Published:Updated:

“வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களுக்கும் விடிவு உண்டு!” - தமிழிசை சௌந்தர்ராஜன்

Tamilisai Soundararajan
பிரீமியம் ஸ்டோரி
Tamilisai Soundararajan

மனசே மனசே...

“வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களுக்கும் விடிவு உண்டு!” - தமிழிசை சௌந்தர்ராஜன்

மனசே மனசே...

Published:Updated:
Tamilisai Soundararajan
பிரீமியம் ஸ்டோரி
Tamilisai Soundararajan

ரசியல் எதிரிகளும் ஆச்சர்யப்படும் அம்சம், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனின் அயராத உழைப்பு. மருத்துவப் பணியை ஒதுக்கிவைத்துவிட்டு, முழுநேரக் கட்சிப்பணிக்கு வந்த பிறகு, ஓய்வின்றி சுற்றிச் சுழன்றுவருகிறார்.

``இயல்பாகவே ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு வேலைப்பளு அதிகம். அதிலும் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் குழந்தைகள், கணவர், மாமனார், மாமியார் எனக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டுத்தான் வீட்டைவிட்டே கிளம்ப முடியும். மருத்துவப் பணியில் இருந்தபோது, அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்வேன். ஆனால், பொதுவாழ்க்கைக்குள் வந்துவிட்ட பிறகு சாப்பிடக்கூட நேரம் இல்லை. நேரத்துக்குச் சாப்பிட முடியாததனாலேயே அதிக எடை போட்டுவிட்டேன். அந்த வகையில், ‘வெயிட்டான தலைவர்’ நான்.’’ - சுய எள்ளலோடு பேச ஆரம்பிப்பவருக்கு, புத்தக வாசிப்புதான் மிகப்பெரிய பொழுதுபோக்காம்.

‘’சிறு வயதிலிருந்தே வாசிப்புதான் என்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. பகலில் தூங்கும் பழக்கம் இல்லையென்றாலும்கூட, மதிய உணவுக்குப் பிறகு கொஞ்ச நேரம் புத்தகம் வாசித்துவிட்டால், தூங்கியெழுந்த புத்துணர்வு கிடைத்துவிடும். ஒரு நாளில், சில மணி நேர இடைவேளையில், புதிது புதிதாக உடைகளை மாற்றி அணிந்துகொள்வதும் எனக்கான மிகப்பெரிய உற்சாகம். அதனால் தயாராக நான்கு செட் உடைகளை எடுத்துக்கொண்டுதான் வெளியே கிளம்புவேன். சேலைதான் பிடித்த உடை. அந்தச் சேலையின் நிறத்துக்கு ஏற்றவாறு கம்மல், செயின், வளையல் என்று விதவிதமான டெரகோட்டா ஆபரணங்களை அணிந்துகொள்வதும், தலைநிறைய மல்லிகைப் பூ சூடிக்கொள்வதும்தான் உடனடி புத்துணர்வுக்கான எளிய வழிகளாக இருக்கின்றன. மன அழுத்தமான சூழல்களில், கடைவீதிக்குச் சென்று ஷாப்பிங் செய்துவிட்டால் என் கவலையெல்லாம் ஓடிவிடும். வீடு திரும்பும்போது கைநிறைய கொண்டுவரும் பொருள்களின் எண்ணிக்கையைவைத்தே என் மன அழுத்தத்தின் அளவைத் தெரிந்துகொள்ளலாம்’’ என்பவருக்கு கார் பயணங்களின்போது சினிமா பாடல்கள் கேட்பது மிகவும் பிடிக்குமாம்.

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

``அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் கேட்பதுண்டு. வைரமுத்துவின் கருத்துகளில் எனக்கு முரண்பாடு இருந்தாலும்கூட, அவரின் பாடல் வரிகள் எப்போதுமே எனக்குப் பிடித்தவை’’ என்று புன்னகைப்பவர், தான் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளான அனுபவம் ஒன்றையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாடு முழுக்க மோடி அலை மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியிருந்தது. அப்போது ‘எம்.பி தேர்தலில் போட்டியிட்டு மோடி தலைமையிலான ஆட்சியில் பங்கேற்றுவிட வேண்டும்’ என்று ரொம்பவே ஆசைப்பட்டேன்.

‘எப்படியும் எம்.பி சீட் கிடைத்துவிடும்’ என்ற நம்பிக்கையோடு நானும், என் உறவுகளும், நட்பு வட்டங்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். ஆனால், வேட்பாளர் பெயர்ப் பட்டியலில், என் பெயர் இடம்பெறவில்லை. ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மனதளவில் சுக்கு நூறாக உடைந்து போனேன். பொதுவாக மனதை பாதிக்கக்கூடிய எந்த விஷயமென்றாலும், சில மணி நேரத்திலேயே மீண்டு வந்துவிடக்கூடியவள் நான். ஆனாலும் அன்றைய சூழல், என்னை ரொம்பவே பாதித்திருந்தது. துன்பகரமான அந்தச் சூழலிலிருந்து என்னை விடுவித்ததும்கூட ஒரு புத்தக வாசிப்புதான்.

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதிய, தன்னம்பிக்கை புத்தகத்தில் வரும் கதை அது. காளான் ஒன்று, தன் அருகிலுள்ள ஆலமர விதையைப் பார்த்து, ‘ஒரே நாளில் நான் வளர்ந்துவிட்டேன் பார்த்தாயா... நீ இன்னும் துளிர் விடவேயில்லை’ என்று ஏளனமாகப் பேசும். அடுத்தடுத்த நாள்களில், அந்த ஆலமர விதை மெள்ளத் துளிர்விட்டு, செடியாகி, காலப்போக்கில் மாபெரும் விருட்சமாகப் படர்ந்து விரிந்து நிற்கும். ஏளனம் பேசிய காளான் இருந்த இடம் தெரியாமல் எங்கோ மறைந்துபோயிருக்கும். இந்தக் கதை என்னவோ ஆலமர விதையைப்போலச் சின்னஞ்சிறிய கதைதான். ஆனாலும் கதை உணர்த்தும் தத்துவமும் தன்னம்பிக்கையும் உண்மையிலேயே விருட்சத்தைப் போன்றவை. வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களுக்கும் விடிவு உண்டு. எந்த இக்கட்டான சூழலிலும்கூட ‘இதுவும் கடந்துபோகும்’ என்று பொறுமையாக எதிர்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கான வழி!’’

‘தம்ஸ்அப்’ காட்டிச் சிரிக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism