Published:Updated:

`9 மாத கர்ப்பம்; செவிலியரின் மருத்துவ சேவை’ - கர்நாடக முதல்வரின் பாராட்டைப் பெற்ற ரூபா

ரூபா
ரூபா

`எனது மாவட்டத்தைச் சேர்ந்த பெண் இவ்வளவு முயற்சி செய்கிறார் என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது' என கர்நாடக முதல்வர் பாராட்டியுள்ளார்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒரு செவிலியருக்கு போன் செய்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு, `பணிக்கு வர வேண்டாம். தயவுசெய்து வீட்டில் ஓய்வு எடுங்கள்' எனக் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட பெண்ணை முதல்வரே தொடர்புகொண்டு நலம் விசாரிக்க என்ன காரணம் என நினைக்கிறீர்களா?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கர்நாடக மாநிலம் கஜனுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா. ஜெயசமராஜேந்திரா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் ரூபா 9 மாதக் கருவை வயிற்றில் சுமந்து வருகிறார். அரசு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு அறிவித்துள்ளது. ரூபா இந்தக் கொரோனா காலத்தில் பேறுகால மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்திருக்கலாம்.

’9 மாத கர்ப்பிணி; நடுவழியில் பிறந்த குழந்தை.. 160 கி.மீ பயணம்’ -புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனை

இந்தக் கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவப் பணியாளர்களின் உதவி தேவை. இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் பணியாற்றுவது ஒரு செவிலியரான தன் கடமை என எண்ணிய ரூபா தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தினமும் தன்னுடைய கிராமத்திலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ரூபா அங்கு வரும் நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து வருகிறார்.

ரூபா
ரூபா

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா தொலைபேசி மூலம் ரூபாவை தொடர்புகொண்டு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ``ரூபா உங்களின் முயற்சியைக் கண்டு வியப்படைகிறேன். எனது மாவட்டத்தைச் சேர்ந்த பெண் இந்த இக்கட்டான நேரத்திலும் இவ்வளவு முயற்சி செய்கிறார் என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்றிலிருந்து தயவு செய்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பிரசவத்துக்கு பின்பு பணிக்குத் திரும்புங்கள். இன்று முதல் ஓய்வெடுங்கள், இது எனது தாழ்மையான வேண்டுகோள்” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரூபா, ``நான் பணியாற்றும் மருத்துவமனையைச் சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. அந்த மக்களுக்கு மருத்துவ ஊழியர்களின் உதவி தேவைப்படுகிறது. என்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் என்னை விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். நான் மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன். நான் தினமும் 6 மணிநேரம் பணியாற்றுகிறேன். நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறேன். முதல்வர் என்னைத் தொடர்புகொண்டு என்னுடைய அர்ப்பணிப்பைப் பாராட்டினார்; எனக்கு நன்றி கூறினார். ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினார்” என்றார்.

ரூபா
ரூபா

இதுகுறித்து சிவமோகா மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ராஜேஷ் கூறுகையில், ``ரூபா கர்ப்பமாக இருப்பதால் கொரோனா தொற்றால் அவர் பாதிப்படையக்கூடும் என்பதால் அவரை கொரோனா பணியில் இருந்து விலக்குமாறு அவசரகால மருத்துவ அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால், ரூபா தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக மருத்துவ அதிகாரிகள் எங்களுக்குப் பதிலளித்தனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு