Published:Updated:

`இலங்கை: கொரோனா தடுப்புக்கு ரகசிய யுத்திகளைக் கையாண்டதா' இலங்கைவாசிகள் சொல்வது என்ன?

இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கை
இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கை

இலங்கை அரசின் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும், ராணுவத்தின் மேற்பார்வையில் கட்டுக்கோப்பாக நடந்துவருகிறது. இலங்கையில் பிரதமர் தேர்தலுக்காக அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதால், அனைத்து அதிகாரங்களும் கோத்தபய ராஜபக்ஷேவிடமே உள்ளன.

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, சீனா, உள்ளிட்ட நாடுகளே ஆட்டம் கண்டுள்ள நிலையில், மிகச் சிறிய நாடுகளான, கியூபா,தென்கொரியா,தைவான் ஆகிய நாடுகள் எடுத்துள்ள நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இலங்கையும் இடம் பெற்றுள்ளது. சீனாவுடன் நட்புறவில் உள்ள நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கை
இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கை

சீனா, தனது தொழில் வர்த்தகக் கட்டமைப்பையும், போக்குவரத்துத் தொடர்பையும் மிகத் தீவிரமாக இலங்கையில் விரிவுபடுத்தி வருகிறது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான சீனர்கள் அங்கு இடம்பெயர்ந்து வசித்துவருகின்றனர். இந்தச் சூழலில், முதன்முதலாக சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும், இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று பல நாடுகளும் இலங்கை மீது கவனத்தைத் திருப்பியிருந்தன. குறிப்பாக, சீனாவிற்கு அடுத்தபடியாக இலங்கை என்றிருந்த நிலையில், இந்தத் தொற்று ஈரான், இத்தாலி, அமெரிக்கா என்று பயணித்து, இந்தியாவை அடைந்தது.

`குளிர்காலங்களில் மீண்டும் கொரோனா.. 2022 வரை சமூக இடைவெளி!’ - ஹார்வர்டு ஆய்வு செல்வதென்ன?

இலங்கையில் கொரோனா பரவல் டிசம்பரிலேயே கடுமையாக இருக்கும் எனக் கருதிய நிலையில், அங்கு பாதிப்பு ஏதுமில்லாதது வியப்பையும் நிம்மதியையும் உண்டாக்கியது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி, இலங்கையில் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைக் கண்டறிவதற்கு முன்பாகவே, இலங்கை அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தது. இதுவரை இந்நோய் 211 பேருக்கு இருப்பதாக இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்நோய் தாக்கத்திலிருந்து 55 பேர் விடுபட்டுள்ளதாகவும், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இலங்கையில் முழுமையாகக் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூற முடியாது எனவும் இலங்கை சுகாதாரத்துறை வெளிப்படையான தகலை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீகாந்த பத்திரிகையாளர்
ஸ்ரீகாந்த பத்திரிகையாளர்

இலங்கையில் உள்ள நோய்த் தொற்று, மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவானது எனச் சுட்டிக்காட்டியுள்ளது சர்வதேச கண்காணிப்பு அமைப்பு. இதற்கு, இலங்கையின் தீவிரமான தடுப்பு நடவடிக்கையே காரணம் என்றும் அந்த அமைப்பு இலங்கையைப் பாராட்டியுள்ளது.

இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகன் புஷ்பகுமாரிடம் பேசியபோது, "சீனர்கள் அதிக அளவில் இங்கே வசிக்கிறார்கள். பாலம் கட்டுவது துறைமுகங்கள், சாலைகள் அமைத்தல் போன்ற கட்டுமானப் பணிகளைச் செய்கிறார்கள். மேலும் உணவகம், வணிகவளாகங்களிலும் கணிசமான சீனர்கள் வேலைசெய்துவருகின்றனர்.

இந்தச் சூழலில், சீனாவில் கொரோனா தொற்று என்று செய்தி பரவியதும் இலங்கை மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கும் என்ற நிலைமையே இருந்தது. ஆனால், இலங்கை அரசு எடுத்த நடவடிக்கையால், அடுத்தடுத்த நாள்களில் இந்த நோய்த் தொற்று முற்றிலும் அடங்கிப்போனது. குறிப்பாக, இந்தியாவில் லாக் டெளன் அறிவிக்கப்பட்டபோதே, இங்கும் ஊரடங்கு உத்தரவு பிரகடனப்படுத்தபட்டது. அதைத் தொடர்ந்து, விமான நிலையம் தீவிரக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது. அதனால், இந்த நோய்ப் பரவல் கட்டுக்குள் வந்தது. ஆனால், ஊரடங்கு மட்டுமே இதற்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. சில ராஜாங்க ரகசிய உத்திகளையும் இலங்கை அரசு கையாண்டதாகச் சொல்கிறார்கள். அது, எப்படியான நடவடிக்கை என்பதுதான் தெரியவில்லை. அதுகுறித்த சந்தேகம் பலருக்கு உள்ளது" என்றார்.

பத்திரிகையாளர் ஸ்ரீகாந்த் பேசுகையில், "சீனா, தனது எலெக்ட்ரானிக் பொருள்களை விற்பனைசெய்யும் தொழில்களை இலங்கையில் விரிவுபடுத்திவருகிறது.

இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கை
இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கை

மேலும், இலங்கைக் கடற்கரையில் போர்ட் சிட்டி அமைத்தும், தேசிய நெடுஞ்சாலைப் பணிகளையும் செய்துவருகிறது. இதனால் சீனாவிலிருந்து ஏராளமானோர் இங்கு தொழில் நிமித்தமாக வசிக்கின்றனர். சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியதும், இங்குள்ள சீனர்களை அரசாங்கம் கண்காணிக்கத் தொடங்கியது. அதன்பிறகு, அவர்களை முழுக் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவந்தது. அப்படிக் கொண்டு வரப்பட்ட சீனர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த சில நாள்களாக, சீனர்கள் ஒருவரைக்கூட நாட்டில் பார்க்க முடியவில்லை. அவர்களுடைய விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது ரகசியமாகவே உள்ளது.

புஷ்பகுமார் சமூக ஆர்வலர்
புஷ்பகுமார் சமூக ஆர்வலர்

அதைத் தொடர்ந்து, இலங்கையில் பரவல் தொடங்கும் முன்பே சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனைகள் மையம் அமைக்கப்பட்டு, வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்படி பரிசோதனைக்கு உட்படுத்தியவர்களை, நாட்டில் அப்படியே உலவ விடாமல், அவர்களை 21 நாள்கள் தனிமைப்படுத்தியது. அதன்பின்னர் அவர்களுக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பியது. இப்படி படிப்படியாகத் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது இலங்கை அரசு. அதன் அடுத்தகட்டமாக, இந்தியாவில் லான்டெளன் அறிவித்ததும், இலங்கையில் ஊரடங்கைப் பிரகடனப்படுத்தியது.

இலங்கையின் இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும், ராணுவத்தின் மேற்பார்வையில் கட்டுக்கோப்பாக நடந்து வருகிறது. இலங்கையில் பிரதமர் தேர்தலுக்காக அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதால், அனைத்து அதிகாரங்களும் கோத்தபய ராஜபக்ஷேவிடமே உள்ளன. இது தொடர்பாக எந்த அமைச்சர்களையும் அவர் கலந்து ஆலோசிக்காமல், அனைத்து முடிவுகளையும் அவரே இறுதிசெய்து, உத்தரவுகளை ராணுவத்திற்குப் பிறப்பித்துவருகிறார். அந்த உத்தரவை ராணுவம் கடைப்பிடித்துவருகிறது. அதுமட்டுமன்றி, இங்கு ஊரடங்கு என்பது இலங்கை மக்களுக்கு பழக்கமான ஒன்று. அவர்கள் அதை முழுமையாகக் கடைப்பிடிப்பார்கள். மீறி, அவர்கள் வெளியே வந்தால், ராணுவத்தின் பிடியில் சிக்க நேரிடும் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது.

அதோடு, இங்கு சமூக இடைவெளி தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாலும், இங்கு நோய்ப் பரவல் குறைந்து காணப்படுகிறது. மேலும், தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் எந்த பாரபட்சமும் இன்றி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுவரை மற்ற விஷயங்களில் தமிழர்கள் நலனில், இலங்கை அரசுக்குப் பாகுபாடு இருந்திருக்கலாம். ஆனால், கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் எந்தவித பாரபட்சமுமின்றி தமிழர்களைப் பாதுகாத்துவருகிறது. அதற்குக் காரணம் தமிழர்களிடத்தில் நோய்த் தொற்று பரவுகின்ற நிலை ஏற்பட்டால், அது சிங்களர்களையும் பாதிக்கும் என்பது அரசுக்குத் தெரியும். அதன் காரணமாகவும், இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கை, இலங்கையில் எந்தப் பாரபட்சமின்றி நடந்துவருகிறது" என்றார்.

`3 மொழிகளில் போஸ்டர்; வாட்ஸ் அப் புகைப்படம்!’ - மாயமான  கொரோனா தொற்று வாலிபர் சிக்கியது எப்படி?
சிவாஜிலிங்கம் இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்
சிவாஜிலிங்கம் இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்

இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், "கொரானோ தடுப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் சிறப்பான முறையில் எடுத்துவருகிறது. அதை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். மேலும், இந்தப் பணியை முன்கூடியே செய்திருந்தால் ஒன்றிரண்டு பாதிப்புகூட ஏற்பட்டிருக்காது. அதற்குக் காரணம், இங்கு பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதால், அரசாங்கத்தால் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இல்லையென்றால் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இந்தத் தொற்றை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி இருக்கும் இலங்கை அரசு. இப்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கை நல்ல முறையில் நடந்துவந்தாலும், எளிய நடுத்தர வர்க்க மக்கள் வேலை இழந்து, வருமானமின்றி வீட்டிலேயே பசியும் பட்டினியுமாக முடங்கி இருக்கிற நிலையே உள்ளது. தற்போது, அரசாங்கப் பணியில்லாத வீடுகளுக்கு நிவாரண உதவியாக, 5000 ரூபாய் இலங்கை அரசு வழங்கிவருகிறது.

இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கை
இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கை

இலங்கையில் உள்ள இரண்டு கோடியே பத்து லட்சம் பேரில் பெரும் பகுதியினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள். இந்த உதவி அந்த மக்களுக்கு போதாது. எனவே, இந்த உதவியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். இந்திய மக்களைப்போன்று , இங்கு வீட்டிலிருந்து வெளியே வந்து உணவு தேட முடியாது. அவ்வாறு வெளியே வந்தால் ராணுவம், அவர்கள் மீது தாக்குதலை நடத்தும். அதனால் அவர்களுக்கு வழங்குகிற நிவாரண உதவியைச் சரியாக வழங்க வேண்டும். இதில் மிக முக்கியமாகத் தமிழர்கள் வாழும் பகுதிகளை இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதில் சுனாமி, உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி, தற்போதுதான் மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. அதனால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதோடு, கூடுதல் நிவாரண உதவியும் வழங்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு