Published:Updated:

அலட்சியம் ஆபத்தானது; சருமத்தை பாதிக்கும் படர்தாமரை... காரணமும் தீர்வுகளும்!

படர்தாமரை
News
படர்தாமரை

உடல் பருமனாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் உடையவர்கள், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இது நாய், பூனையால் கூட மனிதர்களுக்குப் பரவலாம்.

அலட்சியம் ஆபத்தானது; சருமத்தை பாதிக்கும் படர்தாமரை... காரணமும் தீர்வுகளும்!

உடல் பருமனாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் உடையவர்கள், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இது நாய், பூனையால் கூட மனிதர்களுக்குப் பரவலாம்.

Published:Updated:
படர்தாமரை
News
படர்தாமரை

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடிய சரும நோயாக படர்தாமரை உள்ளது. தொற்றின் வீரியத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டால், உடல் முழுவதும் பரவி எரிச்சலை உண்டாகிவிடும். படர்தாமரையால் பாதிக்கப்பட்ட பலரும், தொற்று தீவிரமடைந்த பிறகே மருத்துவரை அணுகுகிறார்கள். ஆரம்பத்தில் சாதாரணமான நோயென்று அலட்சியப்படுத்துவதால், தொற்றின் பின்விளைவுகள் மோசமாவதுடன் அதை குணப்படுத்தவும் நீண்ட காலம் ஆகிறது.

வெப்பம், வியர்வை போன்ற காரணங்களால் ஏற்படும் படர்தாமரை ஆண்,பெண் இருவருக்கும் எளிதாக தொற்றிக் கொள்கிறது. குழந்தைகளை பாதிக்கக்கூடியதாகவும் உள்ளது. படர்தாமரை ஏற்படும் காரணங்களையும் தீர்வுகளையும் கண்டறிய, சருமநோய் மருத்துவர் ஷீஜா அருளிடம் பேசினோம்...

Skin Care
Skin Care
Photo by Sora Shimazaki from Pexels

``அதிகமான வியர்வை வெளியேறுதல், இறுக்கமான ஆடைகளை அணிவது உள்ளிட்டவற்றால் படர்தாமரை எளிதாகப் பரவுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல், சருமத்தின் மேல் பகுதியில் பரவக்கூடிய ஒரு வகையான டெர்மடோஃபைட் (Dermatophyte) கிருமியால் உருவாகக்கூடிய நோய் இது. ஆரம்பத்தில் சிறு சிவப்புப் புள்ளியாக வட்ட வடிவில் இருந்தாலும் வேகமாகப் பரவக்கூடிய இயல்பு கொண்டது. இதன் ஓரங்களில் சிறிய செதில்கள் காணப்படும். ஓரங்கள் தடித்தும் இருக்கலாம். தொற்றின் வீரியம் அதிகரிக்கும்போது சிறிய சீழ் கொப்புளங்களும் காணப்படலாம்.

என்ன காரணம்?

அதிகமான வியர்வை, இறுக்கமான ஆடைகளை அணிவது, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் சோப், டவல் போன்றவற்றைப் பயன்படுத்துவது, நீண்ட நேரமாக தண்ணீரில் இருப்பது போன்றவை படர்தாமரை ஏற்படுவதற்கான காரணங்கள். மேலும், உடல் பருமனாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் உடையவர்கள், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்புள்ளது. இது நாய், பூனையால் கூட மனிதர்களுக்குப் பரவலாம். ஏற்கெனவே படர்தாமரை உள்ளவரிடம் இருந்து மற்றவர்களுக்கு 1-3 வாரங்களில் பரவக்கூடும்.

Skin Care
Skin Care

படர்தாமரையானது தொடை, பிறப்புறுப்பு, அக்குள், கால் நகங்கள், இடுக்குகளில் பரவும். இரண்டு வேளை குளிப்பது, உலர வைத்த ஆடைகள், வெயில் காலங்களில் காட்டன் ஆடைகள் அணிவது, உடல் பருமனைக் குறைப்பதன் மூலமாக மீண்டும் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம். வீட்டில் யாராவது ஒருவருக்கு படர்தாமரை ஏற்பட்டுவிட்டால் அவரது சோப் மற்றும் துணிகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை முற்றிமாகத் தவிர்ப்பதும், பாதிக்கப்பட்டவரின் துணிகளைத் தனியாக உலர வைப்பதன் மூலமாகவும் இதன் பரவுதலைத் தடுக்கலாம்.

செய்ய வேண்டியவை

படர்தாமரை தொற்று இருப்பது தெரிய வந்தால், உடனடியாக சரும மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும். அது தவிர நீண்ட நாள்கள் ஆகியும் படர்தாமரை தொற்று குறையாமல் அதன் தொந்தரவு நீடித்தால், வேறு சில பரிசோதனைகள் மூலமாக கிருமியின் வகையைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சையை வழங்குவார்கள்.

மருத்துவர் ஆலோசனை பெறாமல் அனுமதியின்றி மருந்துக்கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் பொதுவான மருந்துகள் மூலமாக நோயின் தன்மை குறையாது; அதன் வீரியம் அதிகரிக்கவே வாய்ப்புண்டு. படர்தாமரை தொற்று இருப்பவர்கள், கட்டாயமாக இரண்டு வேளை குளிப்பதும், நன்கு துவைத்த ஆடைகளைப் பயன்படுத்துவதும் நல்லது. அத்துடன் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடையைத் தவிர்த்து, தளர்வான காட்டன் துணிகளையே அணிய வேண்டும்.

சருமப் பராமரிப்பு
சருமப் பராமரிப்பு
pixabay

அதேசமயம், படர்தாமரை தொற்றினை நினைத்து பலரும் மிகவும் கவலையும் அச்சமும் கொள்கின்றனர். படர்தாமரை தீவிரமான தொற்று என்பது உண்மைதான். எனினும் தொற்று ஏற்பட்டதும் மருத்துவர் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில் குணம் பெறலாம்.

சரியான சிகிச்சையும், சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதும் படர்தாமரையை வெல்வதற்கான எளிய வழிகள்” என்கிறார் டாக்டர் ஷீஜா.