Published:Updated:

மனநலப் பிரச்னைகளில் முதலிடத்தில் தமிழகம்... காரணங்கள், தீர்வுகள்!

தமிழகம்
தமிழகம்

தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளம், கோவா, ஆந்திரப்பிரசேதம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களும் இதே நிலையில்தான் உள்ளன. பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் தாக்கம் குறைவாக இருக்கிறது.

`லேன்செட் பப்ளிக் ஹெல்த்' இதழ் சமீபத்தில் நடத்திய ஆய்வு அறிக்கையின்படி தமிழகத்தில்தான் அதிகம் பேர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

பிரசவகால தாய்மார் இறப்பு விகிதம், பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் போன்றவற்றில் குறைவான எண்ணிக்கையுடனும், உடலுறுப்பு தானத்தில் அதிகமான எண்ணிக்கையிலும் என, ஒட்டுமொத்தத்தில் சுகாதாரக் குறியீடுகளில் மற்ற மாநிலங்களைவிட சிறப்பான முன்னேற்றங்களுடன் முன்னிலையில் இருக்கும் தமிழகம், இன்னொரு பக்கம் மனநலப் பிரச்னைகளிலும் முன்னிலையில் இருப்பது அதிர்ச்சியே.

மனநலம்
மனநலம்

கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட `லேன்செட் (The Lancet Public Health)' ஆய்வறிக்கையின்படி, மனஅழுத்தப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரு லட்சம் மக்கள்தொகையில் 3,750-க்கும் மேற்பட்டோருக்கு மனஅழுத்தப் பிரச்னை காணப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளம், கோவா, ஆந்திரப்பிரசேதம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களும் இதே நிலையில்தான் உள்ளன. பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் தாக்கம் குறைவாக இருக்கிறது. அதாவது, ஒரு லட்சம் மக்கள் தொகையில் 2,750-க்கும் குறைவானவர்களுக்கு இந்தப் பாதிப்பு உள்ளது.

அடுத்தபடியாக, மனப்பதற்றம் சார்ந்த பிரச்னைகளில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன.

ஒரு லட்சம் மக்கள்தொகையில் 3,400 முதல் 3,599 பேருக்கு இந்தப் பிரச்னை காணப்படுகிறது. மனப்பதற்றம் சார்ந்த பிரச்னைகளில் கேரளம் மற்றும் நாகாலாந்து முதலிடத்தில் உள்ளன. அந்த மாநிலங்களில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 3,600-க்கும் அதிகமானோருக்கு இந்தப் பாதிப்பு காணப்படுகிறது.

பிறவியிலேயே ஏற்படும் மனநலப் பிரச்னைகள், நடத்தை தொடர்பான குறைபாடுகள் ஆகியவை தமிழகத்தில் குறைவாகக் காணப்படுகின்றன.
டாக்டர் பூர்ணசந்திரிகா

மொத்தம் நான்கு வகை மனநலப் பிரச்னைகள் தொடர்பாக நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில் மீதம் இரண்டு வகை பாதிப்புகள் தமிழகத்தில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அதாவது பிறவியிலேயே ஏற்படும் மனநலப் பிரச்னைகள், டவுன் சிண்ட்ரோம் போன்ற பாதிப்புகளிலும், நடத்தை தொடர்பான பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற குறைபாடுகளிலும் தமிழகம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கையிலான பாதிப்பாளர்களைக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் மனஅழுத்தக் குறைபாடுகளுடன் அதிகம் பேர் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்.

டாக்டர் ஜெயந்தினி
டாக்டர் ஜெயந்தினி

``மனஅழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை நான்காகப் பிரிக்கலாம். எவ்விதக் காரணமும் இல்லாமல் மூளையில் ஏற்படும் உயிரி வேதியியல் சார்ந்த மனஅழுத்தம் (Biological Factor), தைராய்டு, மூளையில் உருவாகும் கட்டிகள், மாதவிடாய் சுழற்சிக்கு முன்பாக, குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஏற்படும் மனஅழுத்தம் போன்ற உடல்ரீதியான காரணங்கள் (Physical illness), படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமை, போதைப்பழக்கம், மதுப்பழக்கம், பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்தல் உள்ளிட்ட உளவியல் மற்றும் சமுதாயம் சார்ந்த காரணங்கள் (Psychological and social) ஆகியவை முக்கியக் காரணங்கள். இவை தவிர சில மாத்திரை, மருந்துகளாலும் மனஅழுத்தம் ஏற்படலாம்.

மனஅழுத்தமும் மனப்பதற்றமும் நெருங்கிய தொடர்புடையவை. சிலருக்கு வெறும் மனஅழுத்தம் மட்டும் ஏற்படலாம், சிலருக்கு மனப்பதற்றம் மட்டும் காணப்படலாம். சிலருக்கு இரண்டும் சேர்ந்தே இருக்கலாம்.

தமிழகத்தில் இந்த அனைத்து வகை பாதிப்புகளும் பரவலாகக் காணப்படுகின்றன. பொதுவாக, சிறுவயதிலிருந்தே மனஅழுத்தம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இருந்தாலும் அது மனஅழுத்தமாக வெளிப்படாது. கோபம், பிடிவாதம், எரிச்சலுணர்வு போன்றே வெளியில் தெரியும். பதின்பருவ வயதில் மனஅழுத்தம் இருக்கும்போது அவர்கள் நடத்தையில் மாற்றம் தெரியும். இளமைப் பருவத்தில் அது வெளிப்படத் தொடங்கும். பெரியவர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும். 18 வயது முதல் 60 வயதுவரை அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

மனஅழுத்தம்
மனஅழுத்தம்
Pixabay
தள்ளிப்போகும் மறுமணம், தற்கொலை எண்ணம்...வாசகியின் பிரச்னைக்கு நிபுணர் தீர்வு!
#LetsSpeakRelationship

தற்போது முதியோர் மத்தியில் மனஅழுத்தம் அதிகமாகக் காணப்படுகிறது. காரணம், பெரும்பாலான முதியோர்கள் தனியாக வசிக்கின்றனர். பொருளாதார ரீதியாக முதியோர் யாரையாவது சார்ந்திருப்பது, பிள்ளைகள் பராமரிக்காமல் இருப்பது, பிள்ளைகள் வெளிநாட்டில் அல்லது தூரமாக வசிப்பது, முதியோர் இல்லத்தில் வசிப்பது, மிக முக்கியமாகத் தனிமை... இவையெல்லாம் சேர்ந்து முதியவர்கள் மத்தியிலும் மனஅழுத்தத்தை அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மனஅழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு உள்ளதால் உடனடியாக மருத்துவர்களை அணுகுகிறார்கள். இதனால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்வு காண முடிகிறது. மற்றொரு புறம், வேலையில்லாத் திண்டாட்டம், குறைவான ஊதியம், சக நண்பர்களின் சமூக நிலை கண்டு ஒப்பிட்டுக்கொள்ளுதல், மதுப்பழக்கம், படிப்புக்கேற்ற வேலையில்லை என்பன போன்ற சமுதாயம் சார்ந்த பிரச்னைகள் இதற்கு முக்கியக் காரணங்களாகின்றன. தற்கொலைகள் தமிழகத்தில் அதிகம் நிகழ்கின்றன. அதற்கு முக்கியக் காரணம் இதுபோன்ற சமுதாய ரீதியான மனஅழுத்தங்கள்தான்.

Suicide
Suicide
Pixabay

தமிழகத்தில் மனஅழுத்த பாதிப்பும் அதிகமாகக் காணப்படுகிறது. அதே நேரம் மருத்துவர்களை அணுகுதலும் அதிகரித்துள்ளது. இந்த இரண்டையும் மறுக்க முடியாது" என்று கூறுகிறார் மருத்துவர் ஜெயந்தினி.

மனஅழுத்தம், மனப்பதற்றம் ஆகிய பிரச்னைகளில் முன்னிலையில் இருக்கும் தமிழகம்தான், பிற இரண்டு வகையான பாதிப்புகளில் குறைவான எண்ணிக்கையில் பாதிப்பாளர்களைக் கொண்டுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன, தமிழகத்தில் மனஅழுத்தம் தொடர்பான பிரச்னைகள் குறித்து அரசின் பார்வை என்ன என்று தெரிந்துகொள்ள தமிழ்நாடு மனநலத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பூர்ண சந்திரிகாவிடம் பேசினோம்.

Dr.Poornachandrika
Dr.Poornachandrika

தமிழகத்தைப் பொறுத்தவரை, மனநலத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எண்ணிக்கையிலும் பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மனநல மருத்துவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநலத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதனால் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிகிறது. இருப்பினும் மதுப்பழக்கம், போதைப் பழக்கம் போன்ற சமுதாயம் சார்ந்த காரணங்களும் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது" என்கிறார்.

Mental health
Mental health
Pixabay
மனஅழுத்தம், தலைவலி, முதுகுவலி... விடுப்பு எடுத்து ஓய்வெடுக்க வேண்டிய 5 உடல்நலப் பிரச்னைகள்!

மனநலப் பிரச்னை என்பது மனநலத்தை மட்டுமல்ல, உடல்நலத்தையும் பாதிக்கும். மேலும் பாதிக்கப்பட்டவரை மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். என்றாலும், உடல்நலப் பிரச்னைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பலரும் மனநலத்துக்குக் கொடுப்பதில்லை. மனநலத்தை மேம்படுத்தினால்தான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும். அரசு, மருத்துவர்கள், தனி மனிதன் என அனைத்துத் தரப்பினரின் ஒட்டுமொத்த பங்களிப்பால் இந்த நிலையை நிச்சயம் முறியடிக்க முடியும்.

அடுத்த கட்டுரைக்கு