Published:Updated:

மனமே நலமா? - 9

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

- மருத்துவர் யாமினி கண்ணப்பன்

மனமே நலமா? - 9

- மருத்துவர் யாமினி கண்ணப்பன்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

“ஹலோ மினி... ஏதாவது பிரச்னையா? ஏன் என்னை பார்க்க வந்துட்டும் மொபைல்ல ஏதோ நோண்டிக்கிட்டு இருக்க?”

“அது ஒண்ணுமில்ல டாக்டர். காலைல இருந்து பேஸ்புக்ல ஒரு சின்ன விவாதம். புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க. அவங்க சைடுதான் தப்பு. அதான் ரிப்ளை பண்ணிக்கிட்டே இருக்கேன்.’’

“ஹ்ம்ம்ம்...”

“சரி டாக்டர், இன்னிக்கு நாம எதைப் பத்திப் பார்க்கப்போறோம்?’’

“இன்னிக்கு வேற ஒரு டாபிக்தான் யோசிச்சு வெச்சிருந்தேன். ஆனா, நீ மொபைல்ல மூழ்கி முத்தெடுக்கிறதைப் பார்த்ததும், உங்க தலைமுறைக்கான முக்கியமான பிரச்னையைப் பத்திப் பேசலாம்னு முடிவு பண்ணிட்டேன்.’’

“மொபைல் நோண்டுறது எல்லாம் ஒரு பிரச்னையா டாக்டர்?”

மனமே நலமா? - 9

“மொபைல் நோண்டறது வேற. அதன்வழியா தன்னை மறந்து சோஷியல் மீடியாக்கள்ல மூழ்கிக் கிடக்கறது வேற.’’

“என்ன டாக்டர் சொல்றீங்க... பேஸ்புக்ல கமென்ட் போட்டது ஒரு குத்தமா?’’

“மினி... ஒரு நாள்ல ஒவ்வொரு விஷயத்துக்கும் எவ்ளோ நேரம் ஒதுக்கறோம்ங்கறதுலதான் எல்லாமே இருக்கு. நீ ஒரு நாளைக்கு ட்விட்டர், பேஸ்புக்ல எல்லாம் தோராயமா எவ்ளோ நேரம் செலவழிப்பே?’’

“அது கணக்கு பாக்கறது இல்ல டாக்டர். அப்பப்போ யூஸ் பண்ணுவேன். மீட்டிங், டிராவல், ப்ரீயா இருக்கறப்ப, தூக்கம் வரலைன்னா...”

“ஐயோ... போதும் மினி. இத்தனை வாரமா இத நான் எப்படி கவனிக்காம விட்டேன். இன்னிக்கு நாம பார்க்கப் போறது, சமூக வலைதளப் பயன்பாடுகளும், அதனால நமக்கு வர்ற மன அழுத்தங்களும்தான்...”

“ரைட்டு! இன்னிக்கு பேஷன்ட் நானா? ம்ம்ம்... சொல்லுங்க டாக்டர், திருத்திக்கறேன்.”

“டிஜிட்டல் உலகத்துல பின்னிப் பிணைஞ்சு இருக்குற நாம் அனைவரும் யோசிக்கவேண்டிய ஒரு விஷயம்தான் இது மினி. சோஷியல் மீடியா பயன்படுத்துற மக்கள் அதிகமாக இருக்குற நாடுகள்ல நமக்கு ரெண்டாவது இடம். ஒரு நாளைக்கு குறைஞ்சது 2.4 மணி நேரம் ட்வீட், பேஸ்புக் போஸ்ட்னு ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கோம். அதாவது வாரத்துக்கு சராசரியா 17 மணி நேரம். இதனால ஏற்படும் உளவியல் பாதிப்புகள் குறித்து மனநல மருத்துவர்கள் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டி ருக்காங்க.”

“ரொம்ப அவசியமான விஷயம்தான் டாக்டர்... இதுல நாங்க என்ன கத்துக்கணும்?’’

“மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் மூலம் நம்மைப் பற்றிய கருத்துகளை உருவாக்கிக்கொள்வதைத்தான் ‘தியரி ஆப் சோஷியல் கம்பேரிசன்’னு சொல்றோம்.

சோஷியல் மீடியாவுல எப்பவுமே, நம்மளவிட பெட்டரா இருக்கறவங்க கூடத்தான் நம்மள ஒப்பிடற சந்தர்ப்பங்கள் உருவாகுது. அதற்கு முக்கியமான காரணம், ஒருவரைப் பற்றிய சிறப்பான விஷயங்கள் மட்டும் பெரும்பாலும் பதிவிடப்படுது. இதற்குப் பெயர் Highlight Reel Effect.

அட, இவங்களோட ட்விட்ட எப்படி இத்தனை பேர் ரீட்வீட் பண்ணியிருக்காங்க. அந்தப் பொண்ணு மாதிரி நமக்கு உடல்வாகு இல்லையே, அவங்கள மாதிரி சொகுசான வீடு இல்லையே, அவங்களுக்கு மட்டும் எப்படி இன்ஸ்டாகிராம்ல இவ்ளோ பாலோயர்ஸ்... இப்படி நம்மளவிட பெட்டர்னு நாம நினைக்கற நபர்கள்கூடத்தான் நம்மள எப்பவும் ஒப்பீடு செஞ்சுக்கறோம். இதுக்கு அப்வார்டு சோஷியல் கம்பேரிசன்னு பெயர் (Upward Social Comparison). இதற்கான சூழலை சோஷியல் மீடியா உருவாக்குது. இருக்கிறதைவிட இல்லாததைப் பற்றியே ஏங்கும் நம்முடைய அடிப்படை உளவியலானது, இதனால் இன்னும் தூண்டப்படுது.

நம்மைவிட கஷ்டப்படுறவங்கள, அவங்களைவிட மேம்பட்ட நிலையில் இருக்கும் நம்மோடு ஒப்பிடுவதற்குப் பெயர் டௌன்வார்டு சோஷியல் கம்பேரிசன். இதுதான் நம்மளை மனநிறைவுடன் வாழச் செய்யும்.”

மனமே நலமா? - 9

“டாக்டர், ஒரு பாட்டு ஞாபகம் வருது.”

“வாவ் மினி, உனக்கே ஞாபகம் வருதுன்னா, எனக்கு எங்க தாத்தா பாட்டு ஞாபகம் இருக்காதா. அதேதான். ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...’ ‘மயக்கமா கலக்கமா’ பாட்டுல வர்ற இந்த வரிகள் சோஷியல் மீடியா ஏற்படுத்தும் மாய உலகத்திலிருந்து தப்பிக்க மிகச்சிறந்த மருந்து.’’

“சூப்பர் டாக்டர். ஆனா, நம்மை ரசிக்கத்தக்கவர்களா மாத்த சோஷியல் மீடியா பயன்படுது இல்லையா?’’

“உண்மைதான். ஆனா, நம்மள நாம அழகா காட்டிக்க அதிகமா பில்ட்டர்ஸ் பயன் படுத்தறது, போட்டோஷாப் பண்றதுன்னு அந்தப் போலியான உலகத்துல சூப்பர் ஸ்டார் ஆகணும்ங்கற வெறியில வாழ்க்கையத் தொலைக்கறவங்கதான் அதிகம். அதே மாதிரி நாம சிலரைப் பார்த்து, ‘எப்படி வாழ்றாங்க பாரு’ன்னு பெருமூச்சு விடுவோம். உண்மைல அவங்க வாழ்க்கைல நாம ஒரு குட்டி போர்ஷனத்தான் பாக்கறோம். அவங்க ஷேர் பண்ற ஒரு புகைப்படத்தை வெச்சு, அவங்களுக்கு நாம முழுசா ஒரு உருவம் தர்றோம். எப்பவோ போன ஒரு சுற்றுலா போட்டோவ இப்ப ஷேர் பண்ணுவாங்க. ‘அட, இவங்களால மட்டும் எப்படி இவ்ளோ நிம்மதியா இருக்க முடியுது’ன்னு நம்ம மனசு அடிச்சுக்க ஆரம்பிக்கும். உண்மைல, அவங்க நல்லா இருக்காங்கங்றதவிட, அவங்க நல்லா இருக்கறதா நாம கற்பனை பண்ணிக்கறதுதான் ஜாஸ்தி. வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கத்தான் செய்யும் மினி”

“ஏன் டாக்டர், அப்போ அடிக்கடி குடும்பத்தோட செல்பி போடறவங்க, ஹோட்டல் போறவங்க, மகிழ்ச்சியா இருக்கறவங்க எல்லாம் போலியா நடிக்கறாங்கன்னு சொல்றீங்களா?”

“அப்படியில்ல மினி. ஆனா, அத வச்சு மட்டும் அவங்க வாழ்க்கையப் பத்தி நாம முடிவுக்கு வர்றது அபத்தம்னுதான் சொல்றேன். சமீபத்துல நிகழ்ந்த ஒரு சின்னத்திரை பிரபலத்தின் தற்கொலை பத்தி வர்ற பேச்செல்லாம் கவனிச்சியா? இன்ஸ்டாவுல சில மணி நேரத்துக்கு முன்னாடிகூட சந்தோஷமா இருக்குற போட்டோ போட்டாங்களாம். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்ல ஒருத்தவங்க அவங்கள சந்தோஷமா காட்டிக்கறதாலேயே ‘எல்லாம் சுபம்’னு அர்த்தம் இல்ல. சோஷியல் மீடியாங்கறது ஒரு மாய உலகம். நெஜத்துல அவங்க வாழ்க்கை அவங்களோடது. நம்ம வாழ்க்கை நம்மளோடது. வாழ்க்கைங்கறது ஓட்டப்பந்தயம் இல்லையே மினி, யார் ஜெயிக்கறாங்கன்னு போட்டி போடறதுக்கு?”

“ஆமா டாக்டர். இந்த வருஷ கல்யாண நாளுக்கு நான் எதுவுமே போஸ்ட் போடல. அதுக்கே, ‘வீட்டுல ஏதாவது பிரச்னையா’ன்னு நாலு அங்கிள்ஸ் மெசெஞ்சர்ல வந்துட்டாங்க...”

“சரியா சொன்ன போ. அப்படியே அவங்க எல்லாரையும் ம்யூட்ல போட்டுடு. லைக்ஸ், ஷேர்ஸ், ரீட்விட்ஸ்ல முழுசா இளைஞர்கள் மூழ்கிடறாங்க. போஸ்ட் பண்ணின போட்டோ அதிகமா லைக்ஸ் வாங்கறப்போ ஒருவித ஸ்டாரா அவங்களே உணர ஆரம்பிக்கறாங்க. அங்க கிடைக்கிற ஒவ்வொரு எமோஜிக்கும் அவங்க மூளைக்குள்ள டோப்போமைன்ங்ற ரசாயனப் பொருள் சுரக்குது. மூளையோட ரிவார்டு சிஸ்டம் இதனால் தூண்டப்படுது. இந்தத் தூண்டல் மனதில் ஒரு குதூகலத்தை உருவாக்குவதால், அதுவே மீண்டும் மீண்டும் வேண்டும் என்ற ஒரு சுழற்சியில் மாட்டிக்கறாங்க.

நீ யோசிச்சுப் பாரேன், பேஸ்புக்ல நாம எழுதும் முறை பெருசா மாறவேயில்ல. ஆனா, ரியாக்‌ஷன் தர்றதுக்கு முன்னாடி லைக்ஸ் மட்டும்தான் இருந்துச்சு. இப்போ அதையே, லைக், ஹார்ட் இன், ஹாஹா, சோகம்னு எல்லாம் மாத்தியிருக்காங்க. ஒரு வலுவான ரிலேஷன்ஷிப்புக்குத் தேவை தெளிவான, ஆழமான உரையாடல்கள். எமோஜிஸ் மூலம் இதெல்லாம் சாத்தியமான்னு யோசிக்கணும் மினி. பல தவறான கற்பிதங்கள்கூட இதன்மூலம் உண்டாகலாம். இப்படி வெறும் சோஷியல் மீடியாவுல மட்டும் வாழ்றது இல்லை வாழ்க்கைன்னுதான் சொல்ல வரேன்.’’

“புரியுது டாக்டர், இதுல அதிகமா பாதிக்கப்படுறது யாரு?’’

“இளைஞர்கள். அதுக்கு அறிவியல் காரணம் இருக்கு. 20 வயசுலதான் மூளையின் சிந்திக்கும், முடிவெடுக்கும் பகுதியான pre frontal cortex முழு வளர்ச்சி அடையும். எந்நேரமும் சோஷியல் மீடியாவுல இருக்கற இளைஞர்கள், அது ஏற்படுத்தும் பலவித உளவியல் எமோஷனல் தாக்குதல்களுக்கு எளிதில் இரையாகிடறாங்க.’’

“ஆமா டாக்டர், இன்னிக்கு எனக்கு நடந்ததுகூட அப்படியான ஒண்ணுதான். அதுக்கு ஏன் ரெண்டு மணி நேரம் அப்செட்டா இருந்தோம்னு இப்பதான் உறைக்குது.”

“சமூக வலைதளங்கள் எல்லாமே செயற்கை நுண்ணறிவு மூலம்தான் இயங்குது. நெகட்டிவான ஒரு விஷயத்த நாம பாத்து, அதுல நேரம் செலவழிக்கறோம்னு அதுக்குத் தெரிஞ்சா, அடுத்தடுத்து அது தொடர்பான வீடியோக்களே வரும். இது நம்ம வாழ்க்கை குறித்த பார்வையில பெருசா தாக்கத்த ஏற்படுத்தும். நாம பாக்கற, பாலோ பண்ற விஷயங்கள் பாசிட்டிவா இருக்கணும்.

பேஸ்புக்ல 4,000 ப்ரெண்ட்ஸ், 10,000 பாலோயர்ஸ் இருக்கறது முக்கியம் இல்ல. மனசுவிட்டுப் பேச முடியற, கஷ்டங்களை ஷேர் பண்ணிக்கற ப்ரெண்ட்ஸ் நாலு பேரு இருந்தாலும், அவங்கதான் முக்கியம். கஷ்டமான சூழல்ல அவங்கதான் கூட நிப்பாங்க. ‘இணையத்துல நம்மகூட இணைஞ்சிருக்கறவங்க எல்லாமே, நம்ம இதயத்துக்கு நெருக்கமானவங்களா’ன்னு யோசிச்சாலே, அது நமக்குத் தர்ற மன உளைச்சல்ல இருந்து ஈஸியா வெளிய வந்துடலாம்.”

‘‘எல்லாம் சரி டாக்டர். ஆனா, எப்படி இதையெல்லாம் யூஸ் பண்ணாம இருக்கறது?”

‘‘சோஷியல் மீடியா நம் வாழ்வின் முக்கியமான பகுதியா ஆகிடுச்சு. இது மறுக்கமுடியாத உண்மை. ஆனா, அதை எப்படிப் பயன்படுத்துறோம்்கறது நம்ம கைலதான் இருக்கு. சோஷியல் மீடியா ஏற்படுத்தும் மாயைகளைப் புரிந்துகொண்டு தேவையற்ற மன அழுத்தங்களிலிருந்து உங்களை விடுவியுங்கள். ட்விட்டர், பேஸ்புக்ல பாசிட்டிவிட்டி சம்பந்தமா எத்தனையோ இருக்கு. அதையெல்லாம் பின் தொடர்ந்து வெச்சுக்கங்க. எல்லாத்துக்கும் ஒரு நோட்டிபிகேஷன் வெச்சுக்காதீங்க. இதன்மூலம் நாம கவனம் சிதறாமப் பார்த்துக்க முடியும். ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரத்திற்கு மேல பயன்படுத்தக் கூடாதுன்னு உங்களுக்கு நீங்களே ஒரு கோடு போட்டுக்கோங்க. இப்ப வர்ற நிறைய மொபைல்ல Digital Well Being சம்பந்தமான செயலிகள் எல்லாம் வந்துருச்சு. அதுல ரொம்ப சுலபமா , பேஸ்புக், ட்விட்டர், அவ்வளவு ஏன் இணைப்ய பயன்பாட்டக்கூட உங்களால கட்டுக்குள்ள கொண்டு வர முடியும். இறுதியா சோஷியல் மீடியா நண்பர்கள்ல குவான்டிட்டிய விட குவாலிட்டிதான் முக்கியம்ங்கறத புரிஞ்சுக்கோங்க.

செல்பி எடுக்கறதையோ, அதை போஸ்ட் பண்றதையோ தப்புன்னு சொல்லல. சொல்லப்போனா செல்பி எடுப்பதன் மூலம் ஒருவரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது அறிவியல் உண்மை. ஆனா அதுக்காக எந்நேரமும், பில்டர்ஸ், போட்டோஷாப்னு போலியான உலகத்துல சஞ்சரிக்கறது தப்பு. பெரிய பெரிய நிறுவனங்களே ‘fair’னு விளம்பரம் பண்றது தப்புன்னு மாற முயற்சி பண்றாங்க. நாம ஏன் நம்ம புகைப்படத்துக்கு சுண்ணாம்பு அடிக்கணும். இயல்பா இருப்போம். நல்லா இருப்போம்.”

‘‘ம்ம்ம்... டாக்டர்?”

‘‘என்ன பண்ணிக்கிட்டு இருக்க மினி?”

“அந்த சண்டை போட்ட அக்கௌன்ட்ட ம்யூட்ல போட்டுட்டேன் டாக்டர். இனி எல்லாம் சுபம்.”

(மினி-மன உரையாடல் தொடரும்)

சமூக வலைதளங்கள்

ஆரோக்கியமில்லாத பழக்கங்கள்

லைக்ஸ், பாலோயர்களைக் கவனித்துக்கொண்டே இருப்பது.

சும்மா இருக்கும் எல்லா நேரத்திலும் சோஷியல் மீடியாவில் எதையாவது செய்துகொண்டிருப்பது.

 முன்னாள் காதலர்களை வேவு பார்ப்பது.

 அதிக பாலோயர்கள் பெற்றிருப்பவர்களுடன் நம்மை ஒப்பிட்டு வேதனை அடைவது.ஆரோக்கியமான பழக்கங்கள்

 உங்களின் ஆதர்சங்களை பாலோ செய்வது. மக்களையும் உலகையும் புரிந்துகொள்ள மட்டும் சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துவது.

 ‘இவ்வளவு நேரம்தான் பயன்படுத்த வேண்டும்’ என்கிற சுயகட்டுப்பாடுடன் இருப்பது.

 பொக்கிஷமாக நினைக்கும் புகைப்படங்களை மட்டும் பகிர்வது.