Published:Updated:

அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்... அச்சுறுத்தும் யதார்த்தம்...

சிசேரியன் பிரசவங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சிசேரியன் பிரசவங்கள்

மருத்துவ அலசலும் மக்களுக்கான மெசேஜும்

அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்... அச்சுறுத்தும் யதார்த்தம்...

மருத்துவ அலசலும் மக்களுக்கான மெசேஜும்

Published:Updated:
சிசேரியன் பிரசவங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சிசேரியன் பிரசவங்கள்

``சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலமான பிரசவங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்’’ என்று உலக நாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது உலக சுகாதார அமைப்பு. அதேசமயம், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சிசேரியனின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிற குற்றச்சாட்டு தொடர்கிறது. இதன் உண்மை நிலை என்ன? கருத்துகளைப் பகிர்கிறார்கள் சில மருத்துவர்கள்...

சென்னை, எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை பேராசிரியர் கீதா மகாதேவன் பேசும்போது, ‘`தனியார் மருத்துவ மனைகளில் பணத்துக்காக சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாகத் தொடர்கிறது. அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்கிறது. மற்ற மருத்துவமனைகளிலிருந்து, பிரசவத்தில் சிக்கல் ஏற்படும்போது, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படும் எண்ணிக்கையும் இதில் அடக்கம். என்றாலும், அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் அதிகரிக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும்.

அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்... அச்சுறுத்தும் யதார்த்தம்...

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான், ஒரு பெண் கர்ப்பத்தை உறுதி செய்த முதலிடத்தில் தொடங்கி, எங்கெல்லாம் செக்கப்புக்கு வந்தார், எங்கு பிரசவமானது, எதனால் இறப்பு நிகழ்ந்தது, அது தவிர்த்திருக்கக் கூடிய மரணமா, எதைச் சரிசெய்தால் இத்தகைய மரணங்களைத் தவிர்க்க முடியும் போன்ற தகவல்கள் அனைத்தும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தணிக்கை செய்யப்படுகிறது (Maternal Death Audit). மட்டுமன்றி, சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக `சிசேரியன் ஆடிட்' என்ற தணிக்கை (Maternal Death Audit)யும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப் படுகிறது’’ என்கிறார்.

கீதா மகாதேவன்
கீதா மகாதேவன்
கண்ணகி உத்ரராஜ்
கண்ணகி உத்ரராஜ்

கோவையைச் சேர்ந்த, மகப்பேறு மற்றும் குழந்தை யின்மை சிகிச்சை மருத்துவர் கண்ணகி உத்ரராஜ் வேறொரு கோணத்தில் இதை அலசுகிறார். ‘`சிசேரியன் என்பதே தாய்-சேய் உயிர்காக்கும் வகையில் அவசர மற்றும் நெருக்கடியான சூழல்களில்தான் மேற் கொள்ளப்படுகிறது. கர்ப்பகால ரத்த அழுத்தம், ரத்தச் சோகை, பிரசவத்துக்கு முன்பே பனிக்குடம் உடைதல், ரத்தப்போக்கு, பிரசவ நேரத்து வலிப்பு போன்ற அவசர காரணங்களுக்காகவும், தாயின் உயரம் குறைவு, இடுப்பெலும்பு குறுகல், குழந்தையின் எடை அதிகம் அல்லது கபாலம் பெருத்திருத்தல், செயற்கை முறையில் கருத்தரிப்பு போன்ற காரணங்களுக்காகவும், பிரசவ நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழப்புகூட ஏற்படக்கூடும் என்கிற நெருக்கடியான நிலைகளிலும்தான் அவசரமாகவோ, முன்னரே திட்டமிட்டோ சிசேரியன் செய்யப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் ஒரு மருத்துவர் சர்வ சாதாரண மாக சிசேரியன் செய்துவிட முடியாது. அவசியம் என்பதற்கான காரணம் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணிடமும், உறவினர்களிடமும் அதைச் சொல்ல வேண்டும். மருத்துவப் பதிவுகளிலும் குறிப்பிட வேண்டும். ஆதாரங்களையும் காட்ட வேண்டும். ஆக, சரியான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் சிசேரியன் செய்ய மாட்டார்கள்’’ என்கிறார்.

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

கோவையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் பேசினோம்... ‘`இந்தியாவில், 1980களின் ஆரம் பத்தில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 500+ தாய் மரணங்கள் என்றிருந்த நிலையிலிருந்து, 2019-ம் ஆண்டு, 113 என்ற நிலைக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் கர்ப்பகால தாய் இறப்பு விகிதம் (Maternal Mortality Rate - MMR) கடந்த 2019-2020-ம் ஆண்டு வெறும் 53.3 தான். அதாவது, தமிழகத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால், அதில் 53.3 தாய்மார்கள் இறக் கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் பிரசவங் களில், 99 சதவிகிதம் மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கின்றன. இதுவும், கர்ப்பிணியின் இறப்பு விகிதம் குறைந்ததும் தேசிய சாதனை.

இன்றைக்கும் விதிமுறைகளின்படி இயங்கும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடு களில் பிரசவங்களின்போது இருக்கும் நடை முறைகள் நமக்கு முற்றிலும் வித்தியாசமானவை. அவர்களுடைய நெறிமுறையின்படி, கண் காணிப்பு, தொடர் பயிற்சிகள், காத்திருப்பு ஆகியன மேற்கொள்ளப்பட்டு, கர்ப்பப்பை விரிந்த பிறகுதான், அதுவும் தேவைப்படும்போது `Epidural Analgesia' எனப்படும் வலியில்லா பிரசவ முறை பரிந்துரைக்கப்படுகிறது. இதை, சிசேரியன் பிரசவம் இல்லை என்பதாக மட்டும் கடந்துவிடக் கூடாது.

பிரசவத்தின்போது பெண்ணின் மனநிலை, வெஜைனாவையும் ஆசனவாயையும் பிரிக்கும் பகுதி கிழிதல், ஆசனவாய் நெகிழ்வு போன்ற சேதாரங்கள், பிரசவத்துக்குப் பிறகான சிகிச்சைகள் எல்லாம் சொல்லி மாளாதவை. எனவே மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான புரிந்துணர்வை அதிகரிப்பதும், ஆங்காங்கே அவ்வப்போது நடக்கும் தவறு களைக் கண்காணித்து, கண்டித்து சரி செய்வதும்தான் சிசேரியன் பற்றிய பிரச்னை களுக்குத் தீர்வாக இருக்கும்’’ என்று ஆக்க பூர்வமான யோசனை தந்து முடித்தார்.

சுகப்பிரசவ வாய்ப்புகளை அதிகரிக்க...

பிரசவத்துக்கு முந்தைய ‘ஆன்டி-நேட்டல் செக்கப்’ மிகவும் முக்கியம். மாதம் தவறாமல் கர்ப்பகால செக்கப் முறையாகச் செய்யப்பட்டாலே பிரசவத்தின் போதான சிக்கல்களைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.

இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணியைப் பார்க்க வருவோர் பெரும்பாலும் இனிப்பு களுடன் வருவார்கள். அதைத் தவிர்க்கலாம். கர்ப்பகாலத்தில் ரத்தச் சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

அந்தக் காலத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி வீடு பெருக்கித் துடைப்பார்கள். அதனால் இடுப்பெலும்பு தசைகள் விரிந்துகொடுக்கும். பிரசவத்தின்போது குழந்தையின் தலை வெளியே வரும்போது இலகுவாக இருக்கும். உடலியக்கம் இல்லாதவர்கள் மருத்துவ வழிகாட்டுதலோடு கர்ப்பகால பயிற்சிகளைச் செய்தால் சுகப்பிரசவ வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்... அச்சுறுத்தும் யதார்த்தம்...

கவுன்சலிங்கால் சாதிக்கிறோம்...

‘`சுகப்பிரசவங்களை சாத்தியப் படுத்துவதில் கர்ப்பிணிகளின் மனநிலை, உறவினர்களின் மன நிலை மற்றும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு என மூன்று விஷயங்கள் முக்கியமானவை. இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால்தான் தங்கள் மருத்துவமனையில் சிசேரியன்களின் அளவு 30 சதவிகிதத்தை தாண்டாமல் இருக்கிறது’’ என்கிறார் சென்னை, பப்ளிக் ஹெல்த் சென்டரின் மகப்பேறியல் துறைத் தலைவர் டாக்டர் இந்திரா.

‘`எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் மிடில்க்ளாஸ் குடும்பங்களைச் சேர்ந்த பெண் களே அதிகம். ஆனாலும் இன்று எல்லா மட்டங்களிலும் பெண்களின் வாழ்க்கைமுறை மாறியிருக்கிறது. சிசேரியனுக்கான மிகப் பெரிய காரணமாக இருப்பது பெண்களின் உடல் பருமன். உடலுழைப்பு தேவைப்படுகிற வேலைகளைச் செய்யாத காரணத்தால், பருமன் பிரச்னை ஏற்பட்டு, சிசேரியனுக்கு காரணமாகிவிடுகிறது.

முதல் பிரசவத்துக்கு வரும்போது பெரும்பாலும் எல்லாப் பெண்களுக்குமே பிரசவம் குறித்த பயம் இருக்கும். முதல் வேலையாக கவுன்சலிங் கொடுத்து அந்த பயத்தைப் போக்குவோம். சுகப்பிரசவத்துக்கு ஒத்துழைக்க மனத்தளவில் பெண்களைத் தயார் படுத்துவோம். அவர்களுடன் வரும் உறவினர்கள், உதவியாளர்களுக்கும் கவுன்சலிங் தேவைப்படும். ‘எங்க பொண்ணு வலி தாங்கமாட்டா... சிசேரியன் பண்ணிடுங்க’ என்ற அழுத்தம் இவர்கள் தரப்பிலிருந்து அதிகம் வரும். ‘நீங்களும் இந்தக் கட்டத்தைக் கடந்தவர்கள்தானே... உங்களால் முடிந்த போது, உங்கள் மகளால் முடியாதா...’ என்று கேட்டு, நிறைய பேசிப் புரியவைப்போம்.

சுகப்பிரசவத்துக்காக மெனக்கெடும் அதேநேரம், அம்மாவுக்கோ, குழந்தைக்கோ பிரச்னை இருப்பது தெரிந்தால் அவசரநிலை கருதி சிசேரியன் என முடிவு செய்வோம். முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்ததற்கு சுகப்பிரசவத்துக்காக காத்திருந்து ரிஸ்க் எடுக்கமாட்டோம். சுகப்பிரசவம்தான் நடக்கும் என்று நாங்கள் 100 சதவிகிதம் உறுதியளிக்க மாட்டோம். ஆனால், தேவையில்லாமல் சிசேரியனை திணிக்க மாட்டோம் என்று சொல்லிதான் சிகிச்சையையே தொடங்குவோம்’’ என்கிறார் டாக்டர் இந்திரா.