Published:Updated:

`எனக்காக அவர்கள் இருந்தார்கள்; மீண்டேன்!' - கொரோனாவிலிருந்து மீண்டவரின் தன்னம்பிக்கை கதை

நாகராஜகுமார்
#SpreadPositivity
#SpreadPositivity

``கொரோனா வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே வந்துவிட்டாலும் கொரோனாவுக்கு அஞ்சாமல் முறையான சிகிச்சை, உணவு முறைகளைக் கடைப்பிடித்தால், கொரோனாவிலிருந்து நிச்சயம் விடுபடலாம். அதற்கு என் கதையே சிறந்த உதாரணம்." #SpreadPositivity

பத்திரிகையாளர், குழந்தை எழுத்தாளர், பதிப்பாளர், சினிமா விமர்சகர், பயண விரும்பி என்று பன்முகங்கள் கொண்டவர் கோ.கணேசன். 50 வயதைக் கடந்தவர். பலருக்கும் உதவும் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்த இவரை கொரோனா வலை சமீபத்தில் கட்டிப்போட்டது. அந்த வலைப்பின்னலிருந்து தைரியத்துடன் மீண்ட கதை இது...

``கொரோனாவா நமக்கெல்லாம் வராது என்ற எண்ணத்தில் இருந்தவன் நான். இரண்டாவது அலை தொடங்கியதும் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை... இங்கெல்லாம் கொரோனா பாதிப்பிலிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்துகொண்டிருந்தேன்.

ஒரு நாள் ஜுரம் வந்தது. கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. ஆனால், இப்போது கொரோனா டெஸ்ட் செய்து, கொரோனா இருப்பது தெரியவந்தால் மருத்துவமனையில் அட்மிட் ஆகணும். நாம் செய்துவரும் உதவிகளை, நமக்காகக் காத்திருப்பவர்களுக்கு யார் செய்வார்கள், பார்த்துக்கலாம் என்று கொரோனா டெஸ்ட்டை இரண்டு நாள்கள் தள்ளிப்போட்டேன்.

மீள்வோம் மீட்போம்
மீள்வோம் மீட்போம்

ஆனால், அடுத்த இரண்டு நாள்களில் என்னால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை. கொரோனா என்னைப் பிடித்துக் கொண்டது என்பதை உணர்ந்தேன். நெருங்கிய உறவினர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து என்னை வலுக்கட்டாயமாக சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு ஏற்றி விட்டனர்.

இத்தனைக்கும் முகத்துக்கு மாஸ்க், கைகளுக்கு கிளவுஸ், பையில் சானிடைசர் என்று வலம்வந்தவனுக்குள் எப்படியோ கொரோனா வந்துவிட்டது. இனி அதைப் பதற்ற‌மில்லாமல் எதிர்கொண்டு மீண்டு வர வேண்டும். அந்த எண்ணம்தான் ஆம்புலன்ஸில் ஏறியதும் என்னுள்ளே நிறைந்திருந்தது.

ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் நுழைந்ததும் மருத்துவக்குழு என் நிலைமையைப் பார்த்ததும் என்னை `ஸீரோ டைம் OP' பிரிவுக்குக் கொண்டு சென்றனர். அங்கு எனக்கு பிபி, ரத்தம், சி.டி.ஸ்கேன் போன்ற பத்துக்கும் மேற்பட்ட சோதனைகளை அடுத்தடுத்து தொடர்ச்சியாகச் செய்து என்னை வார்டு எண் 20-க்கு மாற்றி ஆக்சிஜன் இணைப்பையும் கொடுத்தார்கள்.

`ஸீரோ டைம் OP’ பிரிவு அசாதாரணமானது. சாதாரண காலங்களில் இத்தனை சோதனைகளையும் செய்ய சில மணி நேரங்களாவது ஆகலாம். கொரோனா காலம் என்பதால் மருத்துவக்குழு அத்தனை விரைவில் செய்து முடித்தது. ஒருவித மயக்கநிலையில் இருந்த எனக்கு நடந்ததையெல்லாம் நம்ப முடியவில்லை. நமக்காகவே இதெல்லாம் நடக்கிறது என்று ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.

என்னை படுக்கவைத்த வார்டு எண் 20, முன்பு கேன்சர் வார்டாக இருந்ததாம். அது சென்ட்ரலைஸ்டு சிஸ்டம் என்பதால், மேலே நான்கைந்து பைப் லைன்கள் போகின்றன. அதில் ஒன்று ஆக்சிஜன் பைப் லைன். ஒவ்வொரு படுக்கைக்கும் மேலே மெயின் லைனிலிருந்து இணைப்பு எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து நோயாளிக்கு ஏற்றபடி ஆக்சிஜன் அளவைக் கூட்டி குறைத்து வைக்கிறார்கள்.

ஆக்சிஜன் ரெகுலேட்டர் கருவியிலிருந்து ஒரு மெல்லிய பைப் வழியாக மாஸ்க் மூலம் என் முகத்தை இணைத்தார்கள். இனி இதுதான் நம் சுவாசத்துக்கு வழி என்று கண்களை மூடினேன். மருத்துவ‌மனையில் சேர்ந்த முதல் மூன்று நாள்கள் எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் அளவுக்குத்தான் என் உடலில் தெம்பிருந்தது.

Covid 19  - Representational Image
Covid 19 - Representational Image

முதல் மூன்று நாள்கள் எல்லாமே படுக்கையில்தான். ஆக்சிஜன் மாஸ்க்கை எடுக்க முடியாது. எனக்கு சுவாசத்தை வழங்கிக் கொண்டிருந்த கருவியில் ஒரு சிறிய கன்டெய்னரில் தண்ணீர் ஊற்றி அதை அந்தக் கருவியுடன் இணைக்க வேண்டும். தேவையான அளவுக்கு ஆக்சிஜன் லெவல் வைக்க வேண்டும். கன்டெய்னரில் இருக்கும் தண்ணீர், நோயாளியின் சுவாசத்துக்கேற்ப விரைவாகவோ, மெதுவாகவோ குறையும்.

ஒரு நாள் நள்ளிரவு. மயக்கநிலையிலிருந்து திடீரென விழித்தேன். என் சுவாசக் கருவியைப் பார்த்தேன். ஆக்சிஜன் ரெகுலேட்டரில் தண்ணீர் இல்லை என்பதை உணர்ந்தேன். எழுந்துகொள்ள முயற்சி செய்தபோது எங்கிருந்தோ ஓடிவந்த உதவி மருத்துவர் அதை நிரப்பினார். உயிர் மூச்சு வந்தது.

``நன்றி சிஸ்டர். நீங்களெல்லாம் ரெஸ்ட் எடுக்கவே மாட்டீங்களா?” என்று கேட்டேன்.

``இல்ல சார்... ஒரு மணி நேரத்துக்கொருமுறை எல்லாருடைய ஆக்சிஜன் கருவியிலும் தண்ணீர் போதிய அளவுக்கு இருக்குதான்னு பார்த்துட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன். அப்புறம் அடுத்த ரவுண்ட் செக் பண்ணப் போவேன்” என்றார்.

ஒரு நாள் திடீரென எனக்கு ஆக்சிஜன் லெவல் இன்னும் அதிகமாகத் தேவைப்பட்டது. அதனால் எனக்கு சுவாசிப்பது மிகவும் சிரமமாகிவிட்டது. அங்கு வந்த மருத்துவ உதவியாளரிடம் என் நிலையைச் சொன்னேன்.

Oxygen cylinder / Representational Image
Oxygen cylinder / Representational Image
AP Photo

``இந்த வார்டுக்கு வரும் ஆக்சிஜன் லெவல் அவ்வளவுதான். இன்னும் அதிகமாக வேண்டும் என்றால் ஐ.சி.யு பிரிவுக்கு மாற்ற வேண்டும். இப்போது அங்கு இடம் உடனடியாகக் கிடைக்காது. என்ன செய்யலாம்?” என்று யோசித்தவர், உடனே ஐ.சி.யு பிரிவில் ஆக்சிஜன் பிரச்னை இல்லாத நோயாளியின் ஆக்சிஜன் ரெகுலேட்டரை சிலிண்டருடன் கொண்டு வந்தார்.

இடமாற்றம் செய்யும்போது, இணைப்புகளைத் துண்டித்து இங்கு எடுத்துவந்ததால் பிரதான மருத்துவரிடம் வீடியோகால் மூலம் தொடர்புகொண்டு, ஆக்சிஜன் கருவிக்கான இணைப்புகளைக் கொடுத்து எனக்கு தேவையான அள‌வுக்கு ஆக்சிஜன் அளித்து என்னைக் காப்பாற்றிய நிமிடங்கள் மரணத்தைத் தொட்டு பார்த்த நிமிடங்கள்.

நான்காம் நாள் கொஞ்சம் தெம்பு வந்தது. சுவரைப் பிடித்தபடியே கழிவறைக்குச் சென்று வந்துவிடுவேன். எவ்வளவு சீக்கிரம் வருகிறேனோ அவ்வளவு சீக்கிரம் படுக்கைக்குத் திரும்பி ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து கொண்டுவிட வேண்டும். இல்லையெனில் அடுத்த சில நிமிடங்களுக்கு சுவாசம் என்பதே பிரச்னைதான்.

`மாஸ்கை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை எடுத்துப் பாருங்கள், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனே மாஸ்க்கை மாட்டிக்கோங்க’ என்ற மருத்துவரின் எச்சரிக்கை குரல் என்னுள் அடிக்கடி ஒலிக்கும். ஆக, உள்ளேயோ, வெளியேயோ மாஸ்க்கின் மீதான நம்பிக்கை அதிகரித்தது.

கொரோனா காலத்தில் மருத்துவமனையில் எனக்கான உணவுப் பட்டியல் சற்று நீளமானது.

காலை 6 மணிக்கு பால்,

6.30 மணிக்கு மருத்துவக் குழுவின் செக் அப்,

7 மணிக்கு மிளகுத்தூள் சேர்த்த கஷாயம்,

8 மணிக்கு டிபன் (இரண்டு இட்லி, ஒரு தோசை, பொங்கல் உப்புமா + கார சட்னி, சாம்பார்).

நான் சர்க்கரை நோயாளி என்பதால் டிபனுடன் ஒரு நர்ஸ் வந்து இன்சுலின் ஊசி போட்டுவிடுவார். அன்றைக்கு நான் சாப்பிட வேண்டிய மாத்திரைகளைக் கொடுத்துவிடுவார்.

Food- representational image
Food- representational image
Image by Ron Mitra from Pixabay

10 மணிக்கு மீண்டும் பால்,

11 மணிக்கு ஒரு கப் வெள்ளரிக்காய்,

11.30 மணிக்கு மருத்துவக் குழுவின் செக் அப்,

12 மணிக்கு மீண்டும் கஷாயம்,
மதியம் 1 மணிக்கு இன்சுலின் ஊசி + இரண்டு அவித்த முட்டைகளுடன் லஞ்ச் (வெரைட்டி ரைஸ், சாதம், சாம்பார், பொரியல், கூட்டு + மோர் மிளகாய்),

2 மணிக்கு மஞ்சள்தூள் சேர்த்த கஷாயம்,

3 மணிக்கு பால்,

மாலை 4 மணிக்கு சுண்டல்,

5 மணிக்கு லெமன் சேர்த்த கஷாயம்.

மாலை 6 மணிக்கு ம‌ருத்துவக் குழுவின் செக் அப்.

இரவு 8 மணிக்கு இன்சுலின் ஊசி + டின்னர் (2 சப்பாத்தி, 2, இட்லி சாம்பார் + குருமா)

ஒன்பது மணிக்கு கஷாயம்,

பத்து மணிக்கு பால் எனக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கஷாயத்தின் தன்மையை ஓரளவுதான் யூகிக்க முடிந்தது. வாசனையும் சுவையும் இல்லாததால் முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.

அசந்து கண்களை மூடிக்கொண்டிருந்தாலும் ஆயாம்மாக்கள் குரல் கொடுத்து எழுப்பி நம்மை சாப்பிட வைத்து விடுவார்கள். இப்படி நம் வீட்டில்கூட நேரத்துக்கு இவையெல்லாம் கிடைக்காது என்று நினைத்துக்கொள்வேன். ஒரு பதற்ற நிலையிலிருந்து விடுபட்டேன். மனதில் தைரியம் பிறந்தது.

ஒரு நாளைக்கு இத்தனையையும் சாப்பிட்டும்கூட என் எடை 15 கிலோ குறைந்துவிட்டது. கொரோனாவின் பாதிப்பில் எடை குறைவதும் பிரதானமான ஒன்றாம். அதற்குத்தான் நமக்கு இத்தனை முறை சாப்பிட, குடிக்க எனக் கொடுக்கிறார்களாம்.

உணவுச் செலவு மட்டும் ஒரு நோயாளிக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கும் மேல் ஆகும். இவை தவிர மருத்துவ சிகிச்சை தொடர்பான செலவுகள். அத்தனையும் மீறி அவர்களின் கவனிப்பை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன.

ஓரளவு என்னை நான் உணர்ந்த பிறகு படிப்படியாக ஆக்சிஜன் அளவைக் குறைத்து, ஆக்சிஜன் கருவியின் இணைப்பில்லாமல் இயல்பான சுவாசத்துக்குக் கொண்டுவந்து தேவையான மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளுடன் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

Corona Pandemic
Corona Pandemic
Pixabay
`கொரோனாவை விரட்ட தன்னம்பிக்கைதான் ரொம்ப முக்கியம்!' - அவள் வாசகியின் அனுபவ பகிர்வு #SpreadPositivity

அந்த வார்டில் இருந்த அத்தனை நோயாளிகளில் எனக்கு அட்டெண்டர் இல்லாத குறையைத் தீர்த்தவர்கள் அங்கிருந்த மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், ஆயாம்மாக்கள்தாம். இவர்கள் தன்னலம் கருதாமல், ஓய்வு ஒழிச்சலின்றி என்னைப் பராமரித்து, தைரியமூட்டி, என்னை கொரோனா அலையிலிருந்து மீட்ட அந்த நாள்கள் மறக்க முடியாதவை; ஆனால், மறக்க வேண்டியவை.

இது கொரோனாவால் மருத்துவமனையில் எனக்கு கிடைத்த அனுபவம். அரசுப் பள்ளியில் படித்தாலும் ஆறாம் வகுப்பிலிருந்து டக் இன் செய்த ஷர்ட்டும், ஷூ வும் தூக்கிய தோள்களுமாக கெத்தாக இதுவரை வலம் வந்த என்னை கொரோனா துவைத்துப் போட்ட துணியாகப் பிழிந்தெடுத்தது தனிக் கதை.

கொரோனா வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே வந்துவிட்டாலும் கொரோனாவுக்கு அஞ்சாமல் முறையான சிகிச்சை, உணவு முறைகளைக் கடைப்பிடித்தால், கொரோனாவிலிருந்து நிச்சயம் விடுபடலாம். அதற்கு என் கதையே சிறந்த உதாரணம்.

கொரோனாவை எதிர்த்து மீள்வது நம்மால் மட்டும் முடியாது. இவர்களைப் போன்ற மருத்துவக் குழுவினரின் சேவையும், அவர்கள் தரும் நம்பிக்கையும், நமக்குள் மீண்டு விடுவோம் என்ற தைரியமும் வேண்டும் என்று தோன்றியது...

வணங்குகிறேன் அவர்களை!

அடுத்த கட்டுரைக்கு