Published:Updated:

கொரோனா வைரஸ்... யுனிசெஃப் ஆலோசனையும்; சச்சினின் செயல்முறையும்!

சச்சினின்
சச்சினின்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு உலக சுகாதார அமைப்பு பல்வேறு நோய்த் தடுப்பு வழிமுறைகளை உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

தற்போது சீனாவில் வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவியியல் ரீதியாக, சீனாவுக்கு மிக அருகில் இருக்கும் இந்தியா உலக நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகவும் தாமதமாகவே தனது முதல் கொரோனா பாதிப்பை உறுதி செய்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு உலக சுகாதார அமைப்பு பல்வேறு நோய்த் தடுப்பு வழிமுறைகளை உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸிடமிருந்து குழந்தைகள் பாதிப்படையாமல் இருக்க, ஐக்கிய நாடுகளின் அனைத்துலக குழந்தைகளுக்கான அவசர நிதியம் யுனிசெஃப் (UNICEF) பல்வேறு விதமான முயற்சிகளில் இறங்கியுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மிகப் பெரிய அளவிலான விழிப்புணர்வை வழங்கி வருகிறது.

அந்த வகையில், இணையத்தில் கொரோனா வைரஸ் குறித்தான உண்மைக்கு மாறான தகவல்கள் பல வேகமாகப் பரவி வருகிறது. இவற்றை நம்ப வேண்டாம் என்று கூறுவதோடு, குழந்தைகளிடம் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் பாதுகாத்துக்கொள்ள பெற்றோருக்கான ஆறு ஆலோசனைகளை யுனிசெஃப் மருத்துவ நிபுணர்கள் சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ மூலமாக அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த வீடியோவில், முதலாவதாக கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடி தொடர்பின் மூலம் மட்டுமே பரவும் என்பதை அனைத்துப் பெற்றோர்களும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நேரடி தொடர்பு என்பது, ஏற்கெனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து சுவாச கோளாறுகளான தும்மல், இருமல் போன்றவற்றாலோ, பாதிக்கப்பட்டவரால் தொடப்படும் பொருள்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி நாம் தொடுவதாலோ மட்டுமே பரவும். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களிடம் இருந்து குறைந்தது 3 அடி தூரமாவது தள்ளி நிற்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இரண்டாவதாக, கொரோனா வைரஸ் தாக்கத்தின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசக் கோளாறு ஆகியவைதான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், வைரஸ் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பின், நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படக்கூடும். ஆனால், அவை வயது முதிர்ந்தவர்களில் மட்டுமே காணப்படக் கூடியதாக இருக்கும்.

அடுத்ததாக, வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மை நாமே எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 20 விநாடிகளாவது சோப் மற்றும் சுத்தமான தண்ணீர் கொண்டு நன்றாகக் கை கழுவ வேண்டும் அல்லது ஆல்கஹால் செரிந்துள்ள ஹேண்ட் சேனிடைசர்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நமக்கு இருமல் மற்றும் தும்மல் வரும்போது வாய் மற்றும் மூக்கை டிஸ்யூ பேப்பர்களைக் (Tissue Papers) கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். ஆனால், பயன்படுத்தப்படும் டிஸ்யூகளை உடனடியாகக் குப்பையில் போட்டு விட வேண்டும். இல்லையென்றால் நோய் தொற்று ஏற்படக் கூடும். மேலும், எதிர்பாராத சூழலில் இருமல் மற்றும் தும்மல் ஏற்படும்போது, நமது முழங்கைகளைப் பயன்படுத்தி உமிழ்நீரானது பிறர்க்கு சென்றடையாத விதம் தடுத்துக்கொள்ள வேண்டும்.

யுனிசெஃப், பெற்றோருக்கு வழங்கியுள்ள ஆறு ஆலோசனைகளில் நான்காவதாக மாஸ்க் அணிவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் தென்படாதவர்கள் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை எனத் தெரிவித்துள்ள யுனிசெஃப், இருமல், தும்மல் போன்றவை இருப்பின், சுற்றத்தினரை வைரஸ் தாக்குதல்களிலிருந்து காப்பதற்காகக் கட்டாயம் மாஸ்க் அணிய வலியுறுத்துகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான தடுப்பு மருந்துகள் அல்லது பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கத் தேவையான மருந்துகள் இன்றளவிலும் உலக நாடுகளால் கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரையிலும், கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு கர்ப்பிணிப் பெண்கூட உயிரிழக்கவில்லை என இறுதி ஆலோசனையாகக் குறிப்பிட்டுள்ள யுனிசெஃப், கற்ப காலங்களில் தாயிடமிருந்து சிசுவுக்கு வைரஸ் தொற்று பரவும் என்பதற்கான எந்த மருத்துவ ஆதாரங்களும் இதுவரை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று உள்ள ஒரு நபரிடம் நேரடி தொடர்பில் இருக்கும்போது, நமக்கும் வைரஸ் தாக்கம் ஏற்படும். இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவதில் முதன்மையானதாக நன்றாகக் கை கழுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 20 விநாடிகளில் எவ்வாறு சுத்தமாக கை கழுவுவது என்பதை யுனிசெஃப் (UNICEF) இந்தியாவுக்கான நல்லெண்ண தூதுவரும், பிரபல இந்திய கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் வீடியோ மூலமாக விளக்கியுள்ளார்.

கைகளைக் கழுவ மறக்க வேண்டாம் என வீடியோவில் பேசத் தொடங்கிய சச்சின், முதலில் தன் கைகளைத் தூய்மையான தண்ணீரில் அலசினார். அடுத்து, கைகளுக்கு சோப் போட்டு, பின் அவற்றை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ள பல்வேறு கை கழுவும் முறைகளால் சுத்தம் செய்து காட்டினார்.

உள்ளங் கைகளில் சோப்பை எடுத்துக்கொண்டு, இரு கைகளின் மேல் பகுதியையும், விரல் இடுக்குகளையும் நன்றாக தேய்க்க வேண்டும். பின், இரு உள்ளங்களையும் இணைத்து நன்றாக தேய்ப்பதோடு, மணிக்கட்டு பகுதியையும் சுத்தமாகத் தேய்க்க வேண்டும். இவற்றைப் 17 விநாடிகளில் செய்து காட்டிய சச்சின் கைகளில் உள்ள சோப்பை கழுவுவதற்குள் 20 விநாடிகள் முடிந்துவிட்டன. இவ்வாறு, தொடர்ச்சியாக செய்து வந்தால், கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என யுனிசெஃப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு