Published:Updated:

மனமே நலமா? - 13

மனமே நலமா
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நலமா

- மருத்துவர் யாமினி கண்ணப்பன்

“ஹாய் மினி... வந்து ரொம்ப நேரமாச்சா?”

“இல்ல டாக்டர். இப்பதான்.”

“ஏன் டல்லா இருக்க?”

“ஒண்ணுமில்ல டாக்டர். எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு. இப்பதான் பாத்துட்டு வர்றேன். அவள பாத்ததும் உடனே உங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு. அதான் சொல்லாம வந்துட்டேன்.”

“பரவால்ல. என்னாச்சு அந்தப் பொண்ணுக்கு? அவ பேரு என்ன?”

“சிந்து டாக்டர். 9வது படிக்குறா. திறமையான பொண்ணு. அவளுக்கு ஒரு பிரச்னை. படிப்பில் எந்தக் கேள்வி கேட்டாலும் சரியா பதில் சொல்லிடுறா. மத்த மாணவர்களால் சொல்ல முடியாத பதில்கூட சொல்லிடுறா. ஆனா எழுதணும்னு வந்தா அவளால் முடியலை. எக்ஸாம்லயும், ஹோம் வொர்க்கிலும் எழுதறதில் மட்டும் சிக்கல். எழுதச் சொன்னா பென்சிலின் கூரை உடைச்சிடுறா. அவ விளையாட்டுத்தனமாகச் செய்றதா பெற்றோர்கள் நினைக்கிறாங்க. படிக்கப் பிடிக்காம இப்படிச் செய்றதா நினைக்கிறாங்க. அவளின் அம்மாவும் ஒரு டீச்சர். ‘டீச்சர் பொண்ணு மக்கு’ன்னு எல்லோரும் சொல்லிடுவாங்கன்னு பயப்படுறாங்க.”

“மினி, நீ சொல்றத பாத்தா அந்தப் பொண்ணுக்குக் கற்றல் குறைபாடு இருக்கலாம். டிஸ்லெக்ஸியான்னு சொல்வோம். முறையான பயிற்சிகள் மூலமா இந்தக் கற்றல் குறைபாட்டின் தாக்கத்தைக் குறைக்கலாம். அவங்க டாக்டரைப் பாத்தாங்களா?”

மனமே நலமா? - 13

“அதான் டாக்டர் பிரச்னை. அவளுக்கு இப்படியொரு பிரச்னை இருக்குன்னு டீச்சர்ஸ்க்குத் தெரிஞ்சிருக்கு. அவங்க இது மனநலன் சார்ந்த பிரச்னையா பாக்கலாம்னு சொன்னா, ‘என் பொண்ண பைத்தியம்னு சொல்றீங்களா’ன்னு அவ அப்பா கோபப்படுறாரு. படிக்க சோம்பேறித்தனப்பட்டுதான் இப்படியெல்லாம் அடம்பிடிக்கிறாள்னு சில சமயம் அடிச்சிடுறாரு. ஆனா எனக்குத் தெரிஞ்சு அவ படிக்க ஆர்வமாதான் இருக்கா டாக்டர்.”

“அவர் மட்டும் இல்ல மினி... பெரும்பாலான பேரன்ட்ஸோட பிரச்னைதான் இது. தலைவலிச்சா டாக்டரைப் பாக்கறாங்க. கால் உடைஞ்சா பாக்குறாங்க. மனசுல பிரச்னைன்னா பாக்குறதுல என்ன தயக்கம்? அந்தப் பொண்ணு பென்சில் கூரை உடைக்கிறதே, தன்னுடைய குறையை மறைக்கத்தான். அந்தப் பிரச்னையை நாம உணர்ந்து சரியான மருத்துவ உதவி கொடுத்தாதானே சரியாகும்? அந்தப் பொண்ணு மறைக்கிறதைப் புரிஞ்சிக்க முடியுது. பெற்றோர்களும் இப்படி இருந்தா எப்படி? இந்தக் கற்றல் குறைபாட்டைப் பத்திதான் இந்தில அமீர்கான் ‘தாரே ஜமீன் பர்’னு ஒரு படமெடுத்தாரு. நல்லா ஹிட்டும் ஆச்சு. அப்ப கொஞ்சம் விழிப்புணர்வு வந்துச்சு. இப்ப நீ சொல்றத பாத்தா, இந்த விஷயத்தில நாம இன்னும் நிறைய விழிப்புணர்வு கொடுக்கணும் போல மினி. அந்தப் பொண்ணுக்கு இருக்கிறது சின்ன ஸ்பீடு பிரேக்கர். அதைத் தாண்ட நாம உதவி பண்ணிட்டா அவ எக்ஸ்பிரஸ் வேகத்துல போயிடுவா. NCRB ரிப்போர்ட்படி மாணவர்கள் தற்கொலையில தமிழ்நாடு 3வது இடத்துல இருக்கு. இதுக்குக் கற்றல் குறைபாடும் முக்கியப் பங்கு வகிக்கலாம். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு நாம முறையான டிரீட்மென்ட் தந்திருந்தா இந்த எண்ணிக்கை கணிசமா குறைஞ்சிருக்கும். அவங்களுக்குக் கற்றல் குறைபாடு இருந்து, அது கண்டறியப்படாமலும் இருக்கலாம். இப்படியான அணுகுமுறையின் மூலம் ஒரு உயிரைக் காக்கவும் முடியும். அவங்க வாழக்கைத்தரத்தை மேம்படுத்தவும் முடியும். மாணவர்களின் தற்கொலைக்குப் பின்னாடி இருக்கும் உளவியல் காரணங்களை கண்டிப்பா ஆராயணும். தற்கொலைக்கும் மனநலனுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டா என்ன சொல்றது?”

“ஒரு நாள் மொரீஷியஸைச் சேர்ந்த ஒருத்தரைப் பத்திச் சொல்லியிருந்தீங்க டாக்டர். அவங்களால கண்ணை மூடவே முடியாம கஷ்டப்பட்டாங்க. பல டாக்டர்களைப் பாத்துட்டு கடைசியா உங்ககிட்ட டிரீட்மென்ட் எடுத்தப்புறம்தான் அவங்களுக்கு குணமாச்சு இல்ல. இப்படிப் பல பிரச்னைகளுக்கு மனசும் காரணம்கிறது அதிகமா தெரியறதில்லை டாக்டர். அதுக்கு என்ன பண்றது?”

“உண்மைதான் மினி. இது மனசு சம்பந்தப்பட்ட பிரச்னை. இதுக்கு மனநல மருத்துவரைப் பாக்கணும்னு நல்லாத் தெரிஞ்சாலும் சிந்துவோட அப்பா மாதிரி கோபப்படுறாங்க. இதுல பிரச்னை எதனாலன்னே தெரியலைன்னா எப்படி மனநல மருத்துவரைப் பாக்க சம்மதிப்பாங்க? சில மாசத்துக்கு முன்ன ஒரு பொண்ணு வந்தா. அந்தப் பொண்ணோட பேரன்ட்ஸுக்கு இது மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னையா இருக்கும்னு தெரியல. 17 வயசு இருக்கும். ஆனா வெறும் 25 கிலோதான் இருக்கா. கேட்டா, எப்ப பாத்தாலும் டயட் டயட்னு இருக்காளாம். என்னைப் பாக்க வந்தப்ப அவுட் பேஷன்ட் ஏரியால கொஞ்ச நேரம் வெயிட் பண்ண வேண்டியிருந்திருக்கு. அந்த கேப்ல சூரிய நமஸ்காரம் பண்ணியிருக்கா. நர்ஸெல்லாம் பயந்துபோய் என்னன்னு கேட்டா, ‘டைம் வேஸ்ட் பண்ணாம எக்ஸர்ஸைஸ் செஞ்சாதான் வெயிட் குறையும்’னு சொல்லியிருக்கா. 25 கிலோக்கு மேல குறைய என்ன இருக்கு? பீரியட்ஸும் வரல. ‘Lanugo hair’ அப்படின்னு சொல்லப்படுற பூனை முடி உடம்பு, முகம் முழுக்க வளந்துடுச்சு. இதுக்கு ‘அனோரெக்ஸியா நெர்வோஸா’ன்னு பேரு. அவகிட்ட பேசியபோதுதான் புரிஞ்சது. சின்ன வயசுல அவ குண்டா இருக்கான்னு கிண்டல் பண்ணுனது உட்பட பல காரணங்களால அவ மனசு பாதிக்கப்பட்டிருக்கு. எப்படியாவது ஒல்லியாகணும்னு டயட் இருக்க ஆரம்பிச்சா. எடை குறைஞ்சாலும் கண்ணாடில பாக்குறப்ப தான் குண்டா இருக்கிற மாதிரிதான் தெரியுது அவளுக்கு. அதனாலதான் இன்னும் குறையணும்னு விடாப்பிடியா சாப்பிடாம இருந்திருக்கா. இது உடல் சம்பந்தப்பட்ட பிரச்னை இல்ல; மனசுலதான் பிரச்னை. அது தெரியாம ‘டீன் ஏஜ்ல வர்ற சாதாரண பிரச்னை’ன்னு இருந்துட்டாங்க. தற்செயலா வீட்டுக்கு வந்த உறவினர்தான் ‘உடனே சைக்கியாட்ரிஸ்ட பாருங்க’ன்னு சொல்லியிருக்காங்க. இன்னும் கொஞ்சம் லேட் பண்ணியிருந்தா அவ உயிருக்கே ஆபத்தாகி இருக்கலாம். இப்ப தொடர்ச்சியான டிரீட்மென்ட்டால ஒழுங்கா சாப்பிடுறா. 45 கிலோ வந்திருக்கா. மக்கள் ரெண்டு விஷயங்களை சரியா புரிஞ்சிக்கணும். ஒண்ணு, மனநல மருத்துவரைப் பாக்கறதுல எந்த தப்போ, கெளரவக் குறைச்சலோ இல்லை. இரண்டாவது, இந்தப் பிரச்னைக்கு இதுதான் காரணம்னு நீங்களா முடிவு பண்ணக்கூடாது. மருத்துவர்கள் சொல்றதக் கேட்டு, அதற்கேற்ற மருத்துவரைப் பார்க்கணும்.’’

மனமே நலமா? - 13

“கரெக்ட் டாக்டர். மத்த எல்லா விஷயங்களையும்விட மனநல மருத்துவத்துலதான் நிறைய தப்பான புரிதல்கள் மக்கள் மத்தியில இருக்குதுன்னு நீங்க அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பீங்க. அப்படி என்னல்லாம் இருக்கு டாக்டர்?”

“பெரிய லிஸ்ட்டே இருக்கு மினி. உடல், மனம் பலமா இருந்தா மனநலப் பிரச்னைகள் வராதுங்குற எண்ணம்.மனநலப் பிரச்னைகளுக்கு தனிநபர், மரபு சார்ந்த காரணங்கள் மற்றும் சமூகக் காரணங்கள்னு பல இருக்கலாம். அதனால் யாருக்கு வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் மனநலப் பிரச்னைகள் வரலாம். இதுக்கு யாருமே விதிவிலக்கு இல்ல மினி. இது உள்ளத்தின் பலவீனம் இல்ல. அதாவது மனநலன் சார்ந்த ஒரு பிரச்னையை personality flaw-னு ஒருத்தரோட குணமா நினைக்குறது கூடாது.

இது பில்லி, சூனியம், பேய் பிடிச்சிருக்கு மாதிரியான நம்பிக்கை. ‘நான் பாக்காத பிரச்னையா? இதெல்லாம் நீயாதான் சரி பண்ணிக்கணும், உனக்கு தைரியம் இல்லையா?’ மாதிரியான அறிவுரைகள். உண்மையைச் சொல்லணும்னா, மனநலன் சார்ந்த பிரச்னைகளுக்கு உதவி தேடுறவங்கதான் ரொம்ப தைரியமானவங்க. அதுமட்டுமல்ல, மனநலன் பிரச்னை இருக்கிறவங்க எல்லாமே அடிக்குறது, கடிக்குறதுன்னு வன்முறையில் ஈடுபடுவாங்கன்னு நினைக்குறதும் தப்பு. உண்மையில் பெரும்பாலான மனநோய்கள் வெளிய தெரியாம இருக்கறதுண்டு.

இப்படி எல்லாமே தவறாதான் பெரும்பாலும் சமூகத்தால புரிஞ்சிக்கப்பட்டிருக்கு மினி. ஒருத்தருக்கு மனநலம் சார்ந்து பிரச்னை வந்து, அது தீவிரமாகும் போதுதான் வேற வழியில்லாம ட்ரீட்மென்ட்டுக்கு வராங்க. இந்தத் தாமதமே பிரச்னையை இன்னும் சிக்கல் ஆக்கிடுது. இதெல்லாம் என்ன பிரச்னைன்னு புரிஞ்சிக்கறதுல இருக்கிற தவறுகள். டிரீட்மென்ட் விஷயத்துல இன்னும் நிறைய இருக்கு.”

“அப்ப பட்டியல் இன்னும் முடியலையா டாக்டர்?’’

“ஆமா மினி. எல்லா மனநலப் பிரச்னைக்கும் டாக்டர்கள் தூக்க மாத்திரைதான் தர்றாங்கன்னு இவங்களா நினைச்சுக்கிறாங்க. மனநலப் பிரச்னைக்கு மூளையில் ஏற்படும் கெமிக்கல் இம்பேலன்ஸ்தான் முக்கிய காரணம். அதைச் சீர்செய்யும் மருந்துகள்தான் மனநல மருத்துவ சிகிச்சையின் முக்கிய அம்சம். தலைவலிக்குப் போடுற மாத்திரைல இருந்து எல்லாத்திலுமே பக்கவிளைவுகள் உண்டு. ஆனால், ‘மனநல மருத்துவர்கள் தர்ற மாத்திரையைப் போட்டாதான் சைடு எஃபெக்ட்ஸ் அதிகமா இருக்கும்’ அப்படிங்குற புரிதல் தவறானது. அடுத்தது முக்கியமா, மனநலன் சார்ந்த ட்ரீட்மென்ட் எல்லாமே வாழ்நாள் முழுவதும் தொடரும்ங்கிற தவறான நினைப்பு. ‘மனநோயாளிகள் ஆயுள் முழுக்க மனநோயாளிகளாவே இருப்பாங்க. இந்த நோய் சரியே ஆகாது’ அப்படிங்குறதும் தவறான புரிதல்தான். டிப்ரெஷன் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு குறுகிய கால சிகிச்சையே போதுமானது. மனச்சிதைவுபோல சில தீவிர மனநோய்களுக்குத்தான் நீண்டகால ட்ரீட்மென்ட். எவ்ளோ காலம் அப்படின்றதை அந்த நோய்தான் முடிவு பண்ணும். அதுமட்டுமல்ல மினி, பலர் மனநலன் அப்படின்றதே ஒரு luxury-னு நினைக்குறாங்க. ஆனால் உடல்நலன் மாதிரியே, மனநலனும் நம்ம அடிப்படை உரிமையும் தேவையும்தான். அதனாலதான் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவமும் இலவசமாப் பார்க்கப்படுது. சில பேர் ‘எங்களுக்கு மாத்திரை வேணாம். கவுன்சலிங் மட்டும் போதும்’னு அவங்களா முடிவு பண்ணிச் சொல்வாங்க. அதை மருத்துவர் ஏற்கலைன்னா கவுன்சலிங் மட்டும் தரும் மனநல ஆலோசகர் கிட்ட போயிடுறாங்க. மனநல மருத்துவருக்கும், ஆலோசகருக்கும் இருக்கும் வித்தியாசமே இன்னும் முழுசா புரிஞ்சிக்கப்படலை மினி. ஒரு பிரச்னை வரும்போது முதல்ல மனநல மருத்துவரை அணுகணும். அவங்கதான் உங்களுக்கு மனநல ஆலோசனை தேவையா, மருந்து தேவையா, அல்லது ரெண்டும் தேவையா அப்படின்னு முடிவு செய்ய முடியும்.”

“உண்மைதான் டாக்டர். நானும் ஒரு படத்துல பார்த்தேன். சைக்காலஜிஸ்ட்டும் சைக்கியாட்ரிஸ்ட்டும் ஒண்ணுதான்னு சொல்லியிருந்தாங்க.”

“அது மட்டுமல்ல. நான் சொன்ன பல தவறான புரிதலுக்கு சினிமா உள்ளிட்ட பல மீடியாக்களும் காரணம். அவங்களும் சரியா புரிஞ்சிக்காமக் காட்டிடுறாங்க. மக்கள் அத நம்பிடுறாங்க. பல மனநலப் பிரச்னைகளுக்கு மூடநம்பிக்கைகள் பக்கமும் மக்கள் அதிகமா போறாங்க. அவங்கவங்க நம்பிக்கையைக் குறை சொல்லல. ஆனால், அறிவியலையும் நம்புங்கன்னுதான் சொல்றேன். என்கிட்ட வர்ற பல பேஷன்ட்ஸ் அவங்க வீட்டுக்குத் தெரியாமதான் வர்றாங்க. காரணம், இன்னொரு பக்கம் கோயில், தர்கான்னு அவங்க வீட்டில கொடுக்கிற பிரஷரால போயிட்டிருப்பாங்க. ‘இதுக்குப் போய் டாக்டரை யாராவது பாப்பாங்களா’ங்கற கேள்வியை அவங்களால சமாளிக்க முடியலை.”

“மனநல டாக்டர பார்க்க வர்றதையே கெளரவக் குறைச்சலா நினைக்கிற ஆட்களும் இருக்காங்க டாக்டர். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் பக்கம் போனா வீட்டு கெளரவம் என்னாகுறதுன்னு நினைக்கிற மாதிரி இதையும் நினைக்கிறாங்க டாக்டர்.”

“கரெக்ட்டா சொன்ன மினி. மனநலன் அப்படின்றதே நம்ம சமூகத்தால ஏற்றுக்கொள்ளப்படாத விஷயமாதான் இருக்கு. அதை முதல்ல உடைக்கணும். இது என்னை மாதிரி டாக்டர்கள், உன்னை மாதிரி ஆர்வம் இருக்கிற ஆட்களோட வேலை மட்டுமல்ல... எல்லோரோட கடமை. ஒரு நல்ல, ஆரோக்கியமான சமூகம் வேணும்னா, அதுக்கு அந்த மக்களோட மனநலம் ரொம்ப ரொம்ப முக்கியம். அதுக்கு அதைப் பத்தின முழுமையான அறிவும் திறந்த மனதுடன் கூடிய உரையாடலும் அவசியம். அதைத்தான் இத்தனை வாரமா நாம முயற்சி செஞ்சோம். இது போதாது... ஆனா நாம நினைக்கிற சூழல் அமைய இது ஒரு சின்னத் தொடக்கமா இருக்கும்னு நம்புறேன் மினி. பொறுமையா நான் சொன்னதெல்லாம் கேட்டு, புரிஞ்சிக்க முயற்சி பண்ணுன உனக்கு நிறைய நன்றியும் அன்பும்.”

“நான்தான் சொல்லணும் டாக்டர். நீங்க பகிர்ந்துக்கிட்ட விஷயங்கள் எல்லாமே புதுசா இருந்ததுங்கிறதே மனநலன் பற்றிய அறியாமையைத்தான் காட்டுது. இனிமேல் என்னோட, என்னைச் சுத்தி இருக்கிறவங்களோட மனநலன்ல கவனக்குறைவா இருக்க மாட்டேன்னு உங்ககிட்ட உறுதியாச் சொல்றேன் டாக்டர். உங்களுக்கும் என் அன்பும் நன்றியும்.”

“பை மினி. இன்னொரு சந்தர்ப்பத்துல சந்திக்கலாம்.”

“நிச்சயமா டாக்டர். பை.”

- நிறைந்தது