Published:Updated:

"இன்னைக்கு எனக்கு டிஸ்சார்ஜ்; மனைவி போனை எடுக்கல!" மனநல மருத்துவமனை பொங்கல் விழாவில் வருந்திய நோயாளி

IMH entrance
IMH entrance

நோயாளிகளின் கவலையையும் ஏக்கங்களையும் போக்குவதற்குத்தான் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலிய மாணவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக மாறி பொங்கல் விழாவை நடத்துகிறோம்.

ஒரு நாளைக்கு சுமார் 1000 புறநோயாளிகளையும் 800-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளையும் எதிர்கொள்ளும் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை அறியாதவர்கள் இருக்க முடியாது. அந்த மருத்துவமனையில், நோயாளிகளுடன் இணைந்து இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பொங்கல்
பொங்கல்

மருத்துவமனையின் நுழைவாயில் தொடங்கி, வழி நெடுகிலும் வாழை மரங்கள், தோரணங்கள், பொங்கல் வாழ்த்துப் பதாகைகள் என்று விழாக்கோலம் பூண்டிருந்தது. நிசப்தம் மட்டுமே நிலவும் மருத்துவமனையை இன்று மட்டும் ஆனந்த கூச்சல்களும் இரைச்சல்களும் ஆக்கிரமித்திருந்தன.

வண்ண வண்ணக் கோலங்கள், பொங்கலுக்குத் தயார் நிலையில் இருந்த மண் பானைகள், பற்களின் கடிக்கு ஏங்கிக்கொண்டிருந்த கரும்புகள், சவாரிக்குக் காத்துக்கொண்டிருந்த மாட்டு வண்டிகள், களத்துக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்த கிராமியக் கலைஞர்கள் என உள்ளே நுழையும்போதே உற்சாகம் தொற்றிக்கொண்டது. விழாவில், கதாநாயகர்களும் கதாநாயகிகளுமான நோயாளிகள், குதூகலத்துடன் இருந்தனர். சிறு குழந்தையைப் போன்ற உற்சாகத்துடன் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் சக மனிதர்களாய் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மனநல மருத்துவமனை இயக்குநர் பூர்ண சந்திரிகா

கல்லூரி மாணவர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கரகாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம், கச்சேரிகள் முதலியவற்றை நடத்தி அசத்தினர். நிகழ்ச்சிகளைப் பார்த்து கைதட்டி ரசித்தனர், நோயாளிகள் அனைவரும்.

இந்த சமத்துவப் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்து நடத்திய மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகா பேசும்போது, "வருடம் முழுவதும் இங்கேயே இருந்து சிகிச்சை மேற்கொண்டுவரும் நோயாளிகளுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கவே இந்த சமத்துவப் பொங்கல் விழா. மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் சக மனிதர்களாய், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்த விழாவின் மூலம் புது சமத்துவம் பிறந்துள்ளது.

Dr.Poorna chandrika
Dr.Poorna chandrika

இங்குள்ள நோயாளிகளுக்கு, சிகிச்சையுடன் நல்லொழுக்கமும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. நோயாளிகள், தங்கள் சொந்த விருப்பத்தில் ஒன்றிணைந்து தயாரிக்கும் கைவினைப் பொருள்களையும் விற்பனை செய்கிறோம்.

இங்கு சிகிச்சைக்காக நோயாளிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் உறவினர்கள், காலப்போக்கில் அப்படியே விட்டுவிடுகின்றனர். நாங்கள், அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டாலும் நோயாளிகளை மீண்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அப்படிப்பட்ட நோயாளிகளின் கவலையையும் ஏக்கங்களையும் போக்குவதற்குத்தான், இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள், மருத்துவ, செவிலிய மாணவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக மாறி பொங்கல் விழாவை நடத்துகிறோம்" என்றார்.

Pongal celebration
Pongal celebration
போதை பழக்கம்... மனநலம் பாதிப்பு... 30 மாதங்களுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்த வாலிபர்!

எல்லோரும் மகிழ்வுடன் விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்க, ஒருவர் மட்டும் சோகத்துடன் காணப்பட்டார். அவரிடம் சென்று பேசியபோது, "எனக்கு சின்ன வயசுல இருந்து மனநலப் பிரச்னை இருக்கு. பெத்தவங்க என்னை வளர்த்து, கல்யாணமும் பண்ணி வெச்சாங்க. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்காங்க. நல்லாதான் வாழ்க்கை போயிட்டிருந்தது. குடும்பச் சூழல், பணக்கஷ்டம், மனஅழுத்தம் எல்லா சேர்ந்து மறுபடியும் என்னை நோயாளியாக்கிடுச்சி.

என் மனைவிதான் இங்க வந்து சேர்த்துட்டுப் போனாங்க. ஆனா, அதுக்குப் பிறகு ஒருதடவகூட என்னை வந்து பாக்கல. இங்கு ட்ரீட்மென்ட் எடுத்து குணமாயிட்டேன். இன்னைக்கு எனக்கு டிஸ்சார்ஜ்னு சொன்னாங்க. ஆனா, வீட்ல போனை எடுக்க மாட்றாங்க" வருத்தத்தைப் பகிர்ந்தபடி அங்கிருந்து நகர்ந்தார் அந்த நடுத்தர வயதுக்காரர்.

pongal
pongal
பொங்கல் பண்டிகையை குழந்தைகளுடன் உணர்வுபூர்வமாகக் கொண்டாட சூப்பர் ப்ளான்!

விசாரித்ததில், 30 வருடங்களாகக்கூட சில நோயாளிகள் அங்கேயே இருப்பதாகத் தெரிகிறது. இங்கு வந்து நோயாளிகளைச் சேர்ப்பவர்களில், 75 சதவிகிதம் பேர் மீண்டும் வந்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச்செல்வதில்லை. வீட்டிலிருந்து அழைத்துச்செல்ல வருவார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் பல முகங்களை நம்மால் அங்கு பார்க்க முடியும். சோகம் ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் அனைவரும் ஒரு குடும்பமாக மாறி, பொங்கல் விழாவைக் கொண்டாடியது மனதுக்கு ஆறுதலைத் தர, அங்கிருந்து கிளம்பினோம்.

அடுத்த கட்டுரைக்கு