Published:Updated:

15 நாட்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்திய பில்வாரா... வியந்த இந்தியா!

கொரோனாவை முறியடித்த பில்வாரா மாவட்டம்
கொரோனாவை முறியடித்த பில்வாரா மாவட்டம்

மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் தற்போது, இந்த மாவட்டத்தில் ஒருவருக்குகூட புதியதாகக் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதுதான் இமாலய வெற்றி.

ராஜஸ்தானில் மேவார் பகுதியில் பில்வாரா மாவட்டம் அமைந்துள்ளது. சுமார் 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாவட்டத்தில் மார்ச் 19-ம் தேதி, முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது. திடீரென்று இந்த மாவட்டத்தில் ஏராளமான கொரோனா நோயாளிகள் இருப்பது கண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள். கொரோனா தொற்று தாக்கிய இருவர் இறந்தனர். அவ்வளவுதான்... பதறியடித்துக்கொண்டு எழுந்தது பில்வாரா மாவட்ட நிர்வாகம்.

Representational Image
Representational Image

கொரோனா தொற்று தாக்கியவர்கள் இருந்த பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உள்ளே, வெளியே போக யாருக்கும் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. சுதாரித்துக்கொண்ட மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பட், சுகாதாரப்பணியாளர்களை பம்பரமாகக் களத்தில் இறக்கிவிட்டார். முதுலில் மார்ச் 20-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை மாவட்டத்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மாவட்டத்திலுள்ள 28 லட்சம் மக்களுக்கும் வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். முடிவில் 11,000 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அதில், ஃப்ளூ போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த 7,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 2,816 பேரிடத்தில் சோதனை நடத்தப்பட்டு 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் 20-ம் தேதி முதலே அரசு மற்றும் தனியார் துறை மருத்துவர்கள் இணைந்து மக்களுக்கு சோதனை நடத்த தொடங்கினர். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் தவிர வேறு யாருக்கும் சாலைகளில் செல்ல முடியாது என்கிற அளவுக்கு ஊரடங்கு பின்பற்றப்பட்டது. ரேஷன் பொருள்களைத் தேடி மக்கள் கடைகளுக்குச் செல்ல வேண்டாம். மாவட்ட நிர்வாகமே ரேஷன் பொருள்கள் மக்கள் வீடு தேடி வரும் வகையில் பார்த்துக் கொண்டது.

மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட்
மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட்

தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், தர்மசாலாக்கள் முதற்கொண்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. இவற்றின் வழியாக 15,000 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் உருவாக்கப்பட்டன. பில்வாரா மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து யாரும் பில்வாரா மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

``கமிஷன் ஒருபுறம்… பழைய பகை மறுபுறம்!” - விஜயபாஸ்கருக்கு வில்லங்கமான விவகாரங்கள்!

மாவட்டத்தில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்களும் அடையாளம் காணப்பட்டு முற்றிலும் மூடப்பட்டன. பாசிட்டிவ் எனக் கண்டுபிடிக்கப்பட்ட 27 பேருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. அதில், 2 பேர் உயிரிழந்தனர். 13 பேர் முற்றிலும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 12 பேர் மட்டுமே இப்போது சிகிச்சையில் உள்ளனர். இவர்களும் விரைவில் குணமாகி விடுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் நம்புகிறார். மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் தற்போது, இந்த மாவட்டத்தில் ஒருவருக்குகூட புதியதாகக் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதுதான் இமாலய வெற்றி. எனினும், ஊரடங்கு வரும் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் கூறுகையில், ``ஒவ்வொரு நாளும் அரசு வாகனங்களில் சந்தேகத்துக்குரியவர்கள் அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. எடுக்கப்படும் மாதிரிகள் உடனடியாக ஜெய்ப்பூருக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. பாசிட்டிவ் என வந்தவர்கள் சிகிச்சைக்கும் அவர்களின் உறவினர்கள் உடனடியாகத் தனிமையும் படுத்தப்பட்டனர். பாசிட்டிவான நபரின் கான்டக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் மற்றோர் இடங்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதற்காக, 27 ஹோட்டல்களில் 1,451 அறைகள் தயார்படுத்தப்பட்டன. துணை ஆட்சியர்கள் முதல் தலையாரிகள் வரை அத்தனை அரசு ஊழியர்களையும் களத்தில் இறக்கினோம். கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் போராடினோம். அதற்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது'' என்றார்.

கொரோனா
கொரோனா

தற்போது இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கெளாபா, ``வரும் 14-ம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு அமலில் இருக்கும் மாவட்டங்களில் பில்வாரா அணுகுமுறைதான் கொரோனாவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார். வரும் 14-ம் தேதிக்குப் பிறகு, ஒருவேளை ஊரடங்கு இன்னும் நீட்டிக்கும்பட்சத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் சில மாவட்டங்களில் பில்வாரா மாடல் பாணிதான் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது. இப்போது, 144 தடையுத்தரவை மதிக்காமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர். ஆனால், பில்வாரா மாடல் பின்பற்றப்பட்டால், மக்கள் வீட்டில் தனிமைச் சிறையில்தான் இருக்க வேண்டியது இருக்கும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு