அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
- குறள் 247
உலகில் வாழ்வதற்கு பணம் மிகவும் அவசியம் என்று அன்றே திருவள்ளுவர் கூறியுள்ளார். எல்லா வயதிலும் பணம் அவசியம் என்றாலும் முதுமையில் பணத் தேவை மிக மிக அவசியம். வளமான முதுமைக்கு எது மிகவும் அவசியம்? போதுமான நிதிவசதியா, நல்ல உடல் நலமா, உண்மையான உறவுகளா?
சில வருடங்களுக்கு முன்பு விருதுநகரில் அரிமா சங்கம் நடத்திய முதியோர் நல விழாவில் நான் கலந்து கொண்டு ‘முதியோர் நலம்’ பற்றி சிறப்புரை ஆற்றினேன். அரங்கம் நிரம்பி வழிந்தது. பெண்களே அதிகம் பேர் கலந்து கொண்டார்கள். உணவு இடைவேளைக்கு முன்பாக ஒரு கேள்வி அவர்கள் முன்னே வைக்கப்பட்டது. உணவு இடைவேளை முடிந்த பின்பு அவர்களின் பதில் தெரிந்து கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கேள்வி இதுதான்.
வளமான முதுமைக்கு எது மிகவும் அவசியம்
⦁ போதுமான நிதிவசதியா?
⦁ நல்ல உடல் நலமா?
⦁ உண்மையான உறவுகளா?

உணவு இடைவேளைக்குப் பின்னர் அனைவரிடம் இது பற்றி கருத்து கேட்கப்பட்டது. முதுமையில் சற்று நிம்மதியாக இருக்க போதுமான நிதிவசதி தான் அவசியம் என்று அதிகம் பேர் கருத்து தெரிவித்தார்கள். அதன் பிறகு, தனித்தனியாக அவர்களிடம் கருத்து கேட்ட பொழுது, தங்களுக்கு எது இல்லையோ அல்லது குறைவோ அதுதான் அவசியம் என்று கூறினார்கள். அதாவது தனிக்குடித்தனம் அல்லது முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் தங்களுக்கு உறவுதான் முக்கியம் என்றார்கள். எவ்வளவு காசு இருந்து என்ன பயன், பல நோய்களினால் நான் சிரமப்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது என்றார் ஒரு நோயுற்ற ஒரு பணக்கார முதியவர். ‘உடலில் எந்த நோய்களும் இல்லை. சொந்தபந்தங்களுக்கும் பஞ்சம் ஏதுமில்லை. ஆனால் கையில் காசு இல்லாமல், இவைகள் அனைத்தும் இருந்து என்ன பயன். கொடுமை, கொடுமை முதுமையில் வறுமை கொடுமை. கையில் சற்று காசு இருந்தால், உறவுகள் தானாகவே கூட வரும், நோய்கள் வந்தால், பணம் கையில் இருந்தால் தக்க வைத்தியம் செய்து கொள்ளலாம் என்ற தைரியம் ஏற்படும்’ ஒரு ஏழை முதியவரின் புலம்பல் இது.
சரி, இம்மூன்றில் எது தான் மிகவும் அவசியம்? உண்மையைச் சொன்னால், வளமான முதுமைக்கு பணம், உறவு, உடல்நலம் ஆகிய மூன்றுமே அவசியம். இம்மூன்றையும் கிடைக்கப் பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் அத்தகைய அதிர்ஷ்டசாலிகள் மிகவும் குறைவே என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநான் முதியோர் நல மருத்துவர் என்ற முறையில் உடல் நலம்தான் மிகவும் அவசியம் என்று கூற நினைத்தேன். ஆனால் என் மனசாட்சி சற்று இடித்தது. உண்மையாக கூறப் போனால் முதுமைக் காலத்திற்கு மிகவும் அவசியம் எது என்றால் போதுமான நிதி வசதியே. ஏனென்றால் பணம் இருந்தால் குடும்பத்தில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் சற்று மதிக்கப்படுவார்கள். பணம் இருந்தால் உறவுகளும் ஒட்டி வரும். நோய்கள் இருப்பின் மருத்துவர் மட்டுமல்ல ஒரு மருத்துவமனையையே வீட்டில் அமைத்து விடலாம். ஆகையால் முதுமையில் நலமாய் வாழ நிதி வசதியே அவசியம் என்று நான் கூற, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி எனது முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.
பணம், முக்கியமாக முதுமையில் தனியாக வசிக்கும் அல்லது கணவனை இழந்த பெண்களுக்கு மிகவும் தேவை. இதோ ஒரு உண்மை நிகழ்வு அதை விவரிக்கிறது.
முத்துசாமியும் லட்சுமியும் வயதான தம்பதிகள். அம்பத்தூரில் சொந்த வீட்டில் சற்று வசதியுடன் வசித்து வந்தார்கள். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சொந்த தொழில். ஓரளவிற்கு தொழிலில் நல்ல வருமானமும் கூட. மகனுக்கு சேலத்திலிருந்து பெண் எடுக்கப்பட்டு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகவில்லை, மாமியார் மருமகளிடையே ஒத்துவரவில்லை. ‘நாம் தனிக்குடித்தனம் போகலாம் அல்லது அவர்கள் வெளியேறட்டும்’ என்று தினமும் இளம் மனைவியின் நச்சரிப்பு. இதைக் கேள்விப்பட்ட முதியவர் மனம் உடைந்து போனார். என்ன கெட்ட காலமோ, தொழிலிலும் நசிவு ஏற்பட்டது. இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து மாரடைப்பால் பெரியவர் மரணம் அடைந்தார். இதை அவர் சிறிதும் எதிர்பார்க்காததால் உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை. இது தான் சமயம் என்று தாயாரிடம் ஆசை வார்த்தையைக் கூறி தொழிற்சாலையையும், வீட்டையும் தனக்கே என்று அம்மாவிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டான். ஆனால், அம்மா அதற்கு ஒரு நிபந்தனை போட்டாள். தான் தனியாகப் போக வேண்டும் என்றால் வீட்டு வாடகையை மகனே கட்ட வேண்டும். மருத்துவச் செலவும் மகனுடையது. இது அல்லாமல் மாத மாதம் ரூபாய் 10,000/- செலவுக்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்து உறவினர்களை சாட்சியாக வைத்து பத்திரத்தில் கையெழுத்திட்டாள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எல்லாம் ஒரு சில மாதங்கள்தாம் நன்றாக நடந்தன. திடீரென்று அம்மாவுக்கு மாதா மாதம் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டான். கேட்டதற்கு தொழிலில் பெருத்த நஷ்டம் என்று ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். லட்சுமிக்கு இது அவள் தலையில் இடிவிழுந்தாற்போல் ஆயிற்று. இனிமேல் பணம் இல்லாமல் எப்படி வாழப்போகிறோம் என்ற கவலை மனச்சோர்வில் தள்ளியது. தனக்கு எப்பொழுதாவது உதவும் என்ற நினைப்பில் லட்சுமி ஒரு சிறு தொகையை கணவருக்கு தெரியாமல் சேர்த்து வைத்திருந்தாள், அது சிறிது காலத்திற்கு கைகொடுத்தது. அதுவும் கரைந்துவிட, மனச்சோர்வினால் படுத்த படுக்கையானாள். இதை தெரிந்த உறவினர்கள் அவளது தேவைக்கு பணம் கொடுத்து உதவினார்கள். தனக்கு வீடு, மகன், மருமகள் இருக்க தன் பிழைப்பிற்காக மற்றவர்ளிடம் கையேந்தி வாழ வேண்டிய நிலை வந்துவிட்டதே என்று தினமும் அழுது, அழுது நாட்களை கடத்தினாள். இறுதியில் மனச்சோர்வு அவளை மரணத்திற்குள் தள்ளிவிட்டது.
கமலாவின் இறப்பிற்கு யார் பொறுப்பு
⦁ பாசமில்லா மகனா?
⦁ மாமியாரை மதிக்காத மருமகளா?
⦁ கணவனின் அஜாக்கிரதையினால் ஏற்பட்ட வறுமையா?
வயதான காலத்தில் ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் பெயரில் ஒரு சேமிப்பை கட்டாயம் வங்கியில் போட்டு வைத்திருக்க வேண்டும்.
முத்துசாமி சற்று வயதானதும், அவர் மனைவிக்கு ஒரு உயில் எழுதி வைத்திருக்க வேண்டும். அதோடு ஒரு தொகையையும் மனைவியின் பெயரில் வங்கியில் நிரந்திர வைப்பு நிதியாக போட்டு வைத்திருக்க வேண்டும். அவசர காலத்தில் சொத்து உடனே கைகொடுக்காது. ஆனால், வங்கியில் உள்ள பணம் எந்த அவசர தேவைக்கும் கை கொடுக்கும் என்ற தைரியம் ஒன்று போதும், முதுமையில் ஒரளவிற்கு நிம்மதியுடன் வாழ.
வயதான காலத்தில் ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் பெயரில் ஒரு சேமிப்பை கட்டாயம் வங்கியில் போட்டு வைத்திருக்க வேண்டும். அப்படி முத்துசாமி செய்திருந்தால் கமலாவின் மரணத்திற்கு வறுமை ஒரு காரணமாக இருந்திருக்காது அல்லவா?