Published:Updated:

தமிழகத்தில் நம்பர் 1; தனியாரை விஞ்சியது!-100 ஆண்டுகளைக் கடந்து சாதிக்கும் தஞ்சை அரசு கண் மருத்துவமனை

தஞ்சாவூரில், 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசு கண் மருத்துவமனை, இந்த வருடத்தில் கண்புரை அறுவை சிகிச்சையில் தமிழக அளவில் முதலிடம்பிடித்து அசத்தியுள்ளது.

கண் சிகிச்சையில்
கண் சிகிச்சையில் ( ம.அரவிந்த் )

முதல் உலகப்போரின் முடிவில் தொடங்கப்பட்ட தஞ்சாவூர் அரசு கண் மருத்துவமனை, 100 ஆண்டுகளைக் கடந்து பலருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றிக்கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தில் 4,000 நபர்களுக்கு மேல் கண்புரை அறுவைசிகிச்சை செய்து, தமிழக அளவில் முதலிடம்பிடித்து அசத்தியிருப்பதுடன், தனியார் மருத்துவமனைக்கு இணையாகச் செயல்பட்டுவருவதாக டாக்டர்கள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

அரசு கண் மருத்துவமனை
அரசு கண் மருத்துவமனை

தஞ்சாவூரில் இராசா மிராசுதார் என்ற பெயரில் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது, அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில், மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு, கண் மற்றும் பல் சிகிச்சைக்கான பிரிவுகள் தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் கண் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

அத்துடன் 2018-19-ம் ஆண்டுக்கான அறுவைசிகிச்சையில், அதிக அளவிலான கண்புரை அறுவைசிகிச்சை செய்து அசத்தியிருக்கின்றனர், இங்கு பணிபுரியும் டாக்டர்கள். இதனால் மருத்துவக் கல்லூரியின் கீழ் செயல்படும் அரசு கண் மருத்துவமனைகளில் தமிழக அளவில் முதலிடம்பிடித்து, தனியார் மருத்துவமனைக்கு இணையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என கண் டாக்டர்கள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை
சிகிச்சை

இதுகுறித்து கண்சிகிச்சைப் பிரிவின் துணைத்தலைவரும், பேராசிரியருமான ஞானசெல்வனிடம் பேசினோம். ``சென்னை எக்மோரில் உள்ள அரசு கண் மருத்துவமனை, இந்திய அளவில் முதலாவதாகவும், உலக அளவில் இரண்டாவதாகவும் தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. அதேபோல் இந்தக் கண் மருத்துவமனை, தமிழக அளவில் இரண்டாவதாக, எக்மோர் கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாகத் தொடங்கப்பட்ட சிறப்புக்குரிய கண் மருத்துவமனையாகும்.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு, அதன் அமைதியை உணர்த்தும் வகையில் 1919-ம் ஆண்டு இந்தக் கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. தற்போது, கண் புரை அறுவை சிகிச்சை, கருவிழி, கண் அழுத்த நோய், விழித்திரை, கண் வங்கி போன்ற பிரிவுகள் இதில் செயல்பட்டுவருகிறது. தொடக்கத்தில் 50 பேரிலிருந்து நூறு பேர் வரை சிகிச்சைக்கு வந்தனர். பின்னர், சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது.

கல்வெட்டு
கல்வெட்டு

தற்போது, தினமும் 400 பேர் வரை கண் சிகிச்சைக்காக வருகின்றனர். இதில், புரை நோய் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கக்கூடிய விழித்திரை பாதிப்புகள் உள்ளவர்களே அதிக அளவில் வருகிறார்கள். இந்த ஆண்டு 4,000 நபர்களுக்கு மேல் கண்புரை அறுவைசிகிச்சை செய்து தமிழக அளவில் முதலிடம் பிடித்ததுடன், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நபர்களுக்குக்கூட, இங்கு சிகிச்சை அளித்து கண் பார்வை குறைபாட்டை சரிசெய்திருக்கிறோம். மேலும், இந்த கண் மருத்துவமனை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதற்கான விழாவை வரும் டிசம்பர் மாதம் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறோம்'' என்றார்.

இணைப் பேராசிரியர் அமுதவடிவிடம் பேசினோம். ''14 வயது நிரம்பிய மாணவி ஒருவர், கண்ணில் பிரச்னை ஏற்பட்டு, முடியாத நிலையில் எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார். சோதனை செய்ததில், அந்த மாணவிக்கு கண்ணில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கட்டி இருந்த கண்ணை அகற்றிவிட்டோம். அகற்றவில்லை என்றால், அந்த மாணவியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். இன்று, அந்த மாணவிக்கு ஒரு கண் நன்றாகத் தெரிவதுடன் ஆரோக்கியமாக இருக்கிறார். இதுபோல், இக்கட்டான சூழ்நிலையில் வந்த பலருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கிறோம்.

டாக்டர்கள் குழு
டாக்டர்கள் குழு

கண் தானம் மூலம், இறந்தவர்களின் கண்ணை எடுத்து பாதுகாக்க கண் வங்கி இருக்கிறது. அப்படி வந்த கண் மூலம் ஒரு வருடத்திற்கு 50 பேருக்கு கண் பொருத்தி பார்வைபெற வைத்திருக்கிறோம். பார்வை வந்த பிறகு, வாழ்க்கையில் ஒளி ஏற்றிவிட்டதற்கு நன்றி என அவர்கள் நெகிழ்ச்சியோடு கூறுவார்கள். 'இது எங்களுடைய கடமைதான். கண் தானம் செய்தவர்களுக்குத்தான் இந்த நன்றி போய்ச் சேரும்' எனக் கூறி அனுப்பி வைப்போம். கண் தானம் செய்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் கண் தேவைப்படுபவர்கள், இந்த உலகைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தோடு அதிக அளவில் காத்திருக்கின்றனர். அதனால் முகம் தெரியாத பலர் இந்த உலகைக் காண, அனைவரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும். இது, அவசியமான ஒன்று'' என்றார்.

மேலும் சிலரிடம் பேசினோம். ``நூற்றாண்டை கடந்து செயல்படும் இந்த மருத்துவமனைக்கு போதிய இட வசதி இல்லை. புதிய கட்டடம் கேட்டு பல வருடங்களாக காத்திருந்தும் அரசு இதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. தினமும் 500 பேருக்கு மேல் சிகிச்சைக்காக வருகின்றனர் ஆனால் டாக்டர்கள் எட்டு பேர் மட்டுமே இருக்கின்றனர். இதனால் டாக்டர்கள் பற்றாக்குறை பெருமளவில் இருப்பதால் இங்கு வரும் ஏழை மக்கள் பலமுறை அலைந்த பிறகே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை
சிகிச்சை

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு தேவையானவற்றை அரசு நிறைவேற்றி தந்தால் இந்த கண் மருத்துவமனை இன்னும் பல சாதனைகளை புரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் நூறு ஆண்டை கடந்த இந்த மருத்துவமனையினை கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக நிர்வாகத்தின் சார்பில் முயற்சி செய்தனர். ஆனால் டாக்டர்கள் குறைபாடு, நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டனர். அரசு இதில் அக்கறை காட்டியிருந்தால் இந்த கண் மருத்துவமனை கின்னஸ் புத்தகத்தில் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். அதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி இடம் பெற்றால் அது அரசுக்குத்தானே பெருமை'' என்றனர்.