கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக உடலில் ஆன்டிபாடிகள் உருவாகி இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக (Seropositivity) ஆய்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை இயக்ககத்தால் இதுவரை மூன்று முறை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நான்காவது முறையாக டிசம்பர் மாத இறுதியில் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் பத்து வயதுக்கு மேற்பட்ட 32,245 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 28,071 பேருக்கு SARS-CoV-2 தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் 87% பேருக்கு SARS-CoV-2 விற்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சோதனை செய்யப்பட்ட 32,245 பேரில், 27,324 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 90% பேருக்கு, அதாவது 24,667 பேருக்கு தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கின்றன.
அதேபோல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 4,021 பேரில் 69% பேருக்கு அதாவது 3,374 பேருக்கு தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தொற்று ஏற்பட்டு, அதன் விளைவாக ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களைவிட தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கே ஆன்டிபாடிகள் உருவாகியிருப்பதாகவும், கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் இரண்டில் ஏதாவது ஒரு தடுப்பூசி செலுத்திக்கொண்ட 27,324 பேரில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களுக்கு ஆன்டிபாடிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
10-18 வயதுக்குட்பட்டவர்களில் 68.4 சதவிகிதத்தினருக்கும், 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 89.5 சதவிகிதத்தினருக்கும், 45 -59 வயதுக்குட்பட்டவர்களில் 88.6% சதவிகிதத்தினருக்கும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 84 சதவிகிதத்தினருக்கும் SARS-CoV-2 விற்கு எதிரான ஆன்டிபாடி உள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 93% பேருக்கு ஆன்டிபாடி உருவாகியுள்ளது. அடுத்தபடியாக, தென்காசி மாவட்டத்தில் 92% பேருக்கும், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 91% பேருக்கும் சென்னையில் 88% பேருக்கும் ஆன்டிபாடிகள் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.