Published:Updated:

கொள்ளை நோய்கள்... இதற்கு முன்பும் இப்படித்தான் மீண்டோம்!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

நலம்

கொள்ளை நோய்கள்... இதற்கு முன்பும் இப்படித்தான் மீண்டோம்!

நலம்

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா
‘கோவிட்-19 கொரோனா வைரஸால் இன்னும் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படப்போகிறதோ... எப்படி இதிலிருந்து மீளப்போகிறோமோ..?’ என்று தினம் தினம் சிந்தித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் நாம் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா போன்ற ஓர் உலகளாவிய தொற்றுநோய் நமக்குப் புதிதல்ல. இதற்கு முந்தைய காலகட்டங்களில் அம்மை, காலரா, ஃப்ளு காய்ச்சல் என்று எத்தனையோ உயிர்க்கொல்லித் தொற்றுநோய்களை யெல்லாம் கடந்து வந்திருக்கிறோம். எனவே. தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனாவிலிருந்தும் நாம் விரைவில் மீண்டெழுவோம்.

கொரோனா
கொரோனா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு முன்னர் ஏற்பட்ட கொள்ளை நோய்களிலிருந்து மீண்ட அனுபவங்களை, கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக, சித்த மருத்துவம் செய்துவரும் சித்த மருத்துவர் சின்னப்பிள்ளை பகிர்ந்துகொள்கிறார். “தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து நாம் அனைவரும் அஞ்சிக்கொண்டிருக்கிறோம். ஆனால், `நமக்கு முந்தைய தலைமுறையினர் பார்க்காத வீரியமிக்க நோய்களே இல்லை’ எனலாம். அம்மை, காலரா போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட்ட காலத்தில் மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்துவிழுவார்கள். இப்போதிருப்பது போன்ற மருத்துவ வசதி எதுவும் அன்றைய காலகட்டங்களில் இல்லை. ஆனாலும் அவற்றிலிருந்து நாம் மீண்டுதான் வந்திருக்கிறோம். இப்போது கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நாம் வீட்டிலேயே இருக்கும்படி வலிந்து தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம். அந்தக் காலத்திலும் இது இருந்தது. ஆனால், மக்களை யாரும் வலிந்து தனிமைப்படுத்தவில்லை. `எங்கே நோய் நமக்கும் தொற்றிக்கொள்ளுமோ’ என்ற பயத்தில் மக்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். அதனால் நோய்த்தொற்று ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், அப்போதைய உணவுமுறை மக்கள் நோயிலிருந்து மீண்டு வந்ததற்கு முக்கியமான காரணம். ‘உணவே மருந்து’ என்ற அடிப்படையில் இருந்தது அவர்களின் உணவுமுறை. பெரும்பாலும் மருத்துவ குணமிக்கப் பொருள்களை உணவில் சேர்த்துக்கொண்டார்கள். நம் நாட்டிலிருந்த மூலிகைச் செடிகளைக்கொண்டே மருந்து தயாரித்தார்கள். காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றுக்குத் தனித்தனியே மாத்திரைகள் இப்போதுதான் வந்திருக்கின்றன. மாத்திரைகள் அதிகமாகப் புழக்கத்தில் இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலுக்கெல்லாம் தங்கள் அஞ்சறைப்பெட்டியில் இருந்த கருமிளகு, மஞ்சள், சீரகம் ஆகியவற்றையே மருந்துகளாக எடுத்துக்கொண்டனர்.

கொரோனா
கொரோனா

இப்போது ஏற்பட்டிருப்பதுபோல, சுவாசம் தொடர்பான ஏராளமான நோய்கள் அப்போது ஏற்பட்டபோது சித்த மருத்துவ முறைகளைக்கொண்டு மக்கள் அவற்றிலிருந்து மீண்டு வந்தனர். சுவாசம் தொடர்பான நோய்களுக்கு ‘வெற்றிலை கஷாயம்’ ஒரு நல்ல மருந்து. இரண்டு வெற்றிலை, ஒரு தேக்கரண்டி கருமிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம் இவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்கவிட்டு, பிறகு ஆறவைத்து, வடிகட்டிய நீரை அனைத்து வயதினரும் குடிக்கலாம். வெற்றிலையும் மிளகும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு அருமருந்து. மேலும், இந்த வெற்றிலை கஷாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றும் சுவாசம் தொடர்பான நோய் என்பதால் வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய இந்த வெற்றிலை கஷாயத்தை தயாரித்து அருந்தலாம். இது கொரோனா தொற்றைக் குணப்படுத்தும் என்று புரிந்துகொள்ளக் கூடாது. நம் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து, தொற்று ஏற்படாமல் தடுக்க தற்காப்பாக இதைப் பயன்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொள்ளை நோய்கள்... இதற்கு முன்பும் இப்படித்தான் மீண்டோம்!

அரசு அறிவுறுத்தும் ஊரடங்கு, பரிசோதனைகள், சிகிச்சைகளைத் தவறாமல் அனைவரும் பின்பற்ற வேண்டும். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் பெரிய மருத்துவ வசதிகள் இல்லாத போதிலும், தங்களுக்கு வந்த நோயை எதிர்த்து மீண்டு வந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்... நம்பிக்கை. எனவே, நாமும் தகுந்த மருத்துவச் சிகிச்சைகள், சுகாதாரத் தற்காப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதுடன், `நிச்சயம் விரைவில் நாம் இந்தத் தொற்றிலிருந்து மீண்டு வருவோம்’ என்று நம்புவோம். நிச்சயம் மீள்வோம்’’ என்றார் சித்த மருத்துவர் சின்னப்பிள்ளை.

"பயம் நல்லது... பதற்றம் ஆபத்தானது!"

சித்த மருத்துவர் கு.சிவராமன்

``இன்றைக்கு கொரோனாவுக்குச் சொல்லப்படும் வீட்டுக்குள் முடங்குதலைத்தான் கடந்தகாலக் கொள்ளைநோய்களைக் கையாளவும் நம் மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இருப்பினும், இன்றைக்கு இருக்கும் அளவுக்கு அன்றைக்குக் கெடுபிடிகளோ, அரசு அறிவிப்புகளோ இருந்ததில்லை. சமூகப் புரிந்துணர்வோடு, மக்கள் சுயமாக முடிவெடுத்து நோயாளிகளைத் தற்காத்து நோய் பரவுவதைக் குறைத்திருக்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமானது என்பதைச் சொல்கிறேன்.

கொள்ளை நோய்கள்... இதற்கு முன்பும் இப்படித்தான் மீண்டோம்!

எப்போதுமே தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை இறைவனோடு இணைத்துப் பேசுவது மனித இயல்பு. அந்த வகையில் வேகமாகப் பரவிய, மரண விகிதம் அதிகமாக இருந்த அம்மை, பொன்னுக்கு வீங்கி, காலரா போன்ற நோய்களை நம் மக்கள் வெகு இயல்பாக இறைவனோடு தொடர்புபடுத்திக்கொண்டனர். அந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கெனத் தனி கவனம் எடுத்து, அவர்களை அவரவரின் வீட்டுக்குள் முடக்கி, தனியே வைத்து கவனித்துக்கொண்டார்கள். நோய் குணமாகும்வரை நோயாளி மற்றும் அவரின் குடும்பத்தினரை ஊர் மக்கள் பொது இடங்களுக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதேநேரம், அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து வாழ்வியல் தேவைகளையும் விஷயங்களையும் ஊர் மக்களே ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார்கள்.

ஒருவேளை நோய் குறிப்பிட்ட ஊர் முழுக்கப் பரவிவிட்டால், அந்த ஊர் முழுக்கவே முடங்கிவிடும். அந்த மக்கள் அனைவரும் பக்கத்து ஊர்க்காரர்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்வார்கள். இது ஒருவகையில் நோய் மீதான பயம்தான். என்றாலும், இதையும் பாசிடிவ்வாகவே கையாண்டிருக்கிறார்கள் நம் மூதாதையர். இன்றைக்கு கோவிட்-19 கொரோனாவில் அதிகம் பேர் வெளியில் போவதைப் பார்க்கும்போது, `இவர்களுக்கு பயம் இல்லையோ...’ என்று நமக்குத் தோன்றலாம். உண்மையில், அந்தக் காலத்தைவிட இப்போதுதான் மக்களுக்கு அதீத பயம் இருக்கிறது. அதீதமானவை அனைத்துமே பதற்றத்தை உருவாக்கி, நிதானமிழக்கச் செய்துவிடுபவை.

மஞ்சள்
மஞ்சள்

அன்றைய மக்கள் பயம் காரணமாகப் பகுத்தறிவோடு சுய சுத்தத்தைப் பின்பற்றினர், கிருமிநாசினிகளான மஞ்சள் மற்றும் வேப்பிலைகளைப் பயன்படுத்தினர். இன்னும் அவர்கள் செய்த அனைத்தும் வீட்டுக்குள் செய்துகொள்ளப்படும் குறைந்தபட்ச சித்த மரபு தற்காப்பு முறைகள். பிரச்னை தெரியவந்தால், அடுத்தகட்ட பாரம்பர்ய மருத்துவச் சிகிச்சைகளுக்கு அவர்கள் தயாராகிவிடுவார்கள். இன்றைக்கு உள்ளவர்கள் பயத்துக்கும் ஒருபடி மேலே போய், பதற்றமாகி கபசுரக் குடிநீரைத் தற்காப்பு என நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் முடங்குதலைத் துச்சமாக நினைத்து, வீட்டைவிட்டு வெளியே வந்து கஷாயத்தைப் பெற முயல்கின்றனர். சிலர் அறிகுறிகளுக்குச் சுயமருத்துவம் செய்கின்றனர். பயம் நல்லது. ஆனால், பதற்றம் ஆபத்தானது!

எந்தவொரு நோயுமே ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்குப் பரவுகிறது என்பதை வைத்துத்தான் அதன் தீவிரத்தன்மை அமையும். அந்த விகிதம் குறையக் குறைய, நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும். இதையே தலைகீழாகவும் சொல்லலாம். அதாவது, நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தால், பரவும் விகிதம் குறைந்துவிடும். இவை இரண்டுக்குமே அடிப்படை நோயாளி மீதான தனித்த கவனமும், சுய தற்காப்பும்தான். அதற்காகத்தான், அந்தக் காலத்தில் நோய்ப் பரவுதலின்போது பிரத்யேக, தனித்த வாழ்வியலை சமூகப் புரிந்துணர்வோடு மக்கள் பின்பற்றியிருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட கொள்ளைநோய்களில் பெரும்பாலானவை பேண்டெமிக்காக (உலகளாவிய பெருந்தொற்றாக) இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அவை யாவும் அந்த நேரத்தின் தீவிர எபிடெமிக்காகத்தான் (குறிப்பிட்ட இடத்தில் வேகமாகப் பரவும் நோய்த்தொற்று) இருந்துள்ளன. எபிடெமிக் நோய்களுக்கும் முடங்குதலும் முறையான மருத்துவ ஆலோசனையும் அவசியமாக இருந்திருக்கின்றதென்றால், பேண்டெமிக் நோய்களுக்கு உடனடி முடங்குதல் எவ்வளவு அவசியமாக இருக்கும் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்! மொத்தத்தில் கோவிட் - 19 கொரோனா பரவுதலின்போதும், நம் பாரம்பர்ய வழிமுறையான, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்போம். அதுதான் நம்மை இப்போதைக்குக் காக்கும்!” என்றார் அக்கறையுடன்.

அடுத்துவரும் நாள்களில் உடலால் விலகியே இருப்போம் மக்களே... மீள்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism