Published:Updated:

கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - ரூ.5 கோடி வழங்கிய சுந்தர் பிச்சை!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய ப்ளூடூத் உதவியுடன் இயங்கும் புதிய செயலி ஒன்றை வடிவமைத்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகநாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் லாக் டெளன் அறிவித்துள்ளது. இதன்காரணமாக மக்கள் வேலையின்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். ஏழை மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை அரசாங்கம் வழங்கிவருகிறது. தொழிலதிபர்கள், விளையாட்டுப் பிரபலங்கள் மற்றும் அரசியல்கட்சியினர் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

GIVE INDIA என்கிற தன்னார்வ அமைப்பு நன்கொடையாளர்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதி அளித்துள்ளார். தினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா லாக் டெளன் நேரத்தில் தேவையான பண உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என GIVE INDIA தெரிவித்துள்ளது. மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ட்வீட் செய்துள்ளது.

இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் கொரோனா தொற்றை அழிக்க உதவும் ஆராய்ச்சிகளுக்கு 800 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உள்ளதாக உறுதியளித்தது. சிறு வணிகங்களுக்கு மூலதனத்தை ஈட்ட உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான 200 மில்லியன் டாலர் முதலீட்டு நிதியும் இதில் அடங்கும்.

கூகுள்
கூகுள்

இதுமட்டுமன்றி கூகுள் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய ப்ளூடூத் உதவியுடன் இயங்கும் புதிய செயலி ஒன்றை வடிவமைத்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.

COVID-19 வைரஸ் தொற்று உலகைக் கடுமையாகப் பாதித்து வரும் நிலையில் பல்வேறு செல்வந்தர்கள் மக்களுக்கு நிதியளித்து வருகின்றனர். அந்த வகையில் டாடா குழுமம் ரூ.1,500 கோடி வழங்கியுள்ளது.

கொரோனா
கொரோனா

கொவிப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைஸ் லிமிடெட், அஜிம் ப்ரேம்ஜி நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ1,125 கோடி நிதியுதவி அளித்துள்ளனர். இவை தவிர இன்னபிற நிறுவனங்களும் இச்சமயத்தில் அத்தியாவசியத் தேவைகளான உணவு, சானிடைஸர், முகக்கவசம் போன்றவற்றை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த வரிசையில் Paytm, 4 லட்சம் முகக்கவசங்கள் மற்றும் சோப், சானிடைஸர் போன்ற 10 லட்சம் சுகாதாரப் பொருள்களை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இவை அதிகாரிகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு