Published:Updated:

தாம்பத்யத்துக்கு `நோ’, நிறம் மாறும் உடல், மனஅழுத்தம்... பிரசவம் பெண்களுக்கு உண்டாக்கும் 10 மாற்றங்களும் தீர்வுகளும்! #Motherhood #Postpartum

பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் 10 மாற்றங்கள் - எதிர்கொள்வது எப்படி?

ஈரைந்து மாதங்கள் குழந்தையைச் சுமந்து, தன் உயிரை ஊணாக்கி குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் பெண். ஒரு பெண் கருவுற்றதும் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கும். அந்தப் பெண்ணை எல்லோரும் தாங்குவார்கள். பிரசவம் முடிந்து புதிய உயிர் உலகை எட்டிப்பார்த்ததும், அனைவரின் கவனமும் குட்டிக் குழந்தையின் பக்கம் போய்விடும். இரவில் எழுந்து குழந்தைக்கு பால் புகட்ட வேண்டும், ஈரமான டயாப்பரை மாற்ற வேண்டும், அழுதால் எழுந்து கவனிக்க வேண்டும் என மருத்துவர் முதல் குடும்பம்வரை அனைவரும் குழந்தையைக் கவனிப்பதைப் பற்றியே 'அட்வைஸ்' வழங்குவார்கள்.

குழந்தையைக் கவனிப்பது மிகவும் அவசியமானதுதான். ஆனால், 10 மாத கர்ப்ப காலத்தைக் கடந்து வந்துள்ள தாயின் உடல்நிலையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அவற்றையும் சற்று கவனிக்கவேண்டியது அவசியம். பிரசவித்த பெண்கள், தங்கள் உடல்நலனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் இவை...

2
Favourite dress ( Pixabay )

ஃபேவரைட் டிரெஸ் - கொஞ்சம் வெயிட்டீஸ்!

கர்ப்பமானதும் வயிறு பெரிதாகத் தொடங்கியதால், பிடித்தமான ஆடையை அணிய இயலாமல் அதை வார்ட்ரோபில் பத்திரப்படுத்தியிருப்பீர்கள். குழந்தை பிறந்ததும் மீண்டும் அந்த ஆடையை அணியலாம் என்று நினைத்திருப்பீர்கள். குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை சுருங்கி மீண்டும் இயல்பு நிலைக்குச் செல்வதற்கு 6 முதல் 8 வாரங்கள் ஆகலாம். கர்ப்பகாலத்தில் உடலின் எடை அதிகரித்திருக்கக்கூடும் என்பதால், வயிற்றுப் பகுதியிலும் எடை அதிகரித்திருக்கும். அதனால் உங்கள் ஃபேவரைட் உடையை அணிவதற்கு இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் எடையும் குறையும். கர்ப்பப்பை சீக்கிரம் சுருங்குவதற்கான ஹார்மோன் உற்பத்தியாகும்.

3
பிரசவம் தரும் மனஅழுத்தம் ( Freepik )

ஹார்மோன் மாற்றம் அலெர்ட்!

எந்தப் பருவநிலையில் குழந்தை பெற்றிருந்தாலும், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் தாறுமாறாக நடந்து உடலைக் குழப்பமான நிலையிலேயே வைத்திருக்கும். குளிர்காலத்தில்கூட உடலில் திடீரென்று வெப்பம் பரவுதல் (Hot Flashes) ஏற்படும். புரோலாக்டின் ஹார்மோன் அதிகரித்தல், புரோஜெஸ்டீரான், டோபாமைன் ரசாயனங்களின் அளவு குறைதல் போன்ற பல்வேறு மாற்றங்களால் உடல் எப்போதும் உற்சாகமற்றுக் காணப்படும். பல பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு 'போஸ்ட்பார்ட்டம் புளூஸ் (Postpartum Blues)' ஏற்படலாம். இதனால் பிரசவத்துக்குப் பிறகு தனிமை, பயம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பிரச்னை அதிகபட்சம் 6 வாரங்களுக்கு நீடிக்கும். இதற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படாது, தானாகவே சரியாகிவிடும்.

ஆனால், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் 'போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் (Postpartum Depression)' ஹார்மோன்களின் சமச்சீரின்மையால் ஏற்படுகிறது. குழந்தை பெற்ற பத்தில் ஒரு பெண்ணுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷனுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.

4
Breast Feeding ( Pixabay )

மார்பகங்களில் மாற்றம்!

குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பால் புகட்டுவதற்காக உடல் தானாகவே தயாராகும். அதனால் பெண்ணின் மார்பகங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். மார்பகங்கள் பெரிதாகவும் உறுதியானதாகவும் மாறும். குழந்தைப்பேறு அடைந்த சமயத்தில் இந்த மாற்றத்தை அதிகம் விரும்புவீர்கள். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் மார்பகங்களில் தொய்வு ஏற்படும். அடுத்தடுத்த பிரசவங்களில் மார்பகங்களின் தொய்வு அதிகரித்துக்கொண்டேயிருக்கும்.

5
Mensuration ( Freepik )

மாதவிடாய்க்கு வெல்கம்!

கர்ப்ப காலம் என்பது எளிதானதல்ல. ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பெண்களுக்கு சற்று ஆறுதல் கிடைக்கும். மாதந்தோறும் வரும் விருந்தினர், 9 மாதங்களுக்கு உங்கள் பக்கமே எட்டிப்பார்க்க மாட்டார். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு வெறித்தனமாக உங்களைப் பார்க்க வருவார். அந்த விருந்தினர் வேறு யாருமல்ல, மாதவிடாய்தான். பிரிக்கப்பட்ட நஞ்சுக்கொடியில் இருக்கும் காயத்தினால், சுமார் 6 வார காலம்வரை மாதவிடாய் ஏற்படலாம். அதனால் சானிடரி நாப்கினோடு விருந்தினரை வரவேற்கத் தயாராகுங்கள்!

6
linea nigra

நிறம் மாறும் உடல்!

தொப்புளிலிருந்து அடிவயிற்றுப் பகுதிவரை கோடு போட்டது போன்ற ஒரு தோற்றம் இருக்கும். கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் மாற்றத்தில் அந்தக் கோடு மேலும் அடர்ந்த நிறமாக மாறும். இதே ஹார்மோன் மாற்றத்தால், சில பெண்களுக்கு முலைக் காம்புகளும் அடர் நிறத்தில் மாறும். சிலருக்கு முகத்தில் திட்டுத் திட்டாக கருமை படரும். பிரசவத்துக்குப் பிறகு ஆறு மாதங்களில், இவை அனைத்தும் குறையத் தொடங்கும். சிலருக்கு மொத்தமாகக்கூட நீங்கிவிடும்.

7
Short tops ( Pixabay )

அடிவயிற்றில் சரும மாற்றங்கள்!

பிரசவ காலத்தில் சிலருக்கு தொப்புள் பகுதி தட்டையாக அல்லது உள்ளிருந்து வெளியே தள்ளிக்கொண்டிருப்பதைப் போல மாறலாம். பிரசவம் முடிந்த பல வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும்.

8
hair loss ( Pixabay )

உதிரும் கூந்தல்!

பளபளக்கும் சருமம், ஜொலிக்கும் கூந்தல் ஆகியவை கர்ப்ப காலத்தின் பாசிட்டிவ் விஷயங்கள். பொதுவாக கர்ப்ப காலத்தில் முடி உதிர்வுப் பிரச்னை இருக்காது. ஆனால், குழந்தை பிறந்துவிட்டால் தலையணையிலிருந்து வீட்டுக் குளியலறைவரை எங்கு நோக்கினும் உதிர்ந்த முடிகள் தென்படும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முடி வளர்வதைத் தூண்டி, முடி உதிர்தலைத் தடுக்கும். பிரசவத்துக்குப் பிறகு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு குறைவதால், முடி உதிர்தல் பிரச்னை மீண்டும் ஏற்படும்.

9
Romance ( Pixabay )

தாம்பத்யத்துக்கு நோ!

குழந்தை பிறந்த சில வாரங்களுக்கு தாம்பத்யத்தில் ஈடுபாடு ஏற்படாது. 24 மணி நேரமும் குழந்தையின் அருகில் நீங்கள் இருக்க வேண்டும் என்பது மட்டும் இதற்கான காரணமல்ல. பிரசவத்துக்குப் பிறகு குறையும் ஈஸ்ட்ரோஜென் அளவு, குழந்தையின் சிணுங்கலில் தொலையும் உங்கள் இரவுத் தூக்கம் இரண்டும், உங்களை தாம்பத்யத்திலிருந்து விலக்கிவைக்கும். கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் வறட்சி, வலி, ரத்தக்கசிவு போன்றவையும் தாம்பத்யத்தைட் தூரமாக்கும்.

10
shoe size ( Pixabay )

செருப்பின் அளவு மாறலாம்!

கர்ப்பகாலத்தில், பெண்கள் 15 கிலோவரை எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரிலாக்ஸின் என்ற ஹார்மோன் சுரப்பால் உடலில் உள்ள தசைநார்கள் தளர்வடையும். இதனால் சிலருக்கு பாதத்தில் அழுத்தம் அதிகரித்து, பாதத்தில் காணப்படும் வளைவு சற்று தட்டையாக மாற வாய்ப்புள்ளது. இதனால் செருப்பு அல்லது ஷூவின் அளவு நிரந்தரமாக மாறலாம்.

11
Stomach pain ( Pixabay )

வயிற்று வலி!

கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் (last trimester) குழந்தை வளர்வதற்கேற்ப கர்ப்பப்பையின் அளவு பெரிதாவதால் வயிற்றுவலி ஏற்படும். பிரசவத்துக்குப் பிறகு மீண்டும் கர்ப்பப்பை இயல்பான அளவுக்குச் சுருங்கும் என்பதால், மீண்டும் வயிற்றில் வலி ஏற்படும். சில பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது இந்த வலியை உணர்வார்கள்.

உடலில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும், பெண்ணுக்கு கர்ப்ப காலம் என்பது மகிழ்ச்சியின் எல்லைக்கே அவளை இட்டுச்செல்லும் காலம். குழந்தை பிறப்புக்குப் பிறகு ஏற்படும் அத்தனை மாற்றங்களையும் அசௌகர்யங்களையும் தாய்மையின் பூரிப்போடு கடந்துசெல்லுங்கள் பெண்களே!

குழந்தையின் எதிர்கால ஆரோக்கியம் அம்மாவின் கர்ப்ப காலத்தைப் பொறுத்தது! - இப்படிக்கு... தாய்மை - 7
அடுத்த கட்டுரைக்கு