Published:Updated:

அதிகரிக்கும் இடைவெளி... தேயும் தாம்பத்யம்... தடுமாற்றங்களும் தீர்வுகளும்!

தேயும் தாம்பத்யம்
பிரீமியம் ஸ்டோரி
தேயும் தாம்பத்யம்

கணவன் - மனைவி இடையில் தலையெடுக் கும் பல்வேறு பிரச்னைகளுக்கும், உரிய நேரம் ஒதுக்காததே பிரதான காரணமாக இருக்கிறது

அதிகரிக்கும் இடைவெளி... தேயும் தாம்பத்யம்... தடுமாற்றங்களும் தீர்வுகளும்!

கணவன் - மனைவி இடையில் தலையெடுக் கும் பல்வேறு பிரச்னைகளுக்கும், உரிய நேரம் ஒதுக்காததே பிரதான காரணமாக இருக்கிறது

Published:Updated:
தேயும் தாம்பத்யம்
பிரீமியம் ஸ்டோரி
தேயும் தாம்பத்யம்

உங்கள் வாழ்க்கைத் துணை யுடன் அன்பும் அன் யோன்யமுமான ஓர் அணைப்பு கடைசி யாக எப்போது வாய்த்தது என்பது நினைவிருக் கிறதா? கண்கள் பார்த்து பேசி, விரல்கள் கோத்து, ஆவி பறக்கும் தேநீருடன் கதைகள் பேசி, பொய்க்கோபம் சீண்டி... இப்படி அரை மணி நேரமேனும் பொழுதுபோக்கி எத்தனை நாள்களாகிறது என்று நினைவுகூர முடியுமா?

சமீபத்தில்தான் அப்படி ஒரு சந்தோஷத்தை ருசித்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் இல்லறம் நல்லறமாக, ஆரோக்கியமாகப் போய்க் கொண்டிருக்கிறது... வாழ்த்துகள்! மேலும், இந்தப் பொன்பொழுதுகளின் நிறைவாக வழக்கமான உடல்சார் தேவைகளும் ஈடேறினால்... ‘டிரீம் கப்புள்’ நீங்கள்!

‘ப்ச்... எல்லாமே பழங்கதையா மட்டுமே நினைவடுக்குல தட்டுப்படுது’ என்பவர்கள் பலருக்கும், பிரியம், ஆராதனை இல்லாத அவசரகதி தாம்பத்யமே தலையெழுத்தாக மாறி இருக்கலாம். மேலும் பலருக்கு அப்படிப் பட்ட தாம்பத்யத்துக்கான வாய்ப்புகளும் கூட குறைந்து போய்க்கொண்டிருக்கலாம். இவற்றையெல்லாம் தொண்டையில் சிக்கிய முள்ளாக எங்கேயும் புலம்பக்கூட வழியில்லாது தவிப்பவர்களுக்கும், அவ்வாறு நிகழாது தங்கள் பெட்ரூம் சந்தோஷத்தை தற்காத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்தக் கட்டுரை.

‘நீங்க என் கூட நேரம் செலவழிக்கிறதே இல்ல!’

கணவன் - மனைவி இடையில் தலையெடுக் கும் பல்வேறு பிரச்னைகளுக்கும், உரிய நேரம் ஒதுக்காததே பிரதான காரணமாக இருக்கிறது என்பதை நம்மில் பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம். ஓவர்டைம் வேலை, பார்ட் டைம் வேலை என நேரத்தை கரன்சியால் அளக்கும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். எல்லா பாடுகளும் நம் குடும்பத் துக்குத்தானே என்ற ஒற்றை நியாயத்தில், தாம்பத்ய அச்சாணி முறிந்து போவதை பலரும் கவனிப்பதில்லை. அதிலும் ஆண் மட்டுமே வேலைக்குப் போகும் பல வீடுகளில், இல்லத்தரசி பாராமுகமாக நிராகரிக்கப் படுகிறார். குடும்பத்தின் ஒட்டு மொத்த சுமையையும் சுமப்பதான கணவனின் சிரமத்துக்காக, மனைவி தனக்கான அந்தரங்கத் தேவைகளைத் தியாகம் செய்கிறார், அந்த நிர்பந்தத்துக்கு ஆளாகிறார். இருவரும் பணிக்குப் போகும் இல்லங்களில் இன்னும் விசாலமான விலகல் வீட்டை நிறைத்திருக்கும்.

‘கப்புள் டைம்’ (Couple time) உருவாக்குவது எப்படி?

தியேட்டர், அவுட்டிங் என்றெல்லாம் நாம் நம் இணைக்காக எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் என்பதைவிட, அதை எப்படி ஆத்மார்த்தமாகச் செலவிடப்போகிறோம் என்பதில் ஒளிந்திருக்கிறது இனிப்பான இல்லறத்தின் சூத்திரம். மனைவி தனியாளாய் அல்லாடும் சமையலறையில் கூடமாட ஒத்தாசை செய்கிறேன் பேர்வழியென ஊடுருவித் திரும்ப கணவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? படுக்கையில் சரிந்ததும் கொஞ்சம் அன்யோன்யமாகப் பேசி மன பாரங்களை ஆற்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வெளியே கிளம்பும்போதும், தோளில் தட்டி, கைகள் பிடித்து என சிறு ஸ்பரிசத்துடன் ‘சரி கிளம்புறேன்ப்பா...’ என்று சொல்லிச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? எனவே, நேரத்தின் மீது பழியைப் போடாமல், அந்த நேரத்தை உருவாக்குங்கள். ஒரு குட்டி ரொமான்ஸுக்கு 30 செகண்ட்ஸ் போதும் என்பதை எல்லாம் திருமணமான புதிதில் உங்களுக்கு யாரும் சொல்லியா தந்தார்கள்? அந்த 30, 30 செகண்ட்ஸை வாரம் ஒரு முறையேனும் உருவாக்குங்கள்.

மூன்றாம் நபர்கள் தலையீடு!

தம்பதிக்கு இடையில், கணவனின் பெற் றோர், மனைவியின் பெற்றோர், இருவரின் நட்பு வட்டம், உறவினர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மூன்றாம் நபர்களே. ஒரு சுமுகமான இல்லறத்தில் இவர்களில் யார் வேண்டுமானாலும் பிரச்னைகளைக் கிளறிவிடலாம் என்பதை, எத்தனையோ முறை நாம் அனுபவப்பட்டிருப்போம்தானே... ‘இவள்/இவன் என்னவள்/ன்... வேறு யாரையும் விட நான்தான் இவளுக்கு/இவனுக்கு முக்கியம்’ என்ற நம்பிக்கையையும், உரிமை யையுமே அது அசைத்துப் பார்த்துவிடும் என்பதால், அந்தச் சூழலால் தம்பதிக்கு இடையில் ஏற்படும் விரிசலும் அனலாக இருக்கும். எனவே, இனி எந்தச் சூழலும் அப்படி ஒரு மூன்றாம் நபரை உங்களுக்கு இடையில் அனுமதிக் காதீர்கள். மேலும், மூன்றாம் நபர்கள் முன்னிலையில் கொட்டப்படும் குடும்ப ரகசியங்கள் கல்வெட்டாகக் கணக்கில் ஏறிக்கொள்ளும் என்ப தால் அதைச் செய்யவே செய்யா தீர்கள். ‘நீ என் பொறுப்பு, சரியோ, தவறோ... உன்னை யாரிடமும் நான் விட்டுத் தர மாட்டேன்’ என்பதை இணையை உணர வைப்பதைவிட உலகத்தில் ரொமான்டிக்கான விஷயம் எதுவும் இல்லை.

அதிகரிக்கும் இடைவெளி... தேயும் தாம்பத்யம்... தடுமாற்றங்களும் தீர்வுகளும்!

ஈகோ எனும் புதைகுழி!

இன்று பல வீடுகளில் பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள், அவர் களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளதுடன் குடும்பத்தின் பொறுப்புகளையும் பகிர்ந்துகொள் கிறார்கள். எனவே, அவர்களுக்கான உரிமையை, மரியாதையை இப்போது எதிர்பார்க்க ஆரம்பித்திருக் கிறார்கள். நியாயமாகப் பார்த்தால், இவற்றையெல்லாம் தாமே உணர்ந்து, சரிசமமாக நடத்துவதை ஆண்களே முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆணாதிக்க ஈகோ அதை உணர/தர மறுக்கும்போது, அங்கே பிரச்னை ஆரம்பமாகும்.

அது அன்பை, நெருக்கத்தைப் பொசுக்கும். சில வீடுகளில், பெண்களின் ஈகோவும் அதற்குக் காரணமாக அமையலாம். கட்டிலில் ஈகோ இடையில் படுத்துக்கொள்ளும் போது வீடுகள் இங்கே ஏராளம். அதில் நம் வீடும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அந்த அணுகுமுறையால் பிரச்னை குறைவதற்குப் பதிலாக மேலும் வளரவே செய்யும். கணவனோ மனைவியோ, ‘இது எனது குடும்பம்; என் மனைவி/கணவன்; என் குழந்தை; இவர்களின் நலனுக்கும் எதிர்காலத்துக்கும், குடும்ப அமைதிக் கும் நானே பொறுப்பு’ என அர்ப்பணித்துக் கொள்ளும்போது தான், அது ஈகோ போக்குகள் இல் லாத இல்லறத்துக்கு வழிவகுக்கும்.

மொபைல், சமூக வலைதளங்கள்... எரிச்சல் வரவைக்கும் காரணிகள்!

தம்பதி ஒரே சோஃபாவில் அமர்ந்திருந்தாலும் ஆளுக்கோர் அலைபேசியில் மூழ்கிப் போயிருப்பது, ஒருவர் ஹாலில் டிவி பார்ப்பது, மற்றொருவர் ரூமில் ஓடிடியில் தஞ்சமடைவது என, ஒரே கூரையின் கீழ் இரு வேறு தனி உலகங்களாக கேட்ஜெட்கள் தம்பதிகளைக் கிடத்திவிடுகின்றன. குறிப்பாக, சில வீடுகளில் கணவன், மனைவிக்கிடையே பூசல் முளைக்க சமூக ஊடகங்கள் முக்கிய காரண மாகின்றன.

மனக்குமுறலை இறக்கி வைக்கும் முனைப்பிலான ஃபேஸ்புக் பகிர்வு, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போன்றவை இணைக்கு இடையி லான விரிசலை மேலும் அதிகரிக் கின்றன. மேலும், அருகிலிருக்கும் தன்னைப் புறக்கணித்து ஆன்லைன் உலகத்தில் பொய்மானைத் தேடும் வாழ்க்கைத் துணை மீது எரிச்சல் மண்டவே செய்யும். இந்தப் புகைச்சல், சந்தேக நெருப்பாகவும் பற்றிக்கொள்ளலாம். இன்னொரு பக்கம், ஃபேஸ்புக்கில் அன்பை தருகிறேன், அரவணைப்பை தருகிறேன் என்று வருபவர்களிடம் இரையாகி உடல், மனம், பொருளாதாரத்தில் ஆண்களும் பெண்களும் சேதமடைந்த கதைகளையும் நாம் அறிவோம்.

நெருக்கம், நிம்மதியைக் காப்பாற்ற வேண்டு மென்றால்...

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டா என்று எந்நேரமும் மொபைலும் கையுமாக இருப்பவர்கள் அதனால் வீட்டுக்குள் வெடிகுண்டு வெடிக்காமல் இருக்க பின்வருபவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சமூகவலைதளத்தில் ஒருவரை ஒருவர் பின்தொடருங்கள், ஒருவருக்கு ஒருவர் நல்ல ஃபாலோயராக இருங்கள், ரகசியங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

‘இரவு 10/11 மணிக்கு மேல் நோ’ என சோஷியல் மீடியாவில் உலவுவதில் இருவரும் ஒரு காலநிர்ணயம் வைத்துக் கொள்ளுங்கள்.

முன்னாள் காதலி/காதலர் அக்கவுன்ட்களை தேடுவதையும், அவர்களுடன் நட்பை புதுப் பிப்பதையும் தவிர்த்துவிடுங்கள்.

இணைக்கு இடையிலான பிரச்னையை எப்போதும் போஸ்ட், ஸ்டேட்டஸில் பகிராதீர்கள்.

இணையுடனான ஒரு சண்டைக்குப் பின்னர், ‘சரிதான் போ எனக்கு சோஷியல் மீடியா இருக்கு’ எனும் வகையில் மொபைலை உடனடியாகக் கையில் எடுக்காதீர்கள்.

சமூக வலைதளங்கள் உங்கள் நெருக்கத்தைப் பறிக்காமல் இருக்கவும், அழிக்காமல் இருக்கவும் இந்த குட் பிராக்டீஸ்களில் தவறாமல் இருங்கள்.

குழந்தை, வயது... தடையில்லை, தயக்கம் தேவையில்லை!

குழந்தைகள் வளர வளர, வயதாக ஆக, சில தம்பதிகளிடம் அவர்களின் நெருக்கத்தில் இடைவெளி வந்து அமர்ந்துகொள்கிறது. ஆனால், மிச்ச வாழ்க்கையின் சவால்களிலும் கரை காண்பதற்கான உந்துதல் பிறப்பது அங்குதானே... உடலையும் மனதையும் கசக்கிப் பிழிந்த அன்றைய தினத்தின் கசடுகளைக் கழுவிக் களைய, குடும்பத்தில் சிறிதும் பெரிதுமாய் எழும் பூசல்களை நீர்க் குமிழியாய் ஊதி உடைக்க, காலங்கள் உருண்டாலும் பிரியத்தை உயிரோடு வைத்திருக்க, வாழ்வின் சவால்கள் எத்தனை திக்குகளில் சுழற்றியடித்தாலும் ‘உனக்கு நானிருக்கிறேன்’ என்பதை துணைக்கு உணர்த்த... இந்த அந்தரங்கப் பரிமாறலுக்கான நேரத்தைவிட வேறென்ன வாழ்க்கையில் முக்கியமாக இருந்துவிடப்போகிறது... அந்த மேஜிக்கை பலமுறை உணர்ந்தவர்கள்தானே நாம்... அந்தப் பழைய உண்மையை புதுப்பிப்பதில் ஏன் இப்போது பின்னடைவு?

ஆரம்ப ஆண்டுகளில் இருப்பதைப் போன்றே அதற்குப் பின்னரான உறவில் நெருக்கம் இருக்காது போகலாம். ஆனால் அந்த இடைவெளி அதிகம் செல்லாது பார்த்துக்கொள்வது முக்கியம்.

குழந்தைகளோ, இதர காரணங்களோ... தாம்பத்யத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற் கான காரணங்கள் என்று எதுவும் இல்லை உலகில்.

உடைத்துப் பேசுவதென்றால், திருமண மான புதிதில் தென்பட்ட தயக்கங்களும் தடுமாற்றங்களும் களைந்து இன்னும் தீவிரமான போக்கில் ஆழ விழ மனித உடல் விரும்பும், முனையும் காலம் இதுதான். இல்லறத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் என்று இதைச் சொல்லலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அப்படி எந்த ஒரு தடையையும் தம்பதிகள் தாங்களாகவே தீர்மானித்துக்கொள்ளவும் தேவையில்லை.

ரொமான்ஸுக்கு எக்ஸ்பயரி காலம் இல்லை... ஹோம் ஸ்வீட் ஹோம்!

*****

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

‘தம்பதிக்கு இடையே இடைவெளி அதிகரிக்கக் காரணம் என்ன?’ - அவள் விகடன் சமூக வலைதளப் பக்கத்தில் நாம் நடத்திய வாக்கெடுப்பில் வாசகர்களின் பதில்கள்...

அதிகரிக்கும் இடைவெளி... தேயும் தாம்பத்யம்... தடுமாற்றங்களும் தீர்வுகளும்!

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் தாம்பத்யம்!

``தம்பதிக்குள் பாலியல் நாட்டம் குறைகிறது, முன்புபோல் இயல்பாக ஈடுபட முடியவில்லை என்றால், வயதின் மீது பழியைப் போட்டு வாழாதிருக்கக் கூடாது. பாலியல் தடுமாற்றங்களின் பின்னணியில் தீவிரமான உடல் பாதிப்பு ஒளிந்துகொண்டிருக்கலாம் என்பதால், தாம்பத்யத்தை ஆரோக்கியமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் பார்க்க வேண்டும்’’ என்று சொல்லும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மனநலத்துறை உதவிப் பேராசிரியரும், மருத்துவ உளவியல் நிபுணருமான பா.சுஜிதா தரும் ஆலோசனைகள்...

அதிகரிக்கும் இடைவெளி... தேயும் தாம்பத்யம்... தடுமாற்றங்களும் தீர்வுகளும்!

“பாலுறவில் ஈடுபாடு குறைவதற்கு இன்று பிரதான காரணமாக மன அழுத்தம் இருக்கிறது. குழந்தை வளர்ப்பு, பொருளாதாரம், அலுவல் மற்றும் இல்லம் சார்ந்த பல்வேறு மன அழுத்தங் களால் புகை, மது என்று விழும் ஆண்களுக்குக் கூடுதல் அழுத்தமாக பாலியல் சிக்கல்களும் சேர்ந்துகொள்ளும். பெண்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளப்படாதபோது தீவிர உடல், மன நலப் பிரச்னைகளுக்கும் அது காரணமாகக்கூடும்.

ஆண், பெண் இருவருக்குமே பல்வேறு உடல்நல பாதிப்புகளாலும், மற்றும் மனச்சோர்வுக் காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள், சில கர்ப்பத் தடை மாத்திரைகள் காரணமாகவும் பாலியல் நாட்டம் குறையக்கூடும். எனவே, ஐயம் எழுந்த வர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

ஆண்கள் ஆல்கஹால் குறைப்புடன், புகைக்கு முழுக்கு போடுவதும் அவசியம். இருபாலரும் உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்குவதும், அத்தியாவசிய தூக்கம் பேணுவதும் முக்கியம். இவற்றில் கூடுமானவரை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பங்கு பெறுவது உள்ளிட்ட, அன்றாடம் ஒன்றாக இருப் பதற்கான வாய்ப்புகளைத் தேடி உருவாக்குவது பாலியல் நாட்டத்தை ஊக்குவிக்கும். தாம்பத்யம் என்பது பாலுறவு மட்டுமல்ல; எதிர்பாரா அணைப்பு, சிறு முத்தம்கூட இணையை உயிர் சிலிர்க்க வைத்திடும் பியூட்டிஃபுல் கெமிஸ்ட்ரி அது!”

அதிகரிக்கும் இடைவெளி... தேயும் தாம்பத்யம்... தடுமாற்றங்களும் தீர்வுகளும்!

பொருளாதாரப் பிரச்னைகளும் விரிசலுக்குக் காரணமாகலாம்!

சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் பா.இளைய ராஜா, பொருளாதாரப் பற்றாக் குறையால் தம்பதிக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகளையும், அதைத் தவிர்ப்பதற்கான வழி களையும் பகிர்ந்து கொண்டார்.

“பொதுவாக, குழந்தைகள் வளர வளர செலவுகள் அதிகரிக்கும் காலகட்டத்தில், அது சுமையாகும் குடும்பங்களில் தம்பதிக்கு இடையில் இதன் காரணமாக விரிசல்கள் எழ ஆரம்பிக்கும்.

இன்றோ, கொரோனாவால் வேலையிழப்பு, தொழில் நஷ்டம் எனப் பெரும்பான்மையான குடும்பங்களும் பொருளாதாரச் சுழலில் சிக்கியிருப்பதால், அது பல தம்பதிகளின் அந் தரங்க உறவிலும் பிரதிபலித்து இணக்கத்தைக் கெடுக்கிறது. இதைக் கையாளவும் தவிர்க்கவும் இந்த மாத பட்ஜெட் என்று மட்டும் யோசிக்காமல், எதிர்கால நோக்கில் இருவரும் அமர்ந்து பேசி பொருளாதாரத் திட்டங்களை வகுக்கலாம், முடிவுகளை எடுக்கலாம். பிற்பாடு அப்படியான பிரச்னை எட்டிப்பார்க்கும்போது இருவரும் இணைந்து அதை எதிர்கொள்ள முடிவதோடு, தனிப்பட்ட சச்சரவுகளுக்கு வாய்ப்பில்லாமலும் போகும்.

அதேபோல நிதிசார் முடிவுகளில் வெளிப் படைத்தன்மை இருப்பது இருவருக்குமே நல்லது. வருமானம், செலவினம், சேமிப்பு, முதலீடு, கடன் உள்ளிட்டவை மட்டுமன்றி பிறந்தகம், உறவினர் மற்றும் நண்பருக்கான உதவியைக்கூட வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது அவசியம். ஒருவேளை அப்போ தைக்கு அது உரசலை உருவாக்கித் தணிந் தாலும், தொலைநோக்கில் பெருவெடிப்பான பிரச்னைகளை நிச்சயம் தவிர்த்திருக்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism