Published:Updated:

கொரோனா வைரஸுக்கு மருந்து பாக்டீரியாவா! - ஆய்வுகள் சொல்வது என்ன?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஒரு கொடிய வைரஸ் கிருமியை எதிர்ப்பதற்காக பாக்டீரியா முன்னிறுத்தப்படுவது இதுவே முதல்முறை...

ஒரு பாக்டீரியா, வைரஸை எதிர்க்கும் ஹீரோவாக இருக்க முடியுமா? உலகத்தின் அச்சுறுத்தல் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கேள்வியும் இதுதான். நூறு வருடத்துக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட காசநோய் தடுப்பதற்கான பிசிஜி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யும் என்கிற ஆய்வை முன்வைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, மாசேச்சூட்ஸ் என உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவப் பணியாளர்கள் தற்போது இதை தங்களுக்குள் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நெதர்லாந்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களில் இந்தச் சோதனை கடந்த 10 நாள்களுக்கு முன் தொடங்கியது.

பிசிஜி
பிசிஜி

பிசிஜி தடுப்பூசியின் விநோத வரலாறு..

கொரோனா தற்போது உலகத்தைப் பயமுறுத்திக் கொண்டிருப்பதுபோல கடந்த நூற்றாண்டில் காசநோய் உலக மக்களை அச்சுறுத்தி வந்தது. பிரிட்டன் போன்ற நாடுகளில் பெரும்பாலும் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்ந்த மக்களை அதிகம் பாதிக்கத் தொடங்கியது. சுமார் 10 சதவிகித மக்கள் இதனால் உயிரிழந்தார்கள். 1900-களில் அதற்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நுண்ணுயிரியல் ஆய்வாளர் ஆல்பர்ட் கால்மெட் மற்றும் கால்நடை நுண்ணுயிரியல் ஆய்வாளர் கமில் குயரன் களமிறங்கினார்கள். மனிதர்களில் காசநோய் உண்டாக்கும் மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் நோய்க்கிருமிகளை முதலில் கிளசரின்/உருளைக்கிழங்கு/லிபிட் ஊடகத்தில் வளர்க்க முயற்சி செய்தார்கள். தொடக்கத்தில் அந்த ஊடகத்தில் பாக்டீரியாவின் வளர்ச்சி கட்டுப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த ஊடகத்துக்கு எதிரான பாக்டீரியாவின் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது.

இரண்டாம் உலகப்போர் சமயம் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு மந்தை மந்தையாக இறந்த நிலையில் பிசிஜி தடுப்பூசிதான் மனிதகுலத்துக்குக் கைகொடுத்தது.

மக்களை அச்சுறுத்திய சின்னம்மைக்கான எதிர்ப்பு மருந்தை, சின்னம்மை பாதிக்கப்பட்ட மாட்டிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் வழியாகக் கண்டுபிடிக்கப்பட்டதை உதாரணமாக வைத்து, காசநோய் பாதிக்கப்பட்ட மாட்டின் கழிவுகளில் இருந்து வளர்ப்பு ஊடகத்தை உருவாக்கினார்கள். மாட்டில் மைக்கோபாக்டீரியம் போவிஸ் என்னும் பாக்டீரியா காசநோய் உண்டாக்கியது. பல ஆண்டுகள் வைக்கப்பட்ட இந்த போவிஸ் ஊடகம் மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் வளருவதை 80 சதவிகிதம் வரைக் கட்டுப்படுத்தியது. அதிலிருந்து உருவாக்கப்பட்ட தடுப்பூசி அந்த ஆய்வாளர்களின் பெயரிலேயே பேசில்லஸ் கால்மெட் குயரன் (பிசிஜி தடுப்பூசி) என அழைக்கப்பட்டது. அன்றுமுதல் பல்வேறு நாடுகளில் காசநோய்க்கு எதிரான மருந்தாக பிசிஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் சமயம் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு மந்தை மந்தையாக இறந்த நிலையில் பிசிஜி தடுப்பூசிதான் மனிதகுலத்துக்குக் கைகொடுத்தது. தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சில நாள்களில் அல்லது சில மாதங்களில் புண் உருவாகும். அதுதான் நம் உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதற்கான அறிகுறி.

சரி, மாட்டில் கிடைத்த பாக்டீரியாவிலிருந்து உருவாக்கப்பட்ட தடுப்பூசி, வைரஸுக்கு எதிராகக் கைகொடுக்குமா?

COVID-19
COVID-19

உலகில் இதுநாள் வரை பாக்டீரியாவுக்கு எதிரான தடுப்பூசியாக பாக்டீரியாவும் வைரஸுக்கு எதிரான தடுப்பூசியாக மற்றொரு வைரஸும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மலேரியா நோய் உண்டாக்கும் பிளாஸ்மோடியம் மலேரியா போன்ற பாராஸைட்களுக்கு எதிராக பிசிஜி தடுப்பூசி செயல்படுவதாகச் சில ஆய்வுகள் இருக்கின்றன. ஆனால், உலக வரலாற்றில் இதுவரை வைரஸுக்கு எதிரான ஆயுதமாக பாக்டீரியா முன்னிறுத்தப்படவில்லை. ஆனால், உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் கோவிட் 19-க்கு எதிராக பிசிஜி என்னும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாக்டீரியல் தடுப்பூசி முன்னிறுத்தப்படுகிறது.

Corona தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சாத்தியக் கூறுகள் உள்ளனவா? | Corona Updates #DoubtOfCommanMan

இதுகுறித்து மேலதிகமாக மூத்த நுண்ணுயிரியல் ஆய்வாளர் டாக்டர் தியாகராஜன் விளக்குகையில், ``பிசிஜி நேரடியாக கோவிட்-19-க்கு எதிரான தடுப்பு சக்தியைக் கொடுப்பதில்லை. காசநோய்க்கு எதிரான தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்ட பிறகு டி-லிம்ப்போசைட் எனப்படும் செல்கள் சார்ந்த தடுப்பு சக்தியை அது உடலில் உருவாக்குகிறது. அது, நம்முடைய இம்யூன் சிஸ்டத்தை எந்தவிதமான நோய்க்கிருமிகள் தாக்கினாலும் அதைத் தாங்கிக் கொள்ளக்கூடிய பாதுகாப்பைக் கொடுக்கும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கோவிட்-19 உடலில் தென்பட்டாலும் ஒரு சிலபேரில் நோய்த்தாக்கம் இருப்பதில்லை. அவர்களை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு பிசிஜி தடுப்பூசி போடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனால், பிசிஜி அந்த எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிற அனுமானம் மட்டுமே தற்போது முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எப்படி அது நிகழ்கிறது என்பது தொடர்பான ஆய்வு எதுவும் வெளியாகவில்லை” என்கிறார்.

வெறும் அனுமானத்தை வைத்து பிசிஜி உயிர்காக்கும் என நம்பலாமா?

25 வருடங்களாக 33-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 1,50,000 குழந்தைகளில் பிசிஜி செலுத்தப்பட்ட நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சுவாசக்குழாய் சார்ந்த நோய்கள் கட்டுப்படத் தொடங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நம்பலாம் என்கிற ஆதாரமும் கிடைக்கப்பெறுகிறது. எடைகுறைந்து பிறக்கும் குழந்தைகளின் மரணம் அதிகம் நிகழும் மேற்கு ஆப்பிரிக்காவில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளில் இந்த பிசிஜி தடுப்பூசி செலுத்தப்பட்டது. அது, பிறந்த குழந்தைகளின் மரண எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 25 வருடங்களாக 33-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 1,50,000 குழந்தைகளில் பிசிஜி செலுத்தப்பட்ட நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சுவாசக்குழாய் சார்ந்த நோய்கள் கட்டுப்படத் தொடங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலக வரலாற்றில் பலமுறை மனிதர்களுக்குக் கைகொடுத்த பிசிஜி இந்தமுறையும் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு