Published:Updated:

காமமும் கற்று மற 14 - பெண்களின் பாலியல் பிரச்னைகளுக்கான காரணங்கள்!

கூடற்கலை

கூடற்கலை - 14

காமமும் கற்று மற 14 - பெண்களின் பாலியல் பிரச்னைகளுக்கான காரணங்கள்!

கூடற்கலை - 14

Published:Updated:
கூடற்கலை

`கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்

கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய்

கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்...’

- கவிஞர் அறிவுமதி

பாலியல் மருத்துவத்துக்கு சாதி, மதம், இனம் எதுவும் கிடையாது. ஆண், பெண்... இவர்களால்தான் உலகம் இயங்குகிறது. `இப்போதிருப்பவர்களில் இனி யாருக்கும் குழந்தையே பிறக்காது; விலங்குகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும்கூட அப்படியேதான்...’ என்ற நிலை ஏற்பட்டால், உலக இயக்கம் நின்று போய்விடும் அல்லவா?

காமமும் கற்று மற 14 - பெண்களின் பாலியல் பிரச்னைகளுக்கான காரணங்கள்!

ஆக, ஆண் என்று இருந்தால், பெண் என்ற உயிரும் அவசியம். ஆணுக்கும் பசிக்கும்; பெண்ணுக்கும் பசிக்கும். உணர்வு, உடல் இயக்கம், செயல்பாடு என என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் இருவருக்கும் பொதுவானவை. அப்படியிருக்க பாலியல் சார்ந்த உணர்வுகள் மட்டும் எப்படி வேறுபடும்... பாலியல் தொடர்பான பிரச்னைகள் பெண்களுக்கு வரக் கூடாதா... பாலின சமத்துவத்தை பாலுணர்வில் பொருத்திப் பார்த்தாலே போதும், பல பிரச்னைகளைத் தடுத்துவிடலாம். எளிதில் சரிசெய்யக்கூடிய மிகச் சிறியதில் தொடங்கி உளவியல் சிக்கல், மருத்துவச் சிக்கல், வாழ்வியல் முறைகள் எனப் பெண்களின் பாலியல் பிரச்னைகளுக்கான காரணங்கள் பலவிதமானவை. மேலோட்டமாகப் பார்க்கும்போது, மிகச் சாதாரணமாகத் தெரியலாம். பின்வரும் காரணங்களாலும் பெண்களுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உறவுச் சிக்கல்

குடும்பம், நண்பர்கள், உறவினர்களால் உண்டாகும் பிரச்னைகள்; வீடு, அலுவலக வேலை, குழந்தை வளர்ப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்கள்.

உணர்வுச் சிக்கல்

வெவ்வேறு காரணங்களால் உண்டாகும் மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, குற்ற உணர்ச்சி ஆகியவை.

தாம்பத்யச் சிக்கல்

இணைக்கு இருக்கும் ஆண்மையின்மை, உறவில் விருப்பமின்மை போன்ற பாலியல் பிரச்னைகள் பெண்ணின் உறவில் சிக்கலை ஏற்படுத்தலாம். தாம்பத்ய உறவின்போது போதுமான தூண்டுதல் இல்லாமல் போவதும், தம்பதியருக்குள் பாலியல் உணர்வுத் தூண்டல் குறித்த போதுமான தெளிவு இல்லாமல் போவதும் காரணமாக அமையும். தாம்பத்யம் குறித்து கணவன் மனைவிக்குள் உரையாடல் இல்லாமல் இருப்பதும் இந்தச் சிக்கலுக்குக் காரணமாகலாம்.

கார்த்திக் 
குணசேகரன், 
பாலியல் மருத்துவர்
கார்த்திக் குணசேகரன், பாலியல் மருத்துவர்

நோய்கள்

எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis), சினைப்பைக் கட்டி, அறுவை சிகிச்சைக் காயங்கள், இடுப்புப் பகுதியில் ஏற்படும் வீக்கம் போன்ற நோய் (Pelvic Inflammatory Disease) ஆகியவை கர்ப்பப்பை வாய் (Cervix), கர்ப்பப்பை, சினைப்பைவரை சென்று உறவை வலிமிக்கதாக மாற்றலாம். தாம்பத்யத்தில் ஈடுபாட்டை வெகுவாகக் குறைத்துவிடும். தவிர அறுவை சிகிச்சையின்போது சிறு நரம்புகள் வெட்டப்படுவதாலும் பாதிப்பு ஏற்படும். சர்க்கரைநோய், இதயநோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள், ரத்த ஓட்டத்தில் சிக்கல், ஹார்மோன் கோளாறு, மது மற்றும் இதர போதைப் பொருள்கள் பயன்படுத்துவதாலும் பாதிப்பு உண்டாகும். நோய்களைப்போலவே, அவற்றுக்கு மேற்கொள்ளும் சிகிச்சைகளும், சாப்பிடும் சில வகை மருந்துகளும்கூட உறவின் மீது நாட்டத்தை அல்லது எழுச்சியைக் குறைத்துவிடும். சில வகைப் புற்றுநோய்களுக்குக் கொடுக்கப்படும் ரேடியேஷன் சிகிச்சைகள், பிறப்புறுப்பில் உயவு ஏற்படுவதில் பிரச்னையை ஏற்படுத்தும். மேலும், பிறப்புறுப்பிலிருக்கும் சருமம் மற்றும் திசுக்களை மென்மையானதாக மாற்றிவிடும். `Selective Serotonin-Reuptake Inhibitor (SSRI)’ எனப்படும் ஆன்டி-டிப்ரெசன்ட் மருந்துகள் இந்த வேலையைச் செய்கின்றன. கீமோதெரபி மருந்துகள், ரத்த அழுத்தத்துக்கான மருந்துகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

பாலுறவு பற்றிய தவறான பார்வை

வளர்ப்பு முறை, வாழ்க்கை அனுபவத்தால் சிலருக்கு, பாலுறவின் மீது தவறான எண்ணம் இருக்கலாம். இந்த உறவு இயற்கையான, மகிழ்ச்சியான ஒன்று என்பதை உணராமல் கோபம், வெட்கம், பயம் போன்ற உணர்ச்சிகளைத் தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள். பாலுறவு குறித்த அதீத கற்பனைகள், சினிமா, டி.வி-யில் காட்டப்படுவதுபோல இருக்கும் என்ற எண்ணத்தில், இயல்பு வாழ்க்கையின் இன்பத்தைத் தொலைத்துவிடுவார்கள்.

பாலியல் வன்புணர்வு (Abuse)

பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்களுக்கு அந்த பாதிப்பு நீண்டகாலத்துக்கு இருக்கும். மற்ற ஆண்களிடம் மனமுவந்து நெருங்கினாலும், அந்த பாதிப்புணர்வு மேலோங்கி நிற்கும். இணையுடன் செக்ஸ் இன்பம் அனுபவிக்கவும் சிரமப்படுவார்கள். இதனால் எழுச்சியடைய முடியாமலேயே போய்விடும். பயம், குற்ற உணர்ச்சி, கோபம் உள்ளிட்டவை உறவில் திருப்தியடையவிடாமல் தடுக்கும்.

Couple (Representational image)
Couple (Representational image)
Pexels

எப்போது மருத்துவரை நாட வேண்டும்?

மேலே குறிப்பிடப்பட்டவற்றில் எல்லாப் பிரச்னைகளுக்கும் மருத்துவ உதவி தேவையில்லை. எளிதான பிரச்னைகளுக்கு நண்பர்கள், அனுபவம் உள்ளவர்கள் தீர்வைச் சொல்லலாம். அதையும் தாண்டி ஆலோசனை தேவைப்பட்டால் பாலியல் மருத்துவரிடமும், உளவியல் சிக்கல் என்றால் உளவியல் ஆலோசகரிடமும் ஆலோசனை பெறலாம். அதே சமயம், திடீரென்று பாலுறவின்போது தொடர்ந்து வலி ஏற்பட்டாலோ, பாலியல்நோய் இருப்பதாக நினைத்தாலோ நீங்களும் உங்கள் துணையும் உடனே மருத்துவரை நாட வேண்டியது அவசியம். பாலுறவின்போது தலைவலி, நெஞ்சுவலி அல்லது வேறு எங்கேனும் வலி என வித்தியாசமான எதிர்வினைகள் ஏற்பட்டாலும் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

மொத்தத்தில் தாம்பத்யம் தொடர்பான எந்தச் சிக்கல்களும் தீர்க்க முடியாதவை அல்ல. வந்த பின் விழிப்பதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது. அதிலும், பெண்கள் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

- கற்போம்...