காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்புகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 217 காசநோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த விகிதத்தை 2025-ம் ஆண்டுக்குள் 44 காசநோயாளிகளாக குறைக்கும் இலக்கை நோக்கிச் சிறப்பாகச் செயல்பட்டு, காசநோய் விகிதத்தை 40 சதவிகிதமாகக் குறைத்த தமிழகத்தின் முதன்மை மாவட்டம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது நீலகிரி மாவட்டம். நீலகிரி காசநோய் பிரிவின் துணை இயக்குநருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து நீலகிரி மாவட்ட காசநோய் துணை இயக்குநர் சக்திவேல் பேசுகையில், "நீலகிரியில் 2021-ம் ஆண்டில் 8138 காசநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 189 காசநோயாளிகளே இருந்தனர். காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு 2021-ம் ஆண்டில் பெரியவர்களுக்கு முதல் இரண்டு மாதங்களுக்கு 2466 மருந்துகளும், அடுத்த 4 மாதங்களுக்கு 1345 மருந்துகளும், குழந்தைகளுக்கு 160 மருந்துகளும், அடுத்த 4 மாதங்களுக்கு 117 மருந்துகளும் அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. தனியார்த்துறை மருந்தகம் மூலம் 1175 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. காசநோய் பரிசோதனைகள் மற்றும் காசநோய்க்கான மருந்துகள் விற்பனை ஆகியவற்றை கணக்கிட்டு தரவுகள் விருதுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் 40% இலக்கை எட்ட, வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளோம். ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.ஆர்.டி தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி காசநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில அரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி இருக்கிறது. நடப்பு ஆண்டில் காசநோய் பரிசோதனைகளை இன்னும் அதிகரித்து காசநோயாளிகளை கண்டறிந்து அடுத்த இலக்கான தங்கப்பதக்கத்தை பெறுவதற்கான நடவடிக்கைகள், மாவட்ட கலெக்டர் தலைமையில் நீலகிரி மாவட்ட அனைத்து மருத்துவத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே காசநோய் இல்லாத முதல் மாவட்டமாக நமது நீலகிரி மாவட்டத்தை பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.