Published:Updated:

இந்தியாவைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் இ-சிகரெட்டுக்குத் தடை!

பொது இடங்களில் இ-சிகரெட் புகைப்போரைக் கைதுசெய்து, சிகரெட்டையும் பறிமுதல் செய்யுமாறு காவல்துறைக்கு துட்டெர்த்தே உத்தரவிட்டுள்ளார்.

இ-சிகரெட்
இ-சிகரெட்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இ-சிகரெட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட 16 வயதுச் சிறுமி தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சோகமான நிகழ்வின் எதிரொலியாக அந்நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்குத் தடை விதித்துள்ளார், பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபட் ரொட்ரிகோ துட்டெர்த்தே.

இ-சிகரெட்
இ-சிகரெட்

இ-சிகரெட்டுக்கு எதிரான உத்தரவு, கடந்த புதன்கிழமையிலிருந்து பிலிப்பைன்ஸில் அமலுக்கு வந்திருக்கிறது. பொது இடங்களில் இ-சிகரெட் புகைப்போரைக் கைதுசெய்து, சிகரெட்டையும் பறிமுதல் செய்யுமாறு காவல்துறைக்கு துட்டெர்த்தே உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும், பொதுவெளி அறிவிப்புகள், ஊடகங்கள் மூலமாக இந்த உத்தரவு மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் 2015-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களில் 24% பேர் புகையிலை பயன்படுத்துவோராக உள்ளனர். கடந்த பத்தாண்டுகளாக இ-சிகரெட் பல்வேறு நாடுகளில் பரவலாகி வருகிறது. பிரேசில், சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இ-சிகரெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ துட்டெர்த்தே
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ துட்டெர்த்தே
உலகிலேயே முதல்முறை - சிகரெட் பழக்கத்தால் சிறுவனுக்கு ஏற்பட்ட `பாப்கார்ன் நுரையீரல்!’

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவிலும் இ-சிகரெட்டுக்குத் தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டது, மத்திய அரசு.

இ-சிகரெட்டை எரிக்க முடியாது என்றாலும், இதில் உள்ள நிக்கோட்டின் உள்ளிட்ட திரவங்கள் ஆவியாக, அதை உறிஞ்சி போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். குறிப்பாக சிறுவர், சிறுமியர் இந்த இ-சிகரெட்டின் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். அவர்களின் போதைப்பழக்கம் வீரியமடைவதற்கு முன்பே இதைத் தடுத்து நிறுத்தி இதற்கு முடிவு கட்டிடவே, இந்தத் தடை உத்தரவு.

இ-சிகரெட்
இ-சிகரெட்

இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் காவலர்கள் பொதுமக்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கைக் குறிப்பில், "இன்று முதல் நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-சிகரெட்டைப் பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர், விளம்பரம் செய்வோர் அனைவரும் கைது செய்யப்படுவர்" என்று தெரிவித்துள்ளனர்.