Published:Updated:

`மருத்துவ அறிக்கையால் அப்செட்?! ; ரத்த அழுத்தம் சீரானதும் டிஸ்சார்ஜ்’ - ரஜினிகாந்த் ஹெல்த் அப்டேட்ஸ்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

`கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், சளி காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. இந்தச் சமயத்தில்தான் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது...’

நடிகர் ரஜினிகாந்த் வரும் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருந்த சூழலில், `அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துவந்த நிலையில், படக்குழுவில் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

`அண்ணாத்த’ படக்குழுவுடன் ரஜினி
`அண்ணாத்த’ படக்குழுவுடன் ரஜினி

இந்தநிலையில் ரஜினியும் தன்னை ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்தச் சூழலில் இன்று நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், ``ஐதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை, கொரோனா அறிகுறிகளும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவ அறிக்கை
மருத்துவ அறிக்கை

ரஜினியின் உடல்நிலை தொடர்பாக அவருக்கு நெருக்கமான சிலரைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கடந்த மார்ச் மாதமே ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக அது தள்ளிப்போனது.

இந்தச் சூழலில்தான் `அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் அதிகப்படியான குளிர் நிலவியது. பனி காரணமாக அவருக்குச் சளி பிரச்னை ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், சளி காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. இந்தச் சமயத்தில்தான் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ரஜினிக்கும் முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் கட்சி ; விஜயகாந்த் முதல் ரஜினி வரை... எம்.ஜி.ஆரை முன்னிறுத்துவது ஏன்?

என்றாலும், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். இன்று காலையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததோடு, ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தது. இன்று காலையில் இரண்டாம்கட்ட கொரோனா பரிசோதனைக்காக (ஸ்கேன் மூலம் பரிசோதனை) மருத்துவமனை செல்லும் சூழல் ஏற்பட்டது. இரண்டாம்கட்ட கொரோனா பரிசோதனையிலும் ரிசல்ட் நெகட்டிவ் என்றுதான் வந்தது. என்றாலும், அது குறித்து அவர் நினைத்துக்கொண்டே இருந்த காரணத்தால் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்திருக்கிறது. மேலும், தனிமைப்படுத்துதலில், ஹைதராபாத்தில் இருந்துகொண்டே கட்சிப் பணிகளில் கவனம் செலுத்திய ரஜினி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வுப் பணியில் தொய்வு இருந்ததாக அப்செட்டில் இருந்தாராம். இதுவும் ரத்த அழுத்தத்துக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இதன் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் அவரைச் சில மணி நேரம், சிகிச்சை பெற்று, ரத்த அழுத்தம் சீரானதும் செல்ல வலியுறுத்தியிருக்கிற. அதனால்தான் அவர் மருத்துவமனையில் இருக்கச் சம்மதித்தார். இந்தச் சூழலில் மருத்துவமனை நிர்வாகம், ரஜினியிடம் கலந்தாலோசிக்காமல், மருத்துவ அறிக்கை வெளியிட்டுவிட்டது. இதனால், சாதாரண விவகாரம், பெரிதாக்கப்பட்டுவிட்டதாக ரஜினி கடிந்துகொண்டாராம். தனது உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பவர்களிடம், அவரே பதிலளித்துவருகிறார். ரத்த அழுத்தம் சீரானதும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்” என்றனர் விரிவாக.

`ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க சிகிச்சை;  ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது!’ - மருத்துவமனை நிர்வாகம் #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு