உலகமே கோவிட் - 19 பிடியில் சிக்கியிருந்தபோது, தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளிலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தப்பட்டனர். மக்கள் பலரும் தங்களை கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள, முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இன்னொரு தரப்போ, தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஒருவரின் சுய விருப்பம் என்பதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமின்றி அதை தவிர்த்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், தற்போது உலகெங்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களால் மீண்டும் கொரோனா நோய்த் தொற்று உண்டாகும் அச்சுறுத்தல் உள்ளது என கனடாவில் உள்ள டொரொன்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய மாடலிங் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும், செலுத்திக் கொள்ளாதவர்களும் ஒன்றாக ஈடுபடுத்தப்பட்டனர். அதில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்து அதை தவிர்த்தவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ரிஸ்க்கை விளைவிப்பதாக உள்ளனர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத இரண்டு குழுக்களை ஒன்றாக ஆய்வில் ஈடுபடுத்தியதில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைவிட, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக் குறைவான ஆபத்தே உண்டாகிறது என 'கனடியன் மெடிக்கல் அசோசியேஷன்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.

'தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஒருவரது சுய முடிவு. இருந்த போதிலும் இதனால் இவர்கள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை, இவர்களால் தடுப்பூசி செலுத்திக்கொண்ட, இவர்களைச் சுற்றி உள்ளவர்களும் பாதிக்கப்படக் கூடும்' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.