Published:Updated:

`ஃபிட்னெஸ்ஸுக்காக புரோட்டீன் பவுடர் எடுத்தால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்!’ –மருத்துவர் எச்சரிக்கை

சிறுநீரகம்

`இன்று சந்தையில் பல வகையான பவுடர்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால், அவையெல்லாம் என்ன வகை பவுடர் என்பதில் கவனம் தேவை’

`ஃபிட்னெஸ்ஸுக்காக புரோட்டீன் பவுடர் எடுத்தால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்!’ –மருத்துவர் எச்சரிக்கை

`இன்று சந்தையில் பல வகையான பவுடர்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால், அவையெல்லாம் என்ன வகை பவுடர் என்பதில் கவனம் தேவை’

Published:Updated:
சிறுநீரகம்

2020-ம் ஆண்டு விற்பனையில் வளர்ச்சி பெறவிருக்கும் செயற்கை உணவுப்பொருள்களின் பட்டியலில், முக்கியமானதாக இருக்கிறது புரோட்டீன் பவுடர். இதன் பின்னணியாக இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1) சைவ உணவு சாப்பிடுபவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு மீதான அச்சம் காரணமாக, புரோட்டீன் பவுடரை நாடுகிறார்கள்

2) உடற்பயிற்சி ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர், `இன்ஸ்டன்ட்டாக ஃபிட்னெஸ் வேண்டும்' என்ற ஆர்வத்தில் புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்கிறார்கள்.

சிறுநீரகம்
சிறுநீரகம்

புரோட்டீன் பவுடர் என்பது, பாலிலிருந்து பாலாடைக் கட்டியை எடுத்த பிறகு, மீதம் இருக்கும் தண்ணீரில் சில பொருள்கள் கலக்கப்பட்டு, பவுடராக மாற்றம் செய்யப்பட்டு கிடைக்கப்பெறும் பொருள். `எந்தவோர் ஊட்டச்சத்தையும் உணவில் இயல்பிலிருந்தே பெறுவதுதான் நல்லது' என உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், குறிப்பிட்ட ஓர் ஊட்டச்சத்தை மட்டும் செயற்கையாகப் பெறுவதும், அதற்கான விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பதும் எந்த அளவுக்கு நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னியிடம் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எந்தவோர் ஊட்டச்சத்தையுமே இயற்கையாக உணவிலிருந்து பெறுவதுதான் நல்லது. உடல் சார்ந்து ஏதேனும் குறைபாடுகள் இருப்பவர்கள், குறிப்பாக வயது முதிர்வு, ஏதேனும் உடல்நலச் சிக்கல் காரணமாக ஊட்டச்சத்தை உட்கிரகிப்பதில் சிக்கல் இருப்பவர்கள் போன்றோர் மட்டும், மாத்திரை, பவுடர் என இப்படி சப்ளிமென்ட்டுகளாக செயற்கை வழியில் சத்துகளைப் பெறலாம். மற்றபடி, ஆரோக்கிய உடல்நிலையில் இருப்பவர்கள், நிச்சயமாக இப்படி செயற்கைச் சத்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், செயற்கையாக சத்துகளைப் பெறும்போது, இன்ஸ்டன்ட்டாக அந்த சத்து கிடைக்கும் என்பதால், உடலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த இன்ஸ்டன்ட் சத்து கிரகிப்புக்குப் பழக்கப்படும். இதனால், உடலில் இயற்கையாக நடக்கும் உட்கிரகிப்பு செயல்பாடுகள் யாவும் தாமதப்படத் தொடங்கும். இவை உடல் இயக்கத்தைக் குழப்பி, செயற்கை மற்றும் இன்ஸ்டன்ட் சத்துக்கு ஒருவரை அடிமைப்படுத்திவிடும்.

ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி
ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி

ஜிம் வொர்க்-அவுட் செய்பவர்களில் பெரும்பாலோனோர், புரோட்டீன் பவுடர்களை உட்கொள்வதைக் காணமுடிகிறது. பயிற்சி செய்வதற்கான ஆற்றல் சக்தியை இப்படியான பவுடர்கள் இன்ஸ்டன்ட்டாகவும் அதிகமாகவும் தந்துவிடுவதால், அவர்கள் இதை ஆர்வமாக உட்கொள்கின்றனர். இது நிச்சயம் ஆரோக்கியமான போக்கல்ல.

இன்று சந்தையில் பல வகையான பவுடர்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால், அவையெல்லாம் என்ன வகை பவுடர் என்பதில் கவனம் தேவை. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, `ஒரு நாளில் இவர் இந்தச் சத்தை இவ்வளவுதான் உட்கொள்ள வேண்டும்' என்ற ஒரு கணக்கு உடலில் இருக்கும். அதை அறியாமல், உடலுக்குத் தேவைப்படுவதற்கும் அதிக அளவு சத்துகளை உட்கொள்ளும்போது, சிறுநீரகச் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

புரோட்டீன் பவுடர் உட்கொள்பவர்களை கவனித்துப் பார்த்தால், அதில் பாதிக்கும் மேற்பட்டோர் மருத்துவப் பரிந்துரையின் கீழ் அதை உட்கொள்பவர்களாக இருக்க மாட்டார்கள். இந்த ஆபத்தான போக்குகுறித்து, மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது'' என்றார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜிம் டிரெயினரும் பிசியோதெரபிஸ்ட்டுமான வசந்த் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, ''அசைவ உணவுகளில் நிறைய புரதம் இருக்கிறது என்பதால், அதை உட்கொள்பவர்கள் இப்படியான பவுடர் உபயோகிப்பதில் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த வகையில், சைவ உணவு சாப்பிடுபவர்கள்தான் இதுபோன்ற சப்ளிமென்ட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஃபார்முலேட்டட் உணவுகளான இவை யாவும், அளவுக்கதிகமாக உடலில் சேரும்போது, கொழுப்புச்சத்தாகவே மாறும். அளவுக்கதிகமான கொழுப்பு, உடலுக்கு நிச்சயம் கேடு. எனவே, நாங்கள் புரோட்டீன் பவுடரை சரியான அளவில்தான் பரிந்துரைப்போம். ஒரு சில பிசியோதெரபிஸ்ட்டுகள் அப்படிச் செய்வதில்லை. அதற்காக அனைவரையும் குற்றவாளியாக்கிவிட முடியாது என்றாலும், இந்த ஆபத்தான விஷயத்தை நிச்சயம் நியாயப்படுத்தவும் முடியாது" என்றார்.

சிறுநீரகம்
சிறுநீரகம்

புரோட்டீன் பவுடர் உட்கொள்வதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடுகிறார், சிறுநீரக மருத்துவர் சௌந்தரராஜன்.

''ஒரு நாளில், தனது ஒரு கிலோ எடைக்கு 1.4 முதல் 2 கிராம் என்ற விகிதத்தில் புரோட்டீன் பவுடர் உட்கொள்ளலாம் என்பதுதான் அடிப்படை கணக்கு. அதற்கு மேல் உட்கொள்வது ஆபத்து. புரோட்டீன் பவுடரால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பு, சிறுநீரகம்தான். ஆரோக்கியமான சிறுநீரகம் இருப்பவர்களுக்கு, உடலில் சேரும் அளவுக்கதிகமான சத்துகள் யாவும், எளிதில் உட்கிரகிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுவிடும் என்பது மருத்துவ உண்மை. இருப்பினும், அளவுக்கதிகமாகச் சேரும் சத்துகளால் முதல் சில தினங்களுக்குப் பிறகு, சிறுநீரகம் தடுமாறத் தொடங்கிவிடும்.

புரோட்டீன் பவுடர், முதலில் தசைகளில்தான் பாதிப்பை ஏற்படுத்தும். செயற்கைப் புரதம் எடுத்துக்கொள்ளும்போது, ஒருவரால் வழக்கத்தைவிட கூடுதலாக உடற்பயிற்சி செய்ய முடியும். கூடுதலாகப் பயிற்சி செய்யும்போது, மயோஃபிப்ரில் (Myofibril) என்ற தசைப் பகுதியிலிருந்து மயோகுளோபின் என்ற பிக்மென்ட் அதிகமாக வெளிவரும். இதனால் மையோகுளோபின் யூரியா (Myoglobinuria)' என்ற சிறுநீரகப் பிரச்னை ஏற்படும். இது, மயோகுளோபியன் இஞ்சுரியை ஏற்படுத்தி, தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ (ரீனல் ஷட் டவுன்) சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும். தவிர, ஜிம் நெப்ரோபதி என்ற பாதிப்பும் ஏற்படலாம். புரோட்டீன் பவுடர், ஸ்டீராய்டுகள், வைட்டமின்கள் என பாடி பில்டிங்குக்காக எடுக்கப்படும் எந்தவொரு சப்ளிமென்ட்டால் ஏற்படக்கூடிய பிரச்னையே, 'ஜிம் நெப்ரோபதி' .

 சிறுநீரக மருத்துவர் சௌந்தரராஜன்
சிறுநீரக மருத்துவர் சௌந்தரராஜன்

எப்போதுமே, நம் உணவின் மூலமாகத்தான் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மீன், முட்டை போன்றவற்றையும், சைவ உணவு உண்பவர்கள், பால் போன்ற பொருள்களையும் புரதம் கிடைக்க எடுத்துக்கொள்ளலாம். சப்ளிமென்ட்ஸை எப்போதுமே ஊட்டச்சத்து நிபுணரிடமோ மருத்துவரிடமோ ஆலோசனை பெற்றுத்தான் எடுக்க வேண்டும்" என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism