Published:Updated:

`வெளிநாட்டவர் புனிதப் பயண அனுமதி நிறுத்தம்' -கொரோனாவால் சவுதி அரசு அதிரடி!

மெக்கா மெதினா
மெக்கா மெதினா

புனிதத் தலங்களில் நோய் பரவுதல் பேராபத்தையும் பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தால் சவுதி அரேபிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நிலவி வரும் சூழலில் புனித யாத்திரைக்கு வரும் வெளிநாட்டவர்களின் அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது, சவுதி அரேபிய அரசு.

கொரோனா வைரஸ் தாக்கம்... இந்திய வர்த்தகம் பாதிக்கப்படுமா?
மெக்கா மெதினா
மெக்கா மெதினா

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தினமும் ஐந்து முறை தொழுவார்கள். வாழ்வில் ஒருமுறை கட்டாயம் மெக்கா மெதினா செல்ல வேண்டும் என்பது அவர்களின் ஆன்மிக நோக்கங்களுள் முக்கியமானது. அதன்படி, ஆண்டுதோறும் இந்த ஹஜ் புனித யாத்திரைக்காக உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் அரபு நாட்டுக்கு வருகை புரிவார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் வெளிநாட்டவர் மெக்கா காபா புனிதத் தலங்களுக்கு வரத் தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. மேற்காசிய நாடுகளில் 220 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

`27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி!' - தகர்ந்த 14 நாள்கள் நம்பிக்கை; அதிர்ச்சியில் சீனா

கடந்த கால வரலாற்றில் ஹஜ் புனித யாத்திரையின்போது 1821-ம் ஆண்டு பரவிய காலரா நோயால் 21,000 பயணிகள் பலியாயினர். அடுத்து 1865-ம் ஆண்டில் மீண்டும் காலரா நோய் பரவியதில் 15,000 ஹஜ் பயணிகள் பலியானதோடு அந்நோய் உலகம் முழுவதும் தீவிரம் பெறத் தொடங்கியது. மெர்ஸ்-கொரோனா எனப்படும் வகை கொரோனா ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவுவது. இந்த நோய் தாக்கி 2012-ம் ஆண்டு 2,500 ஹஜ் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

அதில் 858 பேர் பலியானதாக உலக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. இத்தனைக்கும் 2012-ம் ஆண்டு அந்நாட்டு அரசு பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி கவனத்துடன் கண்காணித்து வந்தது. இருப்பினும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. எனவே, இந்தப் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு, நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அரசு கருதுகிறது.

வைரஸ்
வைரஸ்

மத்திய கிழக்கு நாடுகளிலேயே இரான்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இரானில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்நாட்டின் மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியாநௌஷ் ஜஹாங்பூர், ``இதுவரை பாதிப்பு கண்டறியப்பட்ட 139 பேர்களில் 19 பேர் இறந்துவிட்டனர்" என்றார்.

வியாழன் முதல் இராக்கில் பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ``இராக் தலைநகர் பாக்தாத்தில் முதல்முறையாகக் கொரோனா கண்டறியப்பட்டது. பின்னர் அது பரவத் தொடங்கியது. இவையெல்லாமே இரானோடு தொடர்புடையதாக அமைந்திருக்கிறது" என்றார். இரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, ``கொரோனா வைரஸை உடனடியாகத் தடுக்க இயலாவிட்டாலும் அதன் தாக்கம் முடிந்தவரை கட்டுப்படுத்தப்படும். அதற்கு இரண்டு மூன்று வாரங்களாவது ஆகும்" என்றார்.

கொரோனா வைரஸ்... சீனாவில் மூடப்பட்ட தொழிற்சாலைகள்... இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுமா?

அண்டை நாடுகளான இரான், இராக் பகுதிகளில் சூழல் இவ்வாறு இருக்க, அரபு நாட்டின் மெக்கா மெதினா உள்ளிட்ட புனிதத் தலங்களில் நோய் பரவுதல் பேராபத்தையும் பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சத்தால் சவுதி அரேபிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு