Published:Updated:

மடியில் லேப்டாப், பாக்கெட்டில் மொபைல்... பாதிக்கப்படும் இனப்பெருக்கத் திறன்! -ஆண்களுக்கு ஓர் அலெர்ட்

ஒவ்வோர் ஆண்டும், நாட்டில் குழந்தையின்மைப் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காண முடிகிறது. அதிகப்படியான கதிர்வீச்சுகள் நம் உடல்நலம், மனநலத்துடன் சேர்த்து, இனப்பெருக்கத் திறனையும் பாதிக்கக்கூடியவை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"கோவிட்-19" கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள லாக்-டவுண் காரணமாக, நம்மில் பலர் கடந்த சில வாரங்களாகவே வீட்டிலிருந்துதான் அலுவலகப் பணிகளை மேற்கொண்டுவருகிறோம். அலுவலகம் சென்று பணிபுரிவதற்கும், வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளைச் செய்வதற்கும் உள்ள வித்தியாசங்கள் இந்த இரண்டு வாரங்களில் நமக்கு நன்றாகவே விளங்கியிருக்கும்.

Work from home
Work from home

அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சில பொதுவான கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், நம் வீடே நமக்கான அலுவலகம் என்று வரும்போது, கட்டுப்பாடுகள் எல்லாம் நமக்கு நாமே விதித்துக்கொண்டால் மட்டும்தான்.

கால் மீது கால் போட்டுக்கொண்டு, லேப்டாப்பை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, நம் வசதிக்கு ஏற்ப நமக்குப் பிடித்த போஸ்ச்சர்களில் எல்லாம் அமர்ந்து வேலைபார்ப்பது 'வொர்க் ஃப்ரம் ஹோம்'-ல் சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் வந்ததிலிருந்து போன், லேப்டாப், ஐ-பேட் எல்லாம் நம் குலசாமிகளாகவே மாறிவிட்டன.

லேப்டாப்
லேப்டாப்

'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப் பிடிப்பதுந்தன் முகமே... தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசிக் காட்சிக்குள் நிற்பதும் உன் முகமே...' என்ற ரேஞ்சுக்கு கேட்ஜெட்ஸை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு தீயாக வேலைசெய்துகொண்டிருக்கும் நம் கண்களுக்கு, அந்த கேட்ஜெட்ஸ் வெளியிட்டுக்கொண்டிருக்கும் கதிரியக்கங்களின் விளைவுகள் பற்றித் தெரிவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் மடியில் வைத்துக்கொண்டிருக்கும் லேப்டாப், பாக்கெட்டில் வைத்திருக்கும் மொபைல் போன், படுக்கையின் மீது கிடக்கும் ஐ-பேட் போன்ற எல்லா எலெக்ட்ரானிக் பொருள்களும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்,கூடிய ஒருவித கதிரியக்கத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

கேட்ஜெட்
கேட்ஜெட்

இவை நம் உடல்நலத்தோடு சேர்த்து, இனப்பெருக்கத் திறனையும் பாதிக்கக்கூடியவை. எனவே, இதை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கேட்ஜெட்ஸ் வெளியிடும் கதிரியக்கம் மற்றும் அதனால் நமக்கு ஏற்பட்டும் பாதிப்பு குறித்து ரேடியோதெரபிஸ்ட் ரத்னா தேவியிடம் பேசினோம்.

ஓர் ஆண் தொடர்ந்து தன் மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டிருக்கும்போதும், பேன்ட் பாக்கெட்டில் மொபைல்போனை வைத்திருக்கும்போதும் அவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம், அவரின் விதைப்பையின் வெப்பத்தை அதிகரிக்கிறது. இந்த அதிகப்படியான வெப்பநிலையில் விந்தணுக்களின் உற்பத்தி நின்றுபோகிறது.
பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்

"நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருள்களான தொலைக்காட்சி, லேப்டாப் தொடங்கி கையில் வைத்திருக்கும் மொபைல் வரை எல்லாமே ரேடியோ அலைகளை (Radio waves) வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இவை, நம் உடலில் ஊடுருவிச் செல்லக்கூடிய திறன் வாய்ந்தவை.

ரேடியோதெரபிஸ்ட் ரத்னா தேவி
ரேடியோதெரபிஸ்ட் ரத்னா தேவி

சாதாரணமாகவே, நம்மைச் சுற்றி சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் (Ultraviolet Waves) போன்ற பல்வேறு விதமான நுண்ணலைகள் (Microwaves) பரவிக் காணப்பட்டாலும் அவற்றை எல்லாம் ஓரளவுக்குத் தாங்குகிற சக்தி இயற்கையாகவே நமக்கு உண்டு. ஆனால், அந்தக் கதிர்வீச்சுகள் அதிக அளவில் நம் உடலில் படும்போது, அதற்கேற்ப பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்த ரேடியோ அலைகள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. கதிர்வீச்சுகள் அதிகம் இருக்கும் இடத்தில் வசிக்கும் ஒரு குழுவினரும், கதிர்வீச்சுகளின் தாக்கம் குறைவாக இடத்தில் வசிக்கும் மற்றொரு குழுவினரும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கதிர்வீச்சு
கதிர்வீச்சு

இதன் முடிவில், கதிர்வீச்சுகளின் தாக்கம் குறைவாக உள்ள இடத்தில் வாழும் மக்கள் அதிக ஆரோக்கியத்துடனும், மன அமைதியுடனும் காணப்பட்டதும், கதிர்வீச்சு அதிகமாக உள்ள இடங்களில் வாழும் மக்களுக்கு ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

பாதுகாப்பான செக்ஸ்... குழந்தைக்கான திட்டம்... கொரோனா கால தாம்பத்ய சந்தேகங்களும் மருத்துவர் விளக்கமும்!

இந்த அதிகப்படியான கதிர்வீச்சுகள் நம் உடல்நலம், மனநலத்துடன் சேர்த்து இனப்பெருக்கத் திறனையும் பாதிக்கக்கூடியவை. ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் குழந்தையின்மைப் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காண முடிகிறது. இந்தப் பிரச்னையால் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறவர்கள், எலெக்ட்ரானிக் மென்பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய வேலைசெய்பவர்களே! குறிப்பாக ஆண்கள்.

மடியில் லேப்டாப்
மடியில் லேப்டாப்

சிலர், தங்கள் வசதிக்காக லேப்டாப் போன்றவற்றை மடியில் வைத்துக்கொண்டு வேலைசெய்வார்கள். அப்போது, அவர்களின் மடியில் இறங்கும் அதிகப்படியான கதிர்வீச்சும், அதன் வெப்பமும் அவர்களின் விதைப்பையின் இயற்கையான வெப்பநிலையைப் பாதித்து விந்தணுக்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் ஆண்களுக்கு குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படுகிறது. பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதேபோல, நாம் பயன்படுத்தும் மொபைல்போன்களும் அதிக அளவு கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. ஒரு நாளைக்கு 8-21 நிமிடங்கள் வரைதான் போன் பேச வேண்டும். ஒருவர் மணிக்கணக்காக போன் பேசுவதாலும், எப்போதும் ஹெட்போனை காதிலேயே போட்டிருப்பதாலும் காதுக்குள் செல்லும் கதிர்வீச்சுகள் காதிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து அவற்றில் கட்டியை ஏற்படுத்தலாம்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க, தேவையில்லாத நேரங்களில் வீணாக எலெக்ட்ரானிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக மடியில் லேப்டாப்பை வைத்துப் பயன்படுத்தவே கூடாது.

தேவையில்லாத நேரத்தில் Data, Wifi போன்றவற்றை ஆஃப் செய்து வைக்கலாம். கேட்ஜெட்டுகளை தலைக்கு அருகில் வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது. சட்டை, பேன்ட் பாக்கெட்டுகளில் மொபைல்போனை வைப்பதைத் தவிர்த்து, வாலெட்டில் வைத்துக்கொள்ளலாம்" என்றார் ரத்னா தேவி.

``கொரோனா வைரஸ்களிலிருந்து தற்காக்க...  காரத்தன்மை உணவுகள்!" - ஊட்டச்சத்து நிபுணர்

இந்தக் கதிரியக்கம் மனிதர்களின் இனப்பெருக்கத் திறனை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரனிடம் பேசினோம்.

 பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்
பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்

"எலெக்ட்ரானிக் பொருள்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள், பெண்களின் இனப்பெருக்கத்திறனை பாதிக்கும் என்று இதுவரை ஆய்வுகள் எதுவும் கூறவில்லை. ஆனால், இவை ஆண்களின் இனப்பெருக்கத் திறனை அதிகமாகப் பாதிக்கின்றன. ஆண்களின் உடலின் சாதாரண வெப்பநிலையைவிட அவர்களின் விதைப்பையின் வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரி குறைவாகவே இருக்கும்.

ஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்கு... அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்!

இந்த வெப்பநிலைதான் விந்தணுக்கள் உற்பத்தியாகவும், உயிர்ப்புடன் இருக்கவும் உதவுகிறது. ஓர் ஆண் தொடர்ந்து தன் மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டிருக்கும்போதும், பேன்ட் பாக்கெட்டில் மொபைல்போனை வைத்திருக்கும்போதும் அவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம், அவரின் விதைப்பையின் வெப்பத்தை அதிகரிக்கிறது.

விந்தணுக்கள்
விந்தணுக்கள்

இந்த அதிகப்படியான வெப்பநிலையில் விந்தணுக்களின் உற்பத்தி நின்றுபோகிறது. விந்தணுக்கள் உற்பத்தியானாலும் அவை வீரியத்தன்மை இல்லாமலும், நகரும் தன்மையற்றதாகவும் (Sperm Motility) இருக்கின்றன. எனவே, ஆண்கள் இதுபோன்ற கதிரியக்கப் பொருள்களை மடியிலும், பேன்ட் பாக்கெட்டுகளிலும் வைத்திருப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்" என்றார் கார்த்திக் குணசேகரன்.

சொகுசாக வேலைசெய்வதைவிட, பாதுகாப்பாக வேலைசெய்வது முக்கியம். லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு பணிபுரிவதையும், கேட்ஜெட்ஸை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதையும் தவிர்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு