Published:Updated:

`மூச்சுக்குழாய்க்குள் சிக்கிய மூக்குத்தி திருகாணி!' - லாவகமாக அகற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்

மூதாட்டி மற்றும் மருத்துவர் குழு
மூதாட்டி மற்றும் மருத்துவர் குழு

மூச்சுக்குழாய்க்குள் போய் மாட்டிக்கொண்ட மூக்குத்தி திருகாணியை அகற்றாமல் விட்டால், மூச்சுக்குமாய் பகுதி சீல் பிடித்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டம்மாள் விடுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மனைவி புஷ்பம். கடந்த சில தினங்களாகவே இவருக்கு வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்கு வெளியில் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்தான் திடீரென, தொடர்ந்து இருமும்போது சளியில் ரத்தம் வந்ததால், உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புஷ்பத்தைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழு, அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக் குழாயில் ஏதோ ஒரு சிறிய பொருள் அடைத்திருப்பதைக் கண்டறிந்தனர்.

திருகாணி
திருகாணி

இதையடுத்து, உடனே சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அது மூக்குத்தியில் இருக்கும் திருகாணி என்பதும் நுரையீரல் பகுதி சரிவர வேலை செய்யாமல் சுருங்கி இருப்பதும் தெரியவந்தது. திருகாணியை அக நோக்கி மூலம் அகற்றிவிட முடிவு செய்த மருத்துவர்கள் அக நோக்கி வழியே சிறிய இடுக்கி போன்ற ஒரு கருவியை மூச்சுக்குழாய்க்குள் செலுத்தி ஆணியின் நுனிப்பகுதியை இருகப் பிடித்து லாவகமாக அகற்றினர். மூச்சுக்குழாய்க்குள் சிக்கி இருந்த திருகாணியை எடுத்ததற்குப் பிறகு நோயாளி நலமுடன் இருக்கிறார். மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் தலைமையில், மருத்துவர்கள் தாமோதரன், ஆனந்த் பாபு ஆகியோர் கொண்ட குழு இந்தச் சிகிச்சையை மேற்கொண்டனர்.

`எனக்கே நான் புதிதாகத் தெரிகிறேன்!' -இளம்பெண்ணை நெகிழவைத்த புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்

இதுபற்றி மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ``பொதுவாக இதுபோன்ற உலோகப்பொருள்கள் மூச்சுக்குழாய்க்குள் உள்ளே சென்று அடைக்கும்போது உடனடியாக இருமலும், தும்மலும் வரும் இதன்மூலம் உள்ளே உலோகப் பொருள் இருப்பது கண்டறியப்படும். ஆனால், இவருக்கு மூக்குத்திக்குள் உள்ளே இருக்கும் திருகாணி மட்டும் கழன்று வலதுபக்க நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டிருந்துள்ளது. மூக்குத்தி வெளியில் கழன்று விழாததால், திருகாணி உள்ளே சென்றது அவருக்குத் தெரியவில்லை.

மூதாட்டி மற்றும் மருத்துவர் குழு
மூதாட்டி மற்றும் மருத்துவர் குழு

மூக்குத்தி திருகாணியை அகற்றாமல் விட்டால், மூச்சுக்குழாய் பகுதி சீல் பிடித்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் இருந்தது. இதுபோன்ற நிலையில், பெரும்பாலும் மார்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். ஆனால், புஷ்பாவுக்கு மயக்க மருந்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரச்னைகள் ஏதும் இல்லாமல், மூச்சுக்குழாய் வழியாக உணர்வு அகற்றி மருந்தைச் செலுத்தி திருகாணியை அகற்றிவிட்டோம். நோயாளி நலமுடன் உள்ளார். இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2 லட்ச ரூபாய்க்கு அதிகமாகத்தான் கட்டணம் இருக்கும். அரசு மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. நோயாளி நலமுடன் உள்ளார் " என்றார்.

அடுத்த கட்டுரைக்கு