண்டும் என்ற மாற்றத்தையாவது உடனடியாக உருவாக்க வேண்டும். மாதவிடாய் காலத்தை இயல்பாகக் கடப்பதற்கு பெண்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மேம் படுத்துவதே நிரந்தரத் தீர்வாக இருக்கும். தேவையான வசதிகள் அனைத்தும் இருந்தால், மாதவிடாய் விடுப்பு தேவைப்படாத ஒன்றாகவே போய்விடும். மாதவிடாய் காலத்துக்கு விடுப்பு வழங்கியதைப் பற்றிப் பேசும்போது, 40 சதவிகிதப் பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்தும் நிலையில்தான் இன்னமும் நம் நாடு இருக்கிறது என்ற நிதர்சனத்தையும் மறக்கக் கூடாது.’’

வலியோட வேலைபார்க்கிறது பழகிடுச்சு...

சின்னத்திரை தொகுப்பாளர் அர்ச்சனா

“ஸொமேட்டோ அறிவிப்பு வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஆனா, அந்த விடுமுறை நேரத்திலும் வீட்டு வேலைகளைச் செய்றதுலதான் பெண்கள் கவனம் செலுத்துவாங்க என்பதுதான் நிதர்சனம். வேலைக்குப் போற, போகாத எல்லாப் பெண்களின் நிலையும் இதுதான். சின்னத்திரையைப் பொறுத்தவரை சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சி என எல்லாவற்றுக்கும் ஒதுக்கப்படும் பட்ஜெட் குறைவுதான்.

நான் வேலை செய்யும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒரே நாள்ல மூணு எபிசோடுவரை ஷூட்டிங் நடக்கும். கிட்டத்தட்ட 18 மணிநேரம்வரை இடைவிடாம வேலை செய்யணும். அதுவும் பெரும்பாலும் நின்னுட்டேதான். நடுவுல சாப்பிடக்கூட 10 நிமிஷம் தான் பிரேக் கிடைக்கும். ப்ரீ மென்ஸ்ட்ருவல் ஸ்ட்ரெஸ்ஸால எனக்கு மனஅழுத்தம் வர்றதும், அந்த நேரங்கள்ல நான் அழறதும் வாடிக்கை. அந்த வருத்தமெல்லாம் ஷூட்டிங்ல இருக்கிறப்போ வேலை மேல இருக்கிற ஈடுபாட்டுல காணாமல் போயிடும். வீடு திரும்பினதும் வலிதாங்க முடியாம அழ ஆரம்பிச்சிடுவேன். இப்படியே பழகிப்போச்சு.

எங்க ஃபீல்டுல மாதவிடாய் உட்பட என்ன உடல் வலி இருந்தாலும் அவற்றையெல்லாம் முகத்துல காட்டிக்கவே கூடாது. செட்டுக்குள்ள போயிட்டா ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன் எல்லாத்துலயும் சிரிச்ச முகத்தோடதான் இருக்கணும். விருது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறது இன்னமும் சவால். பலமணிநேரத்துக்கு மேடையில நின்னுகிட்டே இருக்கணும். தொண்டை வறண்டாலும் சொட்டு சொட்டாதான் தண்ணீர் குடிக்க முடியும். நடுராத்திரி வரைக்கும் ஃபங்ஷன் நடக்கிறப்போ பசியில் உயிர் போகும்.

அந்த மாதிரியான சூழல்ல மாதவிடாயும் இருந்து, நாப்கின் மாத்தவும் பாத்ரூம் போகவும் முடியாம எத்தனையோ முறை தவிச்சிருக்கேன். ஆனா, துளிக்கூட முகத்தைச் சுளிக்காம சிரிச்ச முகத்தோட எல்லா விருந்தினர்களையும் அணுகணும். சீரியல்ல மெயின் கதாபாத்திரங்கள்ல நடிக்கிற பெண் கலைஞர்களுக்கு மாசத்துல 20 - 25 நாள்கள் ஷூட்டிங் இருக்கும். மாதவிடாய் நேரங்கள்ல எங்களைவிட அவங்க நிலைமை இன்னும் கஷ்டம். மாதவிடாய் வலியோட வேலைபார்க்கிறது எங்களுக்குப் பழகிடுச்சு.’’

தொகுப்பாளர் அர்ச்சனா , இளவேனில் வாலறிவாளன் , மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் விஜயலட்சுமி
தொகுப்பாளர் அர்ச்சனா , இளவேனில் வாலறிவாளன் , மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் விஜயலட்சுமி

மாதவிடாய் நாள்களிலும் போட்டிகளில் பங்கேற்கிறேன்!

துப்பாக்கிச் சுடும் வீராங்கனை

இளவேனில் வாலறிவாளன்

``ஆண்டுக்கு 10 நாள்கள், மாசத்துக்கு ஒருநாள் மாதவிடாய் விடுமுறையெல்லாம் பெரிசா பயனளிக்காது என்பதே என் கருத்து. மாதவிடாய் காலங்களில் ஒருநாள் விடுமுறை கொடுத்துட்டா அடுத்த நாள் வலியும் அசௌகர்யமும் இருக்காதுன்னு சொல்ல முடியாது. இதைக் காரணம் காட்டி ஒரு மாசத்துல நான்கைந்து நாள்கள் பெண்கள் விடுப்பு எடுத்தால் அதை யாரும் ஏத்துக்க மாட்டாங்க.

மாதவிடாய் காலத்தில் விடுப்பு, ஓய்வு என்பதை நினைச்சே பார்க்க முடியாத துறை என்னுடையது. போட்டி, பயிற்சினு இரண்டையும் இதைக் காரணம் காட்டி தவறவிட முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளாக மாதவிடாய் நேரத்தில் பல போட்டிகளில் பங்கேற்று வந்திருக்கேன். மாதவிடாய் நேரத்தில் போட்டி நடைபெற இருந்தால் அதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே யோகா, ஸ்ட்ரெச்சிங், தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்து உடம்பைத் தயார்படுத்துவேன். அப்படியும் சில நேரங்கள்ல போட்டி நடக்கும்போது வலி, தசைப்பிடிப்பு ஏற்படத்தான் செய்யும். போட்டி நேரத்துல இதைப்பற்றியெல்லாம் நினைக்காமல், கவனத்தை ஒருமுகப்படுத்தி... `ஜஸ்ட் ஷூட்’ என்பதுதான் என் பாலிசி. மாதவிடாய் என்பதைத் தடையாக நினைச்சு, அந்த விஷயத்துக்குள்ளேயே முடங்கிடாம அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கிட்டே இருக்கணும்.’’

மாதவிடாய் விடுமுறை ‘கார்ப்பரேட் கம்பெனி லா’வில் இருக்க வேண்டும்!

தனியார் நிறுவனம் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் விஜயலட்சுமி

‘`கார்ப்பரேட் நிறுவனங்கள் உட்பட இந்தியாவில் இருக்கிற அனைத்து சிறிய, பெரிய நிறுவனங்களும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையைக் கட்டாயம் வழங்க வேண்டும். வருடத்துக்கு 10 நாள்கள் மாதவிடாய் விடுமுறை என்று ஸொமேட்டோ அறிவித்திருப்பதை, மற்ற நிறுவனங்கள் 12 நாள்கள் என்று அதிகரித்துக் கொண்டால் இன்னும் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. மேலும், ‘கார்ப்பரேட் கம்பெனி லா’வில் மாதவிடாய் விடுமுறையை ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டு வரணும்.

மாதவிடாய் நேரத்தில் வயிற்றுவலி ஒரு துன்பம் என்றால், அந்த நேரத்தில் பேருந்திலோ, ரயிலிலோ மணிக்கணக்கா பயணம் செய்து அலுவலகத்துக்கு வருவது கூடுதல் துன்பம் என்பதையெல்லாம் உணர்ந்து, எல்லா நிறுவனங்களும் இதை அமல்படுத்தணும். தன் அம்மாவுக்கு, மனைவிக்கு, சகோதரிக்கு, மகளுக்கு மாதத்தில் சில நாள்கள் உடல்ரீதியாகத் தாங்க முடியாத வயிற்றுவலி இருக்கும் என்பதை இன்னுமே பல ஆண்கள் புரிந்துகொள்ளாமலும், அது ஏதோ பெண்களின் ரகசிய பிரச்னை என்றும் இருக்காங்க. அது மாறணும்.

இது பெண்களுக்கு நடக்கும் இயற்கை நிகழ்வு என்பதை சக ஆண்களுக்குப் புரியவைக்க, எங்கள் அலுவலகத்தில், நாப்கினை மறைத்து ஒளித்து எடுத்துட்டுப் போகாம, ஹேண்ட்பேக், மொபைல்போல அதையும் இயல்பாகக் கையாள்கிறோம். பெண்களே... ஆண்கள் என்ன நினைப்பாங்களோ என்ற தயக்கத்தில், மாதவிடாய் விடுமுறை கேட்க வெட்கப்படாதீங்க. அது நம் உரிமை.’’

விட்டு விடுதலையாகி நிற்போம் மாதவிடாய் வலியிலிருந்தும்...