Election bannerElection banner
Published:Updated:

மத்திய அரசுக்கு ₹150, மாநில அரசுகளுக்கு ₹400... தடுப்பூசி விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்!

Covishield - india
Covishield - india

மே 1 முதல் 18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது சீரம் நிறுவனம் விலை உயர்வை அதிகரித்திருக்கிறது.

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக இந்திய சுகாதாரம், நிதி அமைச்சகங்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டன. குறிப்பாக தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவும், மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் நேரடியாக தடுப்பூசிகளை வாங்கவும் இதன் மூலம் அனுமதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது புனேயில் செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா. இந்த நிறுவனம்தான் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த இருப்பதாகக் கூறியுள்ள இந்த நிறுவனம், தனது தயாரிப்பில் 50 சதவிகித தடுப்பூசிகளை இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்துக்கு நேரடியாக வழங்கும், மீதமுள்ள 50 சதவிகித தடுப்பூசிகள் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும்.

சீரம் நிறுவனத்தின் அறிவிப்பு
சீரம் நிறுவனத்தின் அறிவிப்பு

மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து, தடுப்பூசியின் விலைப்பட்டியலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை ரூ.250 கட்டணத்தில் தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வந்த கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை கணிசமாக உயரவிருப்பதும் தெரிய வந்துள்ளது. மே 1 முதல் இந்தத் தடுப்பூசி விலை உயர்வு அமல்படுத்தப்படும் எனத் தெரிய வருகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பின்படி ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. இதுவே தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 600 ஆக இருக்கும். இதே தடுப்பூசி மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் `உலகளாவிய தடுப்பூசி விலையைக் கருத்தில் கொண்டால், உலகில் உள்ள வேறு எந்தத் தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில் எங்கள் தடுப்பூசிகள் மலிவு என்பதை உறுதி செய்கிறோம்’ என்று சீரம் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது. அதன் அறிக்கையில் தனியார் சந்தையில் உலகளாவிய தடுப்பூசிகளின் விலை விவரத்தையும் குறிப்பிட்டுள்ளது.

ஒரு டோஸ் அமெரிக்க தடுப்பூசி விலை ரூ.1500-ஐ விட அதிகம். ரஷ்ய மற்றும் சீன தடுப்பூசிகளின் ஒரு டோஸ் விலையானது ரூ.750-ஐ விட அதிகம்.

மேலும், சிக்கலான தன்மை மற்றும் சூழ்நிலையின் அவசரம் காரணமாக ஒவ்வொரு தனி நிறுவனத்திற்கும் நேரடியாகத் தடுப்பூசிகளை வழங்க இயலாது. மாநில அரசு அமைப்பு வாயிலாகவே தனியாருக்கும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும். 4-5 மாதங்களுக்குப் பிறகு, சில்லறை வர்த்தகத்தினரும் தடுப்பூசிகளை நேரடியாகப் பெறலாம் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

மே 1 முதல் 18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது சீரம் நிறுவனம் விலை உயர்வை அதிகரித்திருக்கிறது. இதற்கு மத்திய / மாநில அரசுகள் மானியம் அளித்து பழைய விலைக்கே தடுப்பூசி வழங்குவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

இல்லையெனில் தனியார் சந்தையில் தடுப்பூசிகளின் விலையை அதிகரித்து சேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்களோ என்கிற குழப்பமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. தடுப்பூசி பற்றிய விழ்ப்புணர்வு இப்போதுதான் பரவத் தொடங்குகிறது. இப்போது அறிவிக்கப்பட்ட விலை உயர்வானது தடுப்பூசி போட விரும்புகிறவர்களையும் தயக்கத்தில் தள்ளிவிடுமோ?

- எஸ்.சங்கீதா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு