Published:Updated:

`சொற்ப வருமானமும் இல்லை; அரசு எந்த உதவியும் செய்யவில்லை!’ - கலங்கும் புதுவை மாற்றுத்திறனாளிகள்

புதுச்சேரி
புதுச்சேரி

எந்த ஒரு கோரிக்கை அரசாங்கத்துக்கு வைக்கப்பட்டாலும் அதற்கு எங்களிடம் போதிய நிதி இல்லை என்பதே அரசின் ஒருமித்த குரலாக இருக்கிறது.

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்காலில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவை அரசு நிவாரண உதவிகள் எதுவும் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

காரைக்கால்
காரைக்கால்

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு மே 3 -ம் தேதிக்குப் பிறகு, மேலும் நீட்டிக்கப்படுமோ என்ற பேச்சு மக்களிடையே நிலவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசிக்கிறார்கள். அவர்கள் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் வறுமை நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் வழங்கப்படவில்லை என்கிறார்கள்.

இதுபற்றி கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவர் மோசஸ்ராஜிடம் பேசினோம்.``புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவை அரசு நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை மாநிலத்தைப்போல் இலவச ஹெல்ப்லைன் அறிவிக்க வேண்டும்.

அத்தியாவசியமான பொருள்களை மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்குச் சென்று வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வழங்கும் ரூ.3,000 மாத உதவித் தொகையை உயர்த்தி இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் ரூ. 5,000-மாக வழங்க வேண்டும்.

என்னை எடுத்துக்கொண்டால் நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தஞ்சாவூர் சரபோஜி கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். அக்கா, தம்பி இருக்கிறார்கள். எங்க அப்பா எங்களை அநாதையாக்கிட்டு இறந்துப் போய்ட்டாங்க. அம்மாதான் கஷ்டப்பட்டு பஜ்ஜி கடை வைத்து வியாபாரம் செய்து ,எங்களைப் படிக்க வைக்கிறாங்க. இந்த ஊரடங்கால் அந்த சொற்ப வருமானத்துக்கும் வழியில்லை.

இந்த இக்கட்டான தருணத்தில் புதுவை அரசாங்கம் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று எந்த உதவியும் செய்யவில்லை. அரிசியெல்லாம் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படுகிறது. அதை உதவியாகக் கணக்குக் காட்டப்படுவது மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்யும் மிகப் பெரிய கொடுமையாகும். எந்த ஒரு கோரிக்கை அரசாங்கத்துக்கு வைக்கப்பட்டாலும் அதற்கு எங்களிடம் போதிய நிதி இல்லை என்பதே அரசின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஒரு ரூபாய்கூட மாற்றுத்திறனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட விஎல்லை. எங்கள் அவல நிலை குறித்து முதல்வருக்கு 3 முறைக்கும் மேலாக ட்விட்டரில் கடிதம் எழுதியுள்ளேன். சமூக நலத்துறைக்கு உதவி கோரி மனு அனுப்பினேன், எதற்கும் பலனில்லை. மாற்றுத்திறனாளிகளின் கண்ணீரைத் துடைக்க முடியாத நிலையில், மாற்றுத்திறனாளியாக புதுவை அரசு உள்ளதா?" என்று வேதனையுடன் முடித்தார்.

மோசஸ்ராஜ்
மோசஸ்ராஜ்

இதுபற்றி காரைக்கால் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சத்யாவிடம் கேட்டோம். ``மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்துவது பற்றி அரசு சட்டசபையில் முடிவெடுக்க முடியும். சிவப்பு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது. 3 மாத காலத்துக்குரிய 45 கிலோ அரிசிக்கு ரூ.31 வீதம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் பணி நடந்து வருகிறது" என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு