Published:Updated:

`பூஸ்டர் தடுப்பூசி; தீவிர கண்காணிப்பு!' - இங்கிலாந்தின் ஒமிக்ரான் நிலவரம்; பகிரும் தமிழர்கள்

London
News
London

இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், இங்கிலாந்தின் தற்போதைய நிலவரம் குறித்து அங்குள்ள தமிழர்கள் சிலரிடம் பேசினோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் சிக்கித்தவித்த உலக நாடுகள், தொற்றின் வீரியம் குறையத் தொடங்கியதால் சமீப காலத்தில்தான் சற்றே நிம்மதி பெருமூச்சுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கின. இந்த நிலையில், உருமாறிய கொரோனா வைரஸாக `ஒமிக்ரான்’ என்ற புது வில்லன், உலக மக்கள் அனைவரின் பார்வையையும் தற்போது தன் பக்கம் திருப்பி திடுக்கிட வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்த கொரோனா திரிபு, இந்தியா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தனது ஆட்டத்தை வேகமாகக் காட்டிவருகிறது. இதில், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நிலைமைதான் மற்ற நாட்டினருக்கும் பீதியை அதிகப்படுத்துகிறது.

Representational Image
Representational Image

இந்தியாவைப் போலவே இங்கிலாந்திலும் இதுவரை இரண்டு அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்த மக்களை, `மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்பதுபோல வீட்டுக்குள் முடங்க வைத்திருக்கிறது கொரோனாவின் மூன்றாவது அலை. வெளிநாட்டுக்குப் பயணம் செய்தவர்கள் மூலமாக அந்த நாட்டில் நுழைந்த ஒமிக்ரான், டிசம்பர் தொடக்கம் முதல் வேகமான பாய்ச்சலைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்து பரவல் வேகம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், ``இங்கிலாந்தின் பல்வேறு பிராந்தியங்களிலும் ஒமிக்ரான் சமூகப் பரவலாக மாறிவிட்டது” என்று அதிர்ச்சியூட்டும் கள நிலவரத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இரு தினங்களுக்கு முன்புகூட புதிதாக 91,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதில், ஏறத்தாழ பத்தாயிரம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,000-ஐ கடந்துள்ள நிலையில், இந்த பாதிப்பால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒமிக்ரான் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக அந்த நாட்டின் அமைச்சரவை அண்மையில் கூடி விவாதித்தது.

Representational Image
Representational Image

இங்கிலாந்து நாட்டினருக்கு டிசம்பர் மாதம்தான் கொண்டாட்ட காலம். மற்ற பண்டிகைகளைவிடவும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அந்த நாட்டினர், குடும்பமாக வெளியிடங்களுக்குச் சென்று இந்த இரண்டு நிகழ்வுகளையும் களைகட்டச் செய்வார்கள். இந்தச் சூழலில் பொது முடக்கத்தை அமல்படுத்தினால், கொரோனா மூன்றாம் அலையால் அச்சத்திலிருக்கும் மக்களுக்குக் கூடுதலான வருத்தத்தையே அளிக்கும். எனவேதான், தொற்றின் எண்ணிக்கை உயர்ந்தாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு அமல்படுத்தாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அந்த நாட்டு அரசு மக்களிடம் வலியுறுத்திவருகிறது. நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவ்வப்போது செய்தி தொலைக்காட்சி வாயிலாக கொரோனா பரவல் குறித்து மக்களுக்கு உரையாற்றுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கிலாந்தில் 80 - 90 சதவிகிதத்தினர் ஏற்கெனவே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் பலருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்படுவதுதான் மக்களுக்குக் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, பூஸ்டர் தடுப்பூசி (மூன்றாம் தவணை) போட்டுக்கொள்ள அந்த நாட்டு அரசு கண்டிப்புடன் அறிவுறுத்துகிறது. 50 சதவிகித மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Representational Image
Representational Image

நாட்டின் தலைநகர் லண்டன் உட்பட பல பகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போதுவரையிலும் பல்வேறு நிறுவன ஊழியர்கள் இன்னும் வீட்டிலிருந்துதான் வேலை செய்கின்றனர். இரண்டாம் அலைக்குப் பிறகு, அலுவலகம் சென்று பணியாற்றி வந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்களில், வாய்ப்புள்ளவர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டதும், அந்த நாட்டுக்கான விமானப் போக்குவரத்தைத் தடைசெய்தது இங்கிலாந்து அரசு. கொரோனா பரவல் அதிகமிருப்பதால் இங்கிலாந்துக்கான பொது போக்குவரத்துக்கு இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்திருந்தாலும், தடை உத்தரவு இல்லாத இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் இங்கிலாந்திலிருந்து விமானப் போக்குவரத்து தொடர்ந்து நடைபெறுகிறது. அதேசமயம் இங்கிலாந்து விமான நிலையத்தில், விமானம் மூலமாக அந்த நாட்டுக்குள் நுழையும் மக்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கடுமையாக்கப்பட்டுள்ளது.

UK
UK

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக, இங்கிலாந்தில் வழக்கம்போலவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 3-ம் தேதியுடன் விடுமுறை காலம் முடிவடையவுள்ள நிலையில், அப்போதைய சூழலைப் பொறுத்துத்தான் கல்வி நிலையங்கள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. பண்டிகை நேரத்தில் அதிகமானோர் கூடுவதால் கொரோனா பாதிப்பு உயரக்கூடும் என்பதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் துக்குத் தடை விதிப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா பரவல் இதே நிலையில் அதிகரித்தால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு, அந்த நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு மருத்துவ வட்டாரத்தில் பேசப்படுகிறது. தற்போதைய இங்கிலாந்து நிலவரம் குறித்து அங்குள்ள தமிழர்கள் சிலரிடம் பேசினோம்.

``வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்து திரும்பியவர்கள், அடுத்த 2-ம் தினத்தில் அரசின் மருத்துவ சேவை மையத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அல்லது அவரவர் வீட்டிலிருந்தே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை எடுத்து, அதன் முடிவை அரசின் மருத்துவ சேவை மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பரிசோதனை முடிவில் லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானால் பத்து நாள்கள்வரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, முழுமையாகக் குணமானதும் வெளியிடங்களுக்குச் செல்லலாம். தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பது உறுதியானால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

Representational Image
Representational Image

இந்தியாவிலுள்ள அரசு மருத்துவமனைகள் போலவே, இந்த நாட்டில் `நேஷனல் ஹெல்த் சர்வீஸ்’ எனப்படும் அரசின் மருத்துவ சேவைகள் துறை மூலமாக மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்தத் துறை தற்போது மிகுந்த கவனமுடன் இயங்கி வருகிறது. மூன்றாம் அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை லட்சத்திலிருந்தாலும், எல்லோருக்கும் தங்கு தடையின்றி மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. நிலைமை அரசின் கட்டுக்குள் இருக்கிறது. ஒமிக்ரான் அச்சுறுத்தலால், காய்ச்சல் அல்லது ஜலதோஷம் ஏற்பட்டால் பெரும்பாலான மக்கள் உடனடியாக வீட்டிலிருந்து அல்லது அரசு மையத்துக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

வழக்கமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும், ஒமிக்ரான் பாதிப்பு இருப்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறைதான் மேற்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்தில் கொரோனா பரிசோதனை முறையாக நடைபெறுவதாகச் சொல்லப்படுவதால், கொரோனா பாதிப்பு இருப்பது ஒளிவுமறைவின்றி உறுதிசெய்யப்படுவதாகவும், இதனால்தான் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதுபோல தெரிவதாகவும் அரசு கூறுகிறது. இதுவரை லாக்டெளன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. ஆனாலும், அரசின் அறிவுறுத்தலை ஏற்று, பெரும்பாலானோர் தேவையின்றி வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கிறோம்.

Representational Image
Representational Image

பாதுகாப்பு கருதி, பொது இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்கிறோம். கட்டாயமாக மாஸ்க் அணிவதுடன், வெளி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் முன்பு கோவிட் டெஸ்ட் எடுத்துக் கொள்ளவும் அரசு கண்டிப்புடன் வலியுறுத்துகிறது. வழிபாட்டுத்தலங்கள், சந்தைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் வழக்கம்போலவே இயங்குகின்றன. உள்நாட்டுக்குள் பொதுப் போக்குவரத்து எப்போதும்போலவே நடைபெறுகிறது. கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்ட மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு ஒமிக்ரான் பாதிப்பால் மக்களின் உற்சாகம் வெகுவாகக் குறைந்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், நிலைமையைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று கலக்கத்துடன் முடித்தனர்.