Published:Updated:

`செயற்கை சுவாசம்; 28 மருத்துவர்கள் கண்காணிப்பு! - தீவிர சிகிச்சையால் மீண்டுவந்த புதுக்கோட்டைப் பெண்

நோய்த் தொற்று ஏற்பட்ட அந்தப் பெண்ணின் இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் குறையத் தொடங்கிவிட்டன.

தீவிர சிகிச்சையால் மீண்டு வந்த இளம்பெண்
தீவிர சிகிச்சையால் மீண்டு வந்த இளம்பெண்

புதுக்கோட்டை மாவட்டம் கம்மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னாத்தாள்(26). நோய்த் தொற்று காரணமாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் குழு, அவருக்கு ரத்தத்தில் நோய்த்தொற்று இருப்பதையும் இதனால், அவருக்கு இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாடுகள் குறைந்து வருவதையும் கண்டறிந்தனர். ரத்தம் உறைவது குறைந்து காணப்பட்டதால், அனைத்து இடங்களிலும் ரத்தக் கசிவு ஏற்படத் தொடங்கியுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

இதையடுத்து, உடனடியாக, ரத்தம் உறைதலைச் சீர் செய்வதற்காக, ரத்தக் காரணிகளான கிரையோபிரேசிப்பிடேட் என்ற திரவத்தைச் செலுத்தினர். மேலும், தஞ்சாவூர் திருச்சி, சிவகங்கை மருத்துவமனைகளிலிருந்தும் இந்தத் திரவம் பெறப்பட்டு நோயாளிக்குச் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சின்னாத்தாள், மூச்சுவிட சிரமப்பட்டதால், கழுத்தில் துளையிட்டு ட்ரக்கியோஸ்டோமி குழாய் மூலம் 23 நாள்களுக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மூச்சுக்குழாயையும் அடிக்கடி சுத்தம் செய்தனர். உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தும் செயல் குறைந்து வந்ததால், 28 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு சின்னாத்தாளுக்குத் தொடர் சிகிச்சை அளித்தனர். சுய நினைவு இல்லாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்த சின்னாத்தாள், 42 நாள்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, தற்போது நலமுடன் உள்ளார்.

தமிழகத்தில் நம்பர் 1; தனியாரை விஞ்சியது!-100 ஆண்டுகளைக் கடந்து சாதிக்கும் தஞ்சை அரசு கண் மருத்துவமனை

இதுபற்றி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மீனாட்சி சுந்தரம் கூறுகையில்,``நோயாளியின் இதயம், கிட்னி என அனைத்து முக்கிய உறுப்புகளும் செயலிழக்கும் நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்டி ஆர்கான் பெயிலியர் என்று வரும் நோயாளியைக் குணப்படுத்துவது என்பது சவாலான காரியம். நோயாளியின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று சவாலாக எடுத்துக்கொண்டே சிகிச்சைகளை ஆரம்பித்தோம். நோயாளி அனுமதிக்கப்பட்ட உடனே, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 6 நாள்கள் வரையிலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும், முன்னேற்றம் இல்லை. இதையடுத்து, உடனே ட்ரக்கியோஸ்டோமி குழாய் மூலமாக 23 நாள்கள் வரையிலும் செயற்கை சுவாசம் அளித்தோம்.

தீவிர சிகிச்சையால் மீண்டு வந்த இளம்பெண்
தீவிர சிகிச்சையால் மீண்டு வந்த இளம்பெண்

தொடர்ந்து, ரத்தம் உறைதலைச் சீர் செய்ய கிரையோபிரேசிப்பிடேட் திரவம் 28 பாட்டில்கள் வரையிலும் செலுத்தப்பட்டுள்ளது. ரூ.42,000 மதிப்புள்ள பேக்டர் 8 எனும் ஊசியும் போடப்பட்டது. குறிப்பாக, நோயாளியை என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தேன். 28 மருத்துவர்கள் அடங்கிய குழு இரவு பகலாக 42 நாள்கள் வரையிலும் தொடர் சிகிச்சை அளித்தனர். மகப்பேறு மருத்துவத் துறை, மயக்க மருத்துவத்துறை, நுரையீரல் மருத்துவத்துறையும் ஒருங்கிணைந்து 24 மணிநேரமும் செயல்பட்டனர். இதன் விளைவாக இன்று சின்னாத்தாள் மீண்டுவந்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றால், 15 லட்ச ரூபாய் வரையிலும் செலவு செய்ய வேண்டி இருக்கும்" என்றார்.